Published:Updated:

இங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

பாதை காட்டிய சுஸ்லான்... பளீரிட்ட என். சுவாமிநாதன், படங்கள்: ரா. ராம்குமார்.

##~##

'பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு' என்று வெளிநாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதை அப்படியே, நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது... காற்றாலை நிறுவனம் ஒன்று!

ஆம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக... அன்பு, ஆதரவு, சொந்தம், பந்தம் எல்லாம் ஓடி விட... அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு, இலவசமாக நிலத்தைக் கொடுத்து, விவசாயப் பயிற்சியையும் கொடுத்து வருகிறது, 'சுஸ்லான்’ காற்றாலை நிறுவனம். கிடைத்த நிலத்தில் அசத்தலாக இயற்கை விவசாயம் செய்து, லாபத்தையும் சந்தோஷத்தையும் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்... அந்தப் பெண்கள்!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து முடவன்குளம் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, நெடுவாழி கிராமம். இங்கேதான் இருக்கிறது அந்தப் பெண்கள் நடத்தி வரும் இயற்கை விவசாயப் பண்ணை. பணிகளில் மும்முரமாக இருந்த பெண்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள... உற்சாகமாய் பேச ஆரம்பித்தார், அவர்களுடைய நலச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவி முகில். இவர், 'வி ஃபார்ம்’ மகளிர் குழு'வுக்கும் தலைவியாக உள்ளார்.

இங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

இயற்கை நிபந்தனை!

''பாம்பன்குளம்தான் சொந்த ஊர். திருநெல்வேலி மாவட்ட சங்கத்துல ஐநூறு பேருக்கு மேல உறுப்பினர்கள் இருக்காங்க. எங்களை அறியாமலேயே எங்க வீட்டுக்காரங்க மூலமா எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகிட்டவங்கதான் நாங்க. எங்கள்ல நிறைய பேர், தோட்டம், துரவு, ஆடு, மாடுனு வசதியா வாழ்ந்தவங்கதான். விதிவசத்தால இன்னிக்கு நிராதரவாகிட்டோம். சுஸ்லான் கம்பெனிதான் எங்களுக்கு கடவுளா உதவி செய்துட்டிருக்கு.

இங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

அவங்க கொடுத்த நிலத்துல விவசாயம் செய்றதுக்காக 'வி ஃபார்ம்’னு குழு ஆரம்பிச்சுருக்கோம். 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத இயற்கை விவசாயம் செய்யணும்'னு ஒரே ஒரு கண்டிஷன போட்ட அந்த நிறுவனம், இயற்கை விவசாயப் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. அப்படித்தான் எங்களுக்கு இயற்கை விவசாயம் அறிமுகம். இப்போ முழுநேரமும் விவசாயம் பாக்கறதால, நோய் பத்தின கவலையெல்லாம் மறந்து, சந்தோஷமா நகர்ந்திட்டிருக்கு எங்களோட நாட்கள்'' என்று தெம்பாகச் சொன்ன முகில் தொடர்ந்தார்.

ஏழு ஏக்கர்... ஏழு பயிர்!

''மொத்தம் ஏழு ஏக்கர் பூமி. அதுல, ரெண்டு ஏக்கர்ல அம்பை பதினாறு ரக நெல்; ஒன்றரை ஏக்கர்ல மரவள்ளிக் கிழங்கு; ரெண்டு ஏக்கர்ல வாழைனு சாகுபடி பண்றோம். இதுபோக, ஒன்றரை ஏக்கர்ல 118 தென்னை மரங்கள் நிக்குது. தென்னை மரங்களுக்கு

இங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

20 வயசாகுது. 18 அடி இடைவெளியில மரங்கள் இருக்கறதால, அரை ஏக்கர்ல சின்ன வெங்காயம், அரை ஏக்கர்ல வெள்ளரி, அரை ஏக்கர்ல பாகற்காய்னு ஊடுபயிர் சாகுபடியும் பண்றோம்.

'பருவத்துக்கு ஏத்த மாதிரி பயிர் செஞ்சாதான் லாபம் பார்க்க முடியும்'னு சொல்வாங்க. எங்களுக்கு ஒவ்வொரு பருவத்துலயும் என்ன பயிருக்கு நல்ல லாபம் கிடைக்கும்னு சுஸ்லான் கம்பெனிக்காரங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதன்படி போன தடவை செஞ்சப்போ... தக்காளி, நிலக்கடலை இது ரெண்டுலயும் நல்ல வருமானம் கிடைச்சுது. நாங்க இப்போ ஆறு மாசத்துல விளைஞ்சுடுற 'லெட்சுமி’ ரக வெள்ளை மரவள்ளிக்கிழங்கு நடவு செஞ்சுருக்கோம்'' என்ற முகிலைத் தொடர்ந்தார்... வி ஃபார்ம் மகளிர் குழுவின் செயலாளர் சாவித்திரி.

மனசு நிறைய சந்தோஷம்!

''முழுக்க இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். தொழுவுரம், நுண்ணுயிர் திரவம்னுதான் பயன்படுத்துறோம். இயற்கை விவசாயங்கிறதால பூச்சிகள் வர்றதில்லை. நோயும் தாக்குறதில்லை. ஊடுபயிரா போட்டிருக்குற வெள்ளரி, இப்போ காய்ப்புக்குத் தயாரா இருக்கு. சின்னவெங்காயமும், பாகற்காயும் சீக்கிரம் காய்ப்புக்கு வந்துடும். வாழை இன்னமும் அறுவடை பண்ணல.

முதல்தடவை காய் பறிச்சதுல 400 கிலோ வெள்ளரி எடுத்தோம். கிலோ 20 ரூபாய்னு வித்ததுல 8,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இன்னமும் காய் பறிக்கலாம். விவசாயம் மூலமா எங்களுக்கு வருமானம் கிடைக்கிறதை விட, மனசு நிறைய சந்தோஷம் கிடைச்சுருக்கு. இதைத்தான் முக்கியமா சொல்லியாகணும்'' என்றார், நெகிழ்ச்சியாக.

பெண்களின் உழைப்புதான் காரணம்!

சுஸ்லான் நிறுவனத்தின் மக்கள் நலப்பணி ஒருங்கிணைப்பாளர் முருகன், ''எங்களின் ஃபவுண்டேசன் மூலமாகவும், காற்றாலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் பங்களிப்போடும் பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புப் பயிற்சிகள், கிராம சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைப் பயிற்சிகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். விவசாயிகளுக்கு இடுபொருள் செலவைக் குறைத்து, இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம். கால்நடை பராமரிப்பு, அறுவடைக்குப் பிந்தையத் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல்... என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.

'வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைப் பிடிப்போடு, துடிப்போடு இருக்கும் இந்தப் பெண்கள், அதையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர். நாங்கள் வெறுமனே வடிவம்தான் கொடுத்தோம். இவர்களின் கடின உழைப்பால்தான் இந்தப்பகுதி, இத்தனை செழிப்பாக மாறியிருக்கிறது'' என்று வஞ்சனையில்லாமல் பாராட்டினார் அந்தப் பெண்களை!

'சாகற நாள் தெரிஞ்சுட்டா... வாழற நாள் நரகமாயிடும்' என்பார்கள். கிட்டத்தட்ட இப்படியரு நிலைதான் இந்தப் பெண்களுக்கு. ஆனால், இவர்களின் நாட்கள், 'நரகம்' என்றெல்லாம் ஆகாமல், இயற்கையின் மகிமையால் 'பசுமை'யாகவே இருப்பது... ஆறுதலான விஷயம்தானே!

 தொடர்புக்கு,

முகில், செல்போன்: 98652-98500.
முருகன், செல்போன்: 98430-84844

மரவள்ளிவெள்ளிக்கு மகசூல் குறிப்புகள் !

 மரவள்ளிக் கிழங்கு மற்றும் வெள்ளரி சாகுபடி பற்றி சொன்ன முகில், அவை தொடர்பான சில தொழில்நுட்ப விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை-

'லெட்சுமி ரக மரவள்ளிக்கு பட்டம் கிடையாது. இதன் வயது 6 மாதங்கள். வடிகால் வசதி உடைய செம்மண், கரிசல் மண் பகுதிகளில் நன்றாக வளரும். சாகுபடி நிலத்தில் ஒரு தரிசு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு ஒரு டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே... லாபத்தோடு, சந்தோஷமும் அறுவடையாகிறது...

ஆறு இலைக் கணு உள்ள விதைக் குச்சிகளை எடுத்துக் கொண்டு, மூன்று இலைக்கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் மூன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். ஏக்கருக்கு 3,000 முதல் 3,500 குச்சிகள் வரை தேவைப்படும்.

நடவு செய்து ஒரு மாதம் கழித்து, 5 லிட்டர் நுண்ணுயிர் திரவத்தை பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். ஒவ்வொரு வாய்க்காலில் தண்ணீர் பாயும்போதும், கொஞ்சம் திரவத்தை அதில் கலந்து விட்டால் போதுமானது. இந்த சமயத்தில் விதைக் குச்சிகளிலிருந்து சிம்புகள் வளரும். அவற்றில் ஆரோக்கியமான ஒரு சிம்பை மட்டும் விட்டு, மற்றவற்றை கிள்ளிவிட வேண்டும். களைகள் மண்டினால் அவற்றை அகற்ற வேண்டும். இரண்டாவது மாதம், 5 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். வேறு பராமரிப்புகள் எதுவும் தேவையில்லை. கிழங்கு பெருக்கும் சமயத்தில் மண் வெடிக்கும். அந்த இடத்தில் மண்ணைக் குவிக்க வேண்டும்.

ஒரு ஏக்கரில் ஒன்றரை டன்!

ஆறாவது மாதத் தொடக்கத்தில் அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு சராசரியாக 15 ரூபாய் விலை கிடைக்கிறது. அந்தக் கணக்கில் ஏக்கருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏழாயிரம் ரூபாய் செலவுபோக, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்.

வெள்ளரிக்கு தைப்பட்டம்!

மூன்று மாதப்பயிரான வெள்ளரிக்கு தைப்பட்டம் ஏற்றது. நிலத்தில், ஒரு தரிசு உழவு ஓட்டி, இலைக் கழிவுகளைக் கொட்டி மீண்டும் இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, பார் பாத்தி அமைத்து ஐந்தடி இடைவெளியில் விதைகளை ஊன்றி, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-ம் நாள் களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 5 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் காய்ப்புக்கு வரும்.

 இப்படித்தான் தயாரிக்கணும் நுண்ணுயிர் திரவம்!

ஒரு கிலோ சர்க்கரையை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் இ.எம் திரவம், 23 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஏழு நாட்கள் மூடி வைக்கவேண்டும். இதை தினமும் காலையில் ஒரு முறை திறந்து மூட வேண்டும். ஏழாவது நாளில் புளிப்புத் தன்மையுடைய நுண்ணுயிர் திரவம் தயாராகி விடும்.

அடுத்த கட்டுரைக்கு