Published:Updated:

'மஞ்சள் மவுசு இன்னும் குறையவேயில்லை!' மகத்தான லாபம் தரும் மஞ்சள்

மணம் வீசும் வாசனைப் பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மத்திய- மாநில அரசுகள் முயற்சி செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகப்படுத்தவேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

'மஞ்சள் மவுசு இன்னும் குறையவேயில்லை!' மகத்தான லாபம் தரும் மஞ்சள்
'மஞ்சள் மவுசு இன்னும் குறையவேயில்லை!' மகத்தான லாபம் தரும் மஞ்சள்

ஞ்சளின் மகிமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... நாட்டுப்புற பாமரன் முதல், நாடாளும் மன்னர் வரை மஞ்சளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை நாமெல்லாம் அறிந்ததுதான். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மஞ்சளைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ஈரோடு மாவட்டம். அதற்காக புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. அதை விளைவிக்கும் முறையும், சந்தைப்படுத்தும் முறையைப் பற்றியும் வாருங்கள் தெரிந்து கொள்வோம். 

வாசனைப் பயிராகவும்... பணப்பயிராகவும் இருக்கும் இந்த மஞ்சள், ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் ஏற்றது. வடிகால் வசதியுடைய எல்லா மண் வகைகளிலும் நடலாம். 

ஏக்கருக்கு 1,000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். நாட்டு ரகம் என்பதால், நாமே சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். அறுவடையின்போது தரமுள்ள மஞ்சளாகப் பார்த்து தேர்ந்தெடுத்துச் சேமிக்கவேண்டும். விதைகளை மற்ற விவசாயிகளிடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம். கிலோ 5 முதல் 8 ரூபாய் விலைக்கே கிடைக்கிறது. 

விதை மஞ்சளை மஞ்சள் விவசாயிகளே தயார் செய்யலாம். விதைக்கான மஞ்சளை, 200 லிட்டர் பஞ்சகவ்யாவில் நனைத்து, நிழலில் ஒரு மணி நேரம் காய வைக்கவேண்டும். மஞ்சளைக் காய வைக்க வேப்பந்தழைகளைப் பயன்படுத்தலாம். வேப்ப இலைகளை அரையடி உயரத்துக்கு மெத்தை போல அமைத்து அதன் மீது பஞ்சகவ்யாவில் நனைத்த மஞ்சளைப் பரப்பி காய வைக்கலாம். பின்னர் அதன்மீது, மீண்டும் வேப்பந்தழையை பரப்ப வேண்டும். இதனால் மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்கலாம். இவ்வாறு செய்வதால் தரமான விதை மஞ்சள் நமக்குக் கிடைக்கிறது. இந்த விதைகளை 90 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம். 

தை அல்லது மாசி மாதங்களில் சணப்பு விதைத்துவிட்டு, பாசனம் செய்ய வேண்டும். மூன்று மாதங்களில் சணப்பு வளர்ந்துவிடும். அதை அப்படியே டிராக்டர் கொண்டு உழவு செய்ய வேண்டும். அதனால் அது அருமையான பசுந்தாள் உரமாக மாறிவிடும். அடுத்து, ஏக்கருக்கு 4 டன் அளவு தொழுஉரத்தை தூவ வேண்டும். அதன்பிறகு, மண் புழுதி கிளம்பும் அளவுக்கு நன்றாக நான்கு முறை உழவு ஓட்டவேண்டும். பின்பு கலப்பை கொண்டு முக்கால் அடிப் பார் ஓட்ட வேண்டும். இதனைத் தொடர்ந்து பாத்தி வாய்க்கால் அமைத்து, அரை அடிக்கு ஒரு விதைக் கிழங்கு என மண்வெட்டி கொண்டு லேசாகக் குழி பறித்து விதைக்கவேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு பாத்திகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே நடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சளை நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி முக்கால் அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். களைக்கொத்து கொண்டு நான்கு விரல் அளவுக்குப் பள்ளம் எடுத்து, விதைக் கிழங்குகளைத் தனித்தனியாக நடவு செய்ய வேண்டும். இதற்குச் சொட்டுநீர் பாசனம் தேவைப்பட்டால், இடைவெளிக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

நடவுக்குப் பயன்படுத்தும் மஞ்சள், விரலிமஞ்சளாகவும், மூன்று அங்குலம் நீளம் உள்ளதாகவும் இருப்பது அவசியம். நடவுக்கு முன்பாக விதைநேர்த்தி செய்ய மறக்கக்கூடாது. விதைநேர்த்தி செய்வதன் மூலமாக, மஞ்சளை அதிகம் தாக்கும் வேரழுகல் நோயில் இருந்து காப்பாற்ற முடியும். அடுத்த நாள், நீர்ப்பாய்ச்சி பாத்தியின் இரு ஓரத்திலும் ஊடு பயிராக தட்டைப்பயறு போன்ற பயிர்களை நடவு செய்ய வேண்டும். அவற்றிலிருந்து முறையே ஒன்றரை அடி இடைவெளி விட்டு மேலும் இரண்டு வரிசைக்கு ஊடுபயிர்களை நடவு செய்யவேண்டும். 

வழக்கமாக ஏக்கருக்கு 1,000 கிலோ விதைமஞ்சள் தேவைப்படும். ஆனால், மேட்டுப்பாத்தியில் நடவு செய்வதால், ஏக்கருக்குக் 600 கிலோ விதைமஞ்சள் போதும். நடவு செய்த 30-ம் நாளில் மஞ்சள் முளைப்பு எடுக்கும். 30 மற்றும் 60-ம் நாளில் களை எடுத்து, களைச் செடிகளை நிலத்திலேயே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் பயிர் வளர்ந்து நிழல் வந்துவிடுவதால் களை எடுக்கத் தேவையில்லை. மண்ணின் ஈரப்பத்தை பொறுத்து, தினமும் பாசனம்  செய்தால் போதும். அதிகமான தண்ணீர் விட வேண்டிய அவசியம் இல்லை.

விதைத்த 20 நாளைக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைச் சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். 30-ம் நாளில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ஜீவாமிர்தத்தைத் தெளிக்க வேண்டும். முதல் மாதம் 10 லிட்டர் டேங்கிற்கு 500 மி.லி ஜீவாமிர்தம், 2-ம் மாதம் 700 மி.லி, 3-ம் மாதம் 1 லி, 4-ம் மாதம் 1.2 லி எனத் தண்ணீரோடு கலந்து தெளிக்க வேண்டும். 5-ம் மாதத்தில் பயிர் வளர்ச்சி ஊக்கியாக 10 லிட்டர் டேங்கில் ஒரு லிட்டர் புளித்தமோரைக் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 'ஜீரோ பட்ஜெட்’ முறையில் சாகுபடி செய்யும்போது எந்தவிதமான பூச்சி, நோய் தாக்குதலும் இல்லாமல் பயிர் சிறப்பாக வளரும்.

நடவு செய்த 60-ம் நாளுக்கு மேல் ஊடுபயிரை அறுவடை செய்யலாம். மஞ்சள் 6-வது மாதம் கிழங்கு வைக்க ஆரம்பித்து, 10-வது மாதம் முற்றி மஞ்சள் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 15 குவிண்டால் (காயவைத்து பாலீஷ் செய்தது) மஞ்சள் கிடைக்கும்.

300 நாட்களில் அறுவடை. மஞ்சள் கிழங்குகளை எடுத்து, வேகவைத்து நிழலில் வைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த பின்பு, இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலீஷ் செய்ய வேண்டும். அப்படி பாலீஷ் செய்யும்போது, மஞ்சளிலிருந்து மணம் வீசும். 10 டன் மஞ்சளை வேகவைத்து, மெருகு கூட்டுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். மெருகு போட்டு முடித்த பிறகு, 10 டன் மஞ்சள், 2,500 கிலோவாகக் குறைந்து நிற்கும். 

மஞ்சளைப் பொறுத்தவரை மூட்டைகளில் பிடித்து எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாது. நல்ல விலை வரும் நேரத்தில் விற்பனை செய்யலாம்.  ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருக்கின்றன. அங்கே ஏல முறையில் விற்பனை செய்யலாம். தனியார் கமிஷன் மண்டிகளிலும் விற்பனை செய்யலாம். மஞ்சள் கிழங்கை எடுத்ததுபோக மீதமுள்ள இலைகளை வேக வைத்து நீராவி மூலம் மஞ்சள் ஆயிலைத் தயாரிக்கலாம். வெளிநாடுகளில் மஞ்சளுக்கு அதிகமாக கிராக்கி இருப்பதால் ஏற்றுமதி செய்யலாம். இதன்மூலம் மகத்தான வருமான வாய்ப்பு இருக்கிறது. 

மணம் வீசும் வாசனைப் பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழக மஞ்சளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. மத்திய- மாநில அரசுகள் முயற்சி செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகப்படுத்தவேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.