Published:Updated:

``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி

``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி
``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி

"தென்னை விவசாயம் நிறைந்த பகுதியைச் சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி, தென்னை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதித்துள்ளார். பனையில் இருந்து கள் இறக்க அனுமதி கொடுக்க மறுக்கிறார்.

மாநிலத்தின் மரமாகத் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது பனை மரம். அத்தகைய பனை மரத்தை எதிர்கால சந்ததியினர் படங்களாக மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களால் அழிவுக்குள்ளாகப்பட்டு வரும் பனைமரங்களின் இன்றைய பரிதாப நிலைதான் அதற்குக் காரணம்.

ஒரு மரத்தின் இலை, காய், கிளை, வேர், கிழங்கு என எல்லா வகையிலும் பயன்படும் தன்மை கொண்டிருப்பது பனை மரங்களில் மட்டுமே சாத்தியம். அரசால் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்ட பனை மரங்கள் தினம் தினம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பனை மரத்தின் பலன்கள் குறித்தும், அவற்றின் அழிவு குறித்தும் விரிவாகச் சொல்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமத்தைச் சேர்ந்த பனை பொருள் கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் சதாசிவம்,

``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி

''நாடு முழுவதும் உள்ள 3 கோடி பனை மரங்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. இதில் 72% மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தன. தெற்கே ராமேஸ்வரம் தொடங்கி கேரளாவின் திருவனந்தபுரம் வரையிலும், வடக்கிலே தஞ்சாவூர் வரையிலும் பனை மரங்கள் மிகுந்து காணப்பட்டன. 100 முதல் 110 அடி உயரம் வரை வளரும் பனை மரத்தை தண்ணீர்விட்டு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுள் உள்ள வேரின் மூலம் தண்ணீரைத் தேக்கி வைத்து வளரும் தன்மை கொண்ட அவை, அருகில் வளரும் செடி கொடி, மரங்களுக்கும் நீரைக் கொடுக்கும் தன்மை உடையது. எத்தகைய சூறாவளிக் காற்றையும் சமாளித்து நிற்கக்கூடிய வலிமை கொண்டது. ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரங்கள் மேகங்களைக் குளிர்வித்து மழைப் பொழிவுக்கு உதவியும், கடலோர பகுதிகளில் ஏற்படும் மணல் அரிப்பைத் தடுத்தும் வருகின்றன.

``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதனீர், அதைக் கொண்டு காய்ச்சப்படும் கருப்பட்டி, கற்கண்டு, பனம் பழம், பனங்கிழங்கு என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. முன்பெல்லாம் பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் சுவாச உறுப்புகளைப் பாதுகாக்க வாழைப்பழமும் பனங்கற்கண்டும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை அளிப்பது பதனீர் ஆகும். இவை தவிர பனை ஓலை, அதன் மட்டை, வேர் எனப் பனை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்பாட்டுக்கு உரியனவாக இருப்பது இதன் சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட 1,300 கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்தன. காலப்போக்கில் இவற்றைக் காதி வாரியத்துடன் அரசு இணைத்ததால் பனைத் தொழிலாளிகளும் அவர்கள் நம்பியிருந்த பனை மரங்களும் அழிவைச் சந்தித்து வருகின்றன.

வருடத்தில் 6 மாதம் மட்டுமே வருமானம் தரக்கூடிய பனைத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளின் கள் இறக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது கள் இறக்குவதாகப் பொய் வழக்குகளும் போடப்பட்டன. பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கள் இறக்க அனுமதி உண்டு. ஆனால், இங்கு தடை. தென்னை விவசாயம் நிறைந்த பகுதியைச் சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி, தென்னை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதித்துள்ளார். பனையில் இருந்து கள் இறக்க அனுமதி கொடுக்க மறுக்கிறார். இது போன்ற காரணங்களால் பனைத் தொழிலாளர்கள் தங்கள் பரம்பரைத் தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் தேடிச் சென்றுவிட்டனர். இதனால் பனை சார்ந்த தொழில்களான பதனீர் எடுத்தல், கருப்பட்டி காய்ச்சுதல், கற்கண்டு தயாரித்தல் போன்றவை அருகிவிட்டன. இதனால் பனை மரங்களின் பயன்பாடும் குறைந்துவிட்டன. எதிர்காலத்தில் 'பனையேறி' என்ற அடையாளமே இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

``நீராவுக்கு அனுமதி... கள்ளுக்கு மறுப்பு... ஏன்?'' - காரணம் சொல்லும் பனை விவசாயி

எனவே, அழிந்து வரும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் பனை மரம் வளர்த்தலை அரசு முன்னெடுக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்படுவதுபோல் தினமும் பதனீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு இருந்ததுபோல பனையிலிருந்து தயாரிக்கப்படும் பனைப் பொருள்களைப் பிரபலம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநில மரமாக விளங்கும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதுடன், பனைத் தொழில்களை மீட்டெடுக்கவும் அரசு முன்வர வேண்டும்'' என்றார்.

கடும் வறட்சியால் ஒரு புறம் காய்ந்து வரும் பனை மரங்கள் மறுபுறம் மனிதர்களால் அழிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலை நீடித்தால்  பனை மரங்களை எதிர்கால சந்ததியினர் படங்கள் மூலமே காணும் நிலை உருவாகும். அதைத் தடுக்கும் முயற்சிகளை அரசு இப்போதே தொடங்க வேண்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு