Published:Updated:

சின்ன வெங்காயம் சோகம்!

வீழ்ந்தது விலை.... பொங்கியது கண்ணீர்...கே.கே.மகேஷ்படங்கள் : பா.காளிமுத்து

##~##
டமாவட்ட விவசாயிகளை 'தானே’ புயல் உலுக்கியதைப் போல, தென்மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது, வெங்காய விலை. மதுரை, விருதுநகர், திருநெல்வெலி, தூத்துக்குடி... போன்ற மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நல்ல விளைச்சல் கிடைத்தும், விலை இறங்கிப் போனதால் பரிதவித்துக் கிடக்கிறார்கள், விவசாயிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 மதுரையின் வெங்காய மார்க்கெட்டான கீழ மாரட் வீதியில், சில்லரை விலையில் ஒரு கிலோ வெங்காயம் 9 ருபாய். ஆனால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் விலையோ... மூன்று ரூபாய்!

''ஒரு ஏக்கர் புஞ்சையில உள்ளி (சின்ன வெங்காயம்) போட்டிருந்தேன். நல்ல மகசூல் பிடிச்சுருந்தது. 'இந்த வருஷம் கடன் பூரா அடைச்சிரலாம்’னு கனா கண்டுக்கிட்டிருந்தேன். ஆனா, வியாபாரி சொன்ன விலையைக் கேட்டதும், வெங்காயத்தை அப்படியே உழுது மண்ணுக்கு உரமாக்கிடலாம்னு தோணிடுச்சு. அந்த அளவுக்கு அடிமாட்டு விலை.

சின்ன வெங்காயம் சோகம்!

புரட்டாசி கடைசியில, ஒரு மூட்டை (60 கிலோ) விதை வெங்காயம் 1,300 ரூபாய்னு, 14 மூட்டை வாங்கி விதைச்சேன். அதுவே 18 ஆயிரத்து 200 ரூபா. உழவு, பாத்தி, விதைக்க, உரம் வைக்க, களையெடுக்கனு மொத்தமா நாப்பதாயிரம் ரூபாய்க்கு மேல செலவு ஆகியிருக்கு. இப்ப, மொத்தமும் போச்சு'' என்று சோகம் பொங்கினார், ஸ்ரீவில்லிபுத்தூர், குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த போஸ்.

அதே ஊரைச் சேர்ந்த கணேசன், ''தண்ணிப் பிரச்னை, ஆள் பிரச்னைனு விவசாயமே கஷ்டமான விஷயமா போயிடுச்சு. அதனாலதான் குறுகிய காலப் பயிர்னு வெங்காயம் போட்டோம். ஏக்கருக்கு எழுபது மூட்டை அளவுக்கு விளைச்சல் கிடைச்சுருக்கு. ஆனா, மூட்டைக்கு 180 ரூபாதான் விலை சொல்றாங்க. விதைச் செலவுக்குக் கூட காணாது.

அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கறதுக்கு ஏற்பாடு செய்யணும். அநியாயமா விலை இறங்கறதுக்கும் ஒரு முடிவு கட்டணும். இல்லனா, நிலத்தையெல்லாம் வித்துட்டு வேற ஏதாவது வேலை வெட்டிக்குப் போக வேண்டியதுதான். விளைச்சல் இருந்தா விலை இல்ல. விலை கிடைச்சா விளைச்சல் இல்ல. எவ்வளவு நாள்தான் இப்படி ஏமாந்துட்டே இருக்கறது'' என்றார் சூடாக!

சின்ன வெங்காயம் சோகம்!

அறுவடை களத்தில் வெங்காயத்தைக் கொள்முதல் செய்து கொண்டிருந்த லெட்சுமிபுரம் வியாபாரி சுந்தரகனி, ''இந்தவாட்டி நம்ம மாநிலத்துல வெங்காய விளைச்சல் அதிகமா போச்சு. அதனால, வெளியூர்களுக்குக் கொண்டு போய் விக்க முடியலை. உள்ளூர் கமிஷன் கடைகள்லயே வெங்காயம் தேங்கிடுது. அதான் விலையும் இறங்கிடுச்சு'' என்று  சொன்னார்.

மதுரை, வெங்காய வணிகர்கள் சங்கத் தலைவர் கே. செல்வராஜிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, ''வெளிநாட்டுக்கு வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததால், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி அடியோடு நின்று போய் விட்டது.

தற்போது தடையை நீக்கி இருந்தாலும், பழையபடி ஏற்றுமதி செய்வது சிரமமாக உள்ளது. ஏனென்றால், இப்போது அந்த மார்க்கெட்டை சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகள் பிடித்துவிட்டன.

வடமாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் (பெல்லாரி) விளைச்சல் அதிகமானதால், நாடு முழுவதும் அதன் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. அதுவும்கூட சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது'' என்று காரணங்களைச் சொன்னவர்,

''விலை வீழ்ச்சிக்கு நிரந்தரத் தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் முன்வருவதில்லை. விலை வீழ்ச்சி பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் சமயங்களில் மட்டும், அரசாங்கமே கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்து, வியாபாரிகளிடம் பாதி விலைக்கு விற்கும் வேலையைச் செய்கிறது. இது மிகப்பெரிய கண் துடைப்பு வேலை. கடைசியில் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள். அதோடு, மக்களின் வரிப்பணமும் வீண். இதையெல்லாம் அரசு சரி செய்தால்தான் இப்பிரச்னை ஒழியும்'' என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தினார் செல்வராஜ்.

ம்.. விவசாயிகளை ஒழித்தாலும் ஒழிப்பார்களே தவிர, பிரச்னைகளை ஒழித்துவிடுவார்களா என்ன?