Published:Updated:

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!
நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

நாம் பார்க்கும் வேலையில் போதுமான சம்பளம் வந்தாலே, 'வாழ்க்கைக்கு இதுவே போதும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுவோம். சிலர் மட்டும்தான் தங்களுடைய மனதிருப்திக்காக அதைத் தாண்டியும் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். அதில் ஒருவர் பொன்னுசாமி. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தே.இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்; கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், 'போதும்' என்று உட்கார்ந்துவிடவில்லை. நம்மாழ்வார் காட்டிய வழியில், தன் தாய் வளர்த்த 10 கோழிகளைப் பெருக்கி, இப்போது 1000 கோழிகளாக மாற்றியிருக்கிறார். இதன்மூலம், மாதம் 40,000 வரை சம்பாதிக்கிறார்.

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

'ஆயிரம் கோழிகள் வளர்த்த அந்தத் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி'யைச் சந்தித்தோம். அவரது வீடு, தோட்டம், கூரை, வண்டி என எல்லா இடங்களிலும் கோழிகள் மயம். கோழிகளுக்குத் தீவனம் போட்டுக்கொண்டிருந்த பொன்னுசாமி, தனது 'வெற்றிக் கதை'யை ஆரம்பிக்கிறார். 

"எங்க பூர்விகத் தொழில் விவசாயம்னாலும், எங்கப்பா தலைமை ஆசிரியரா இருந்ததால், எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தரிசாவே போட்டிருந்தோம். இந்நிலையில், போட்டோகிராஃபி மேல ஈடுபாடு வந்து, 1994-ம் வருடம் ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். அதுதொடர்பான வேலையில் ஈடுபட்டிருந்தேன். பி.லிட், பி.எட் படிச்ச எனக்கு, 1996-ம் வருடம் அரசு ஆசிரியர் பணி கிடைச்சுது. இருந்தாலும், 2003 வரை ஸ்டூடியோ தொழிலை விடாமல் தொடர்ந்தேன். அதன்பிறகு, சலவை சோப் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பிச்சேன். 2009-ல், வானகத்துல நம்மாழ்வார் அய்யா நிலம்வாங்கி, இயற்கை விவசாயம் சம்பந்தமா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். அங்க போன எனக்கு, நம்மாழ்வார் அய்யா சொல்லிய விவசாயத்துல அதீத ஈடுபாடா போயிட்டு. அவரை பின்தொடர்ந்தேன். விளைவு, தரிசா கிடந்த 2 ஏக்கர் நிலத்துல, போர்வெல் போட்டு இயற்கை விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். கடலை, சோளம், முருங்கைனு பயிர் செஞ்சேன். கையைக் கடிக்காத வருமானம் வந்துச்சு. அடிக்கடி வானகம் போய்வர ஆரம்பிச்சேன். ஆனா, எங்க கடவூர் ஒன்றியமே வறட்சியான பகுதி என்பதால், நாளுக்கு நாள் நிலத்தடிநீர் கீழே போக ஆரம்பிச்சுது. அதனால, 2017-ம் வருஷம் விவசாயத்துக்கு முழுக்குப்போட்டேன். 'தண்ணி இல்லாம என்ன தொழில் பண்ணலாம்'னு யோசிச்சேன். கண்ணுக்கு முன்னால வந்து நின்னது, அம்மா வீட்டுல வளர்த்த 10 நாட்டுக்கோழிகள்தான். உடனே, 'அதையே தொழிலா பண்ணலாம்'னு இறங்கிட்டேன். பத்து கோழிகள் இட்ட முட்டைகளைக் கொண்டு, அடை வச்சு, கோழிகளைப் பெருக்கினேன். ஆறு மாதத்திலேயே நூத்துக்கணக்கான கோழிகள் பெருகுனுச்சு. 

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

ஆனா, சளி, வெள்ளைக்கழிசல்னு நோய் வந்து, கொத்துக்கொத்தா கோழிகள் செத்துப்போச்சு. ஒண்ணுமே புரியலை. அப்புறம்தான், கோழிகளை தினமும் கண்பார்வையிலேயே வச்சு காபந்து பண்ணனும்னு புரிஞ்சுச்சு. மூணு மாசம் வரை கோழிக்குஞ்சுகளுக்கு சளி வரும், மூணு மாசத்துக்கு ஒருதடவை கோழிகளுக்கு வெள்ளைக்கழிசல் வரும், அப்ப மருந்துகொடுக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதன்பிறகு, கவனமா இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா கோழிகள் பெருகினுச்சு. அப்புறம், குஞ்சுகளை பொரிக்க வைக்க, இன்குபேட்டர் வாங்கினேன். 75,000 வரை செலவுசெய்து, தோட்டத்தைச் சுத்தி கீரிபிள்ளை போன்ற பிராணிகள் வராமல் இருக்க, கம்பிவேலி அமைச்சேன். கோழிக்குஞ்சுகள் வளர மற்றும் கோழிகளை அடைக்க, ஒண்ணேகால் லட்சம் செலவில் இந்த செட்டை அமைச்சேன். மெள்ள மெள்ள கோழிகள் பெருகி, இப்போ 800 கோழிகள், 100-க்கும் மேற்பட்ட சேவல்கள், 400-க்கும் மேற்பட்ட குஞ்சுகள்னு பல்கிப் பெருகியிருக்கு. இதுல, கருங்கோழிகள், பெருவிடைக்கோழிகள், கருஞ்சிதைக்கோழிகள்னு பலவகைக் கோழிகள் இருக்கு. ஒருநாளைக்கு 45 முட்டைகள் கிடைக்குது. முட்டைகள்மூலம் மாசத்துக்கு 400 இளம்குஞ்சுகள் கிடைக்கும். அதுல, 20 சதவிகிதம் குஞ்சுகள் இறந்துபோகும். மத்த குஞ்சுகளை 22 நாள்கள் வரைக்கும் 38 டிகிரி வெப்பநிலையில் வச்சிருக்கணும். 

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

மக்காச்சோளம், கம்பு, அரிசி, கேழ்வரகு, தவிடுனு கோழிகளுக்கு தீவனம் வாங்குறதுக்கு மாசத்துக்கு 20,000 வரை செலவாகுது. ஒருகிலோ கோழியை 350 ரூபாய்னு விற்பனை செய்றேன். மொத்த வியாபாரிகளும் வந்து வாங்கிக்குவாங்க. இது, கிராமப் பகுதி என்பதால், கோயில் விசேஷம், கல்யாணம், காதுகுத்துனு மக்களும் வந்து கோழிகளை வாங்கிக்குவாங்க. அதேபோல, ஒருநாள் குஞ்சை 90 ரூபான்னு கொடுக்கிறேன். ஒரு மாத குஞ்சை 175 ரூபாய்னு விற்பனை செய்கிறேன். அதேபோல, 2 மாத குஞ்சை 225 ரூபாய்க்கு விற்கிறேன். கோழிகளை ஒண்ணே கால் எடைக்கு வரும்போதுதான், விற்பனை செய்கிறேன். இதைத் தவிர, ஒரு நாட்டுக்கோழி முட்டையை 25 ரூபாய்க்கு விற்கிறேன். இப்படி செலவுபோக, மாதம் 40,000 வரை வருமானம் கிடைக்குது. தலைமை ஆசிரியராக இருக்கிற நான், அந்த வருமானத்துலேயே குடும்பத்தை ஓட்டிட முடியும். அதுவல்ல விஷயம். ஒவ்வொரு நாளும் பணி முடிஞ்சதும், வீட்டுல சும்மாதான் இருக்கணும். போரடிக்கும். அதனால, கோழி வளர்த்தேன். இப்போ வருமானமும் பெருகியிருக்கு. 

நம்மாழ்வார் வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு... 1000 கோழிகளுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

தினமும் காலை, மாலை இந்தக் கோழிகளைப் பார்க்கிறது, கவனிக்குறதுன்னு செயல்படுவதால், மனஅழுத்தம் குறைஞ்சு, புத்துணர்ச்சி கிடைக்குது. கோழி வளர்க்க பெரிய முதலீடு தேவையில்லை; பெரிய அளவில் உடலுழைப்பும் தேவையில்லை. ஆனா, தினமும் கோழிகளை நமது கண்பார்வையிலேயே வச்சுக்கணும். ஒரு கோழி லேசா சுணங்குனாகூட, அதை கவனிச்சு, பிரச்னை என்னன்னு கண்டுபிடிச்சு, தாமதிக்காம அதோட பிரச்னை தீர்க்க மருந்து கொடுக்கணும். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க நம்மாழ்வார் அய்யாதான் காரணம். அவர் எனக்குள் கடத்திய நல்ல விஷயங்கள்தான், என்னை இந்த அளவுக்கு பீடுநடைபோட வச்சுருக்கு. வானகத்துல பயிற்சி எடுக்க வர்றவங்க, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி எடுக்கணும்னா, என்னோட கோழிப்பண்ணைக்குதான் வர்றாங்க. அதேபோல, என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நம்மாழ்வார் பத்தி அறிமுகம்செய்து, அவருடைய கருத்துகளை விதைக்கிறேன். அதன்மூலமா, பள்ளி வளாகத்திலேயே மரக்கன்றுகள் நடுவது, இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை விளைவிப்பதுனு பல முயற்சிகளைச் செய்துட்டு வருகிறோம். நம்மாழ்வாரின் ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் விழாக்கள் வானகத்துல விமரிசையா நடக்கும். அப்போ, எங்க பள்ளி மாணவர்களை அங்க அழைச்சுட்டுப் போய், அவங்களுக்கு பல விஷயங்களை புரியவைப்பேன். இதனால், 'டாக்டராகணும், இன்ஜினியராகணும்'னு சொல்றதைவிட, என்னோட மாணவர்களில் பலரும், 'நம்மாழ்வார் மாதிரி ஆகணும்'னு சொல்றாங்க. இதைத்தான் நான் பெருமையா கருதுறேன். என் ஆசிரியர் பணி முழுமை அடையறதுக்குள்ள, 50 நம்மாழ்வாரையாவது உருவாக்கணும்கிறதை லட்சியமா வச்சுருக்கிறேன்" என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு