Published:Updated:

வாட்ஸ்அப் மூலம் கருப்பட்டி பால்கோவா... மதிப்புக்கூட்டலில் மாத்தியோசித்த பெண்!

எந்தப் பொருளையும் மதிப்புக் கூட்டி விற்றால், வித்தியாசமான இன்னொரு பொருள் கிடைக்கும். அந்தப் பொருள் நமக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தரும்.

வாட்ஸ்அப் மூலம் கருப்பட்டி பால்கோவா... மதிப்புக்கூட்டலில் மாத்தியோசித்த பெண்!
வாட்ஸ்அப் மூலம் கருப்பட்டி பால்கோவா... மதிப்புக்கூட்டலில் மாத்தியோசித்த பெண்!

ன்றைய தேதியில் நம் வீடுகளில் ஆக்கிரமித்துள்ள உணவுப் பொருள்களில் பெரும்பாலானவை மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட பொருள்கள்தான். ரெடிமேடாகக் கிடைக்கும் பால்கோவா போன்ற உணவுப்பொருள் தொடங்கி இட்லி மாவு வரைக்கும் நம் சமையலறையில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. இனிவரும் நாள்களில், நம் வீட்டில் இருக்கும் மதிப்புக் கூட்டல் செய்யப்பட்ட பொருள்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகுமே தவிர, குறையாது.  

கடந்த 2015-ம் ஆண்டில், மதிப்புக் கூட்டல் தொழிலில் உலக அளவில் இந்தியா ஐந்தாம் இடமும், 2016-ம் ஆண்டில் மூன்றாம் இடமும் பிடித்திருந்தது. மதிப்புக் கூட்டல் தொழிலைப் பொறுத்தவரையில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இங்கே குறிப்பிடத்தக்க விஷயம், மதிப்புக் கூட்டல் தொழில், லாபம் என்பதைத் தாண்டி உணவுப் பொருள் வீணாவதைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் உணவுப்பஞ்சத்தைப் போக்க, எதிர்காலத்தில் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இருக்கும்.

நஞ்சில்லா உணவு குறித்த விழிப்புணர்வு பெருகிவரும் சூழ்நிலையில், இயற்கை விளைபொருள்கள், மதிப்புக்கூட்டிய பொருள்கள் என இயற்கைப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால், சூழல் மேல் அக்கறை கொண்ட பல இளைஞர்கள், யுவதிகள் தங்கள் வேலைகளைத் துறந்து இயற்கை வேளாண்மை, இயற்கை அங்காடி, மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி அருகிலுள்ள கருப்பன்வலசு கிராமத்தைச் சேர்ந்த கலைமகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிப்புக் கூட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சென்னையில் ஐ.டி ஊழியராகப் பணியாற்றிய கலைமகள், இன்று ஒரு தொழில்முனைவோராக வளர்ந்திருக்கிறார். இவர் கருப்பட்டி பால்கோவா, கூந்தல் மூலிகைத் தைலம், தேன் வேர்க்கடலை உருண்டை, மூலிகைச் சத்து மாவு, உளுந்தங்களி, நலங்கு மாவு உள்ளிட்ட சில பொருள்களை மதிப்புக்கூட்டல் முறையின் மூலம் தயாரித்து, அவரே நேரடியாக விற்பனையும் செய்து வருகிறார். சென்னைக்கும் திருப்பூருக்கும் பயணத்திலேயே இருக்கும் கலைமகள், அவரது கிராமத்துக்கு வந்திருந்தபோது சந்தித்தோம். இவரது தொழிற்கூடத்தில் கருப்பட்டி பால்கோவாவை பேக்கிங் செய்தபடி நம்முடன் பேசினார் கலைமகள். 

“எங்களுக்குச் சொந்தமாக ஆறு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. விவசாயத்தை என்னுடைய தம்பி  ராமதுரை கவனித்து வருகிறார். என்னுடைய படிப்பை முடித்ததும் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலைகிடைத்தது. அதனால், சென்னையில் சில காலம் பணியாற்றினேன். சென்னையில் வேலை செய்யும்போது நான் உண்ட உணவுகள் என் உடலுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த உணவு எனக்குப் பழக அதிக நாளானது. எனக்கு எப்போதும் கிராமம் சார்ந்த உணவுகள்மேல் நாட்டம் அதிகம். எங்களுடைய அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகளைக் கொண்டு செல்வேன். அப்போது அதை அதிகமானவர்கள் விரும்பி வந்து சாப்பிடுவார்கள். இதையே ஒரு தொழிலாகச் செய்தால் என்ன என்கிற யோசனை எனக்கு அப்போது தோன்றியது. 

அந்தச் சமயத்தில் சென்னை, காட்டுப்பாக்கம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு வேளாண்மைக் கண்காட்சி நடந்தது. அங்கே பால்வளத்துறை சார்பில் அமைத்திருந்த அரங்கில் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அதில் பால்கோவாவும் இருந்தது. செலவில்லாமல் தயாரிக்கும் பொருளாகப் பால்கோவா இருந்தது. அந்த அரங்கிலேயே பால்கோவா தயாரிப்புத் தொழில்நுட்ப கையேடும் கொடுத்தனர். பிறகு, ஊருக்கு வந்து பால்கோவா தயாரிப்பு பற்றி என் தம்பியிடம் பேசினேன். சந்தோஷமாக அதைச் செய்யச் சம்மதிச்சுட்டார். என்னதான் ஏட்டுக் கல்வி இருந்தாலும் அனுபவம் என்பது ரொம்ப முக்கியம் எனத் தோன்றியது. 
இனிப்புகள் தயாரிக்கும் கடையில் பால்கோவா தயாரிக்கும் விதத்தையும் தம்பி கற்றுக்கொண்டார். அடுத்து இயற்கை முறையில்தான் பால்கோவா தயார் செய்ய வேண்டும் என்பதில், நாங்கள் தீர்க்கமாக இருந்தோம். பால்கோவாவில் அஸ்கா (சீனி) சேர்க்கக் கூடாது என்று முடிவு செய்தோம். கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம் என்று முடிவு செய்தோம். அடுத்து சோதனை அடிப்படையில் நாட்டுச் சர்க்கரை போட்டு பால் கோவா கிண்டினோம். அதில் கொஞ்சம் உப்பு சுவையா இருந்தது. நாட்டுச் சர்க்கரை கெடாமல் இருப்பதற்காகச் சேர்க்கும் ரசாயனங்களால்தான் உப்பு சுவை வந்ததைக் கண்டுபிடித்தோம். அதைத் தவிர்த்துவிட்டு ரசாயனக் கலப்பில்லாத பனங் கருப்பட்டி சேர்த்துக் கிண்டினோம்.  

சோதனைக் கட்டத்தில் கிட்டத்தட்ட 300 லிட்டர் பால் வீணாகியது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பனங் கருப்பட்டி தூள் சேர்த்துச் செய்த பால்கோவா அருமையாக வந்தது. அதனால் அதையே கடைப்பிடிக்கலாம் என முடிவு செய்தோம். அடுத்து, அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தோம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாக சில இயற்கை அங்காடிகள் முகவரி கிடைத்தது. அந்த அங்காடிகளைத் தேடிப்போய்க் கொடுத்தோம். தவிர, எங்களிடம் கறவை மாடுகளும் விவசாய நிலங்களும் இருந்ததால், மதிப்புக் கூட்டல் பற்றிய எண்ணம் வர அவையும் காரணமாக இருந்தது.

என்னுடைய முதல் தயாரிப்பே சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது. கருப்பட்டி பால்கோவா கொடுத்த நம்பிக்கை இன்னும் அதிகமான பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. தற்போது பரவலாகக் கிடைக்கும் பால்கோவாவில் வெள்ளைச் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்த்து நாங்கள் கருப்பட்டி கலந்து பயன்படுத்தியதால், சர்க்கரையை விரும்பாத பலர் விரும்பி வாங்கிச் சாப்பிட்டனர். அடுத்ததாக வேர்க்கடலை உருண்டை மற்றும் கடலை மிட்டாயைத் தயார் செய்தேன். அதுவும் சந்தையில் நன்கு விற்பனையானது. நான் பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்த என் தம்பி மிக உதவியாக இருந்தார். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் எங்கள் பொருள்களை நிறையபேரிடம் கொண்டுபோய் சேர்த்தோம். அது நன்கு பலன் தந்தது.

பொருள்கள் நன்றாக விற்பனையாகத் தொடங்கியதால், சென்னையில் இருந்த என் கணவரிடம் சொல்லி, வேளச்சேரியில் உள்ள அவரது பர்னிச்சர் கடையில் மதிப்புக்கூட்டல் செய்த இயற்கைப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினேன். பர்னிச்சர் வாங்க வருபவர்களைவிட, இயற்கைப் பொருள்களை வாங்க அதிகமானோர் வருகின்றனர். வாடிக்கையாளர்களைக் கவர இயற்கையான விளைபொருள்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. அதை இயற்கையாகவே கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் மண் கலயத்தில் கருப்பட்டி பால்கோவாவை பேக்கிங் செய்து விற்பனை செய்து வந்தேன். அதுவும் வாடிக்கையாளர்களைக் கவர ஒரு காரணமாக இருந்தது.
சில நாள்கள் தேங்காய் சிரட்டையிலும் பேக்கிங் செய்து கொடுத்து வந்தேன். அதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பொருளுக்கு நல்ல மதிப்பைக் கொடுத்து வந்தது. கருப்பட்டி பால்கோவாவில் கிடைத்த லாபம் நேரடியாகப் பாலை விற்பனை செய்ததைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. அதனால் ‘நேச்சர்ஸ் பக்கெட்’ என்ற பெயரில் நான் தயாரிக்கும் அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்து வருகிறேன்” என்றவர், இதற்கு உதாரணமாக ஒரு கணக்கையும் சொன்னார்.

“10 லிட்டர் பாலுக்கு 400 ரூபாய் கிடைக்கும் என்றால் மாடுகளுக்கு 200 ரூபாய் செலவு போய்விடும். மீதம் 200 ரூபாய் லாபமாக நிற்கும். ஆனால், 10 லிட்டர் பாலிலிருந்து 3 கிலோ பால்கோவா தயாரிக்கலாம். இந்தத் தயாரிப்புக்கு 1,200 ரூபாய் செலவாகும். ஒரு கிலோ 650 ரூபாய்க்கு விற்பனை செய்தால், 3 கிலோவுக்கு 1,950 ரூபாய் கிடைக்கும். இதில் 750 ரூபாய் லாபமாக நிற்கும். நேரடியாகப் பாலை விற்றபோது 200 என்ற லாபம், மதிப்புக்கூட்டினால் 750 லாபம் கிடைக்கிறது’’ என லாபக் கணக்கைச் சொன்னவர், ‘‘நான் தயாரிக்கும் ஆறு பொருள்களிலிருந்து மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. அதிலிருந்து மாதம் 20,000 முதல் 25,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

பால்கோவா தவிர, மற்ற பொருள்களின் மூலம் அதிக லாபம் கிடைக்கவில்லை. இருந்தும், மக்களிடம் விஷமில்லாத உணவுப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. இயற்கையில் தயாரிக்கும் பொருள்களை என் நண்பர்கள் மூலமாக வெளிநாடுகள் வரைக்கும் விற்பனை செய்து வருகிறேன். இத்தனைக்கும் நான் எந்த விளம்பரத்தையும் செய்வதில்லை. விளம்பரம் இல்லாமலேயே, தரமாகப் பொருளைத் தயார் செய்து விற்பதால், நான் தயாரிக்கும் பொருள்களைத் தேடிவந்து வாங்கிக்கொண்டுச் செல்கிறார்கள் பலர்’’ எனப் பெருமையுடன் பேசி முடித்தார் கலைமகள்.

எந்தப் பொருளையும் மதிப்புக்கூட்டி விற்றால், வித்தியாசமான இன்னொரு பொருள் கிடைக்கும். அந்தப் பொருள் நமக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தரும்!