Published:Updated:

மரங்களை வெட்டும் பொதுப்பணித்துறை...

வெகுண்டெழுந்த விவசாயிகள்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

மரங்களை வெட்டும் பொதுப்பணித்துறை...

வெகுண்டெழுந்த விவசாயிகள்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

Published:Updated:

பிரச்னை

##~##

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது' என்பது... நம்முடைய அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும்! ஒரு பக்கம்... 'மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்’ என்று மூச்சு விடாமல் பிரசாரம் செய்வார்கள். மறுபக்கம்... சாலை விரிவாக்கம், நகர் சீரமைப்பு, ஏரி சீரமைப்பு என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்துவார்கள் கண்மூடித்தனமாக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படித்தான், 'அணை சீரமைப்பு' என்று சொல்லிக் கொண்டு திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலை ஓடைக்கரை அணைப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கான ஆயத்தங்களில் மாவட்ட பொதுப்பணித்துறை இறங்க.... கொதித்தெழுந்த பாசன விவசாயிகள், 'தேவையில்லாமல் மரங்களை அழிக்கிறார்கள்’ என்றபடி உண்ணாவிரதம், சைக்கிள் பேரணி என போராட்டங்களில் குதிக்க... விஷயம் அந்தப் பகுதியில் பலத்த சூட்டைக் கிளப்பிவிட்டது.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய வட்டமலை ஓடைக்கரை அணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி, ''6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறும் வகையில், 1980-ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது, இந்த அணை. இதில் 24 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மலைகளோ, அடர் காடுகளோ கிடையாது. அதனால் மழை நீர் மட்டும்தான் அணைக்கு நீர் ஆதாரம்.

அணையின் மையப் பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால்... அணைக்குள்ளும், அணையைச் சுற்றிலும் கருவேல், வெள்வேல், வேம்பு, பூவரசு, தேக்கு... என 20 ஆயிரம் மரங்களும் பல வகையான முள்செடிகளும் உள்ளன. இவற்றை நம்பி மான், முயல், மயில், கிளி, கொக்கு போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சுற்று வட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் இருக்கிறது அணை.

மரங்களை வெட்டும் பொதுப்பணித்துறை...

இந்நிலையில், 'அணையைச் சீரமைக்கிறோம்’ என்று சொல்லி, மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 85 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளது பொதுப்பணித்துறை. ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரரும் வேலையைத் துவங்கி விட்ட நிலையில், 'மரங்களை வெட்டுவதைத் தடுக்க வேண்டும்’ என்று தாசில்தார் தொடங்கி, தலைமைச் செயலர் வரை மனுக்களை அனுப்பினோம். எந்தவிதமான பதிலும் இல்லாததால்... நில வளத்தையும், வன உயிர்களையும் பாதுகாக்க நாங்களே ஒன்று திரண்டு விட்டோம். இப்பகுதியில் ஒரு குச்சியைக்கூட ஒடிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்'' என்றார், ஆக்ரோஷமாக.

பழநியில் உள்ள பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் இப்பிரச்னை பற்றிக் கேட்டபோது, ''அணையின் நீர்பிடிப்புப் பகுதி முழுவதும் ஏராளமான முள்செடிகள் படர்ந்து கிடக்கின்றன. இவை, எவ்வளவு மழை பெய்தாலும் அணைக்கு நீர் வந்து சேர்வதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. நீர்பிடிப்புப் பகுதியைக் காப்பாற்றவே முட்செடிகளை வெட்டுவதற்கு மட்டுமே டெண்டர் விட்டுள்ளோம். அவற்றைத் தவிர, எந்த மரங்களையும் வெட்ட மாட்டோம்.

வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, விவசாயிகளும் இந்தப் பணிகளைக் கண்காணிக்கலாம். ஒப்பந்தக்காரர் விதிகளை மீறும்பட்சத்தில், யார் வேண்டுமானாலும் தடுக்கலாம். அதற்கு வசதியாக விதிமுறைகள் அடங்கிய டெண்டர் நகலைக்கூட விவசாயிகளுக்குக் கொடுக்கத் தயாராக உள்ளோம். இப்போதே பொதுப்பணித்துறை சார்பில் மரம் வெட்டுவதை கண்காணிக்க ஒருவரை நியமித்துவிடுகிறோம்'' என்று சொன்னார்.

இதையடுத்து, விஷயத்தை விவசாயிகளின் காதுகளுக்கு நாம் மடைமாற்ற... ''சீமை கருவேல (வேலிகாத்தான்) மரங்களைத் தவிர, மற்ற மரங்களை வெட்டமாட்டோம் என்று பொதுப்பணித்துறை அளித்திருக்கும் உறுதிமொழியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கூடவே எங்கள் சார்பில், மரம் வெட்டும் வேலையை கண்காணிக்கவும், ஆளை நியமித்துவிடுகிறோம்'' என்று சொன்ன விவசாயிகள், அதன்படியே தற்போது கண்காணிப்பு வேலையை மேற்கொண்டுள்ளனர்.

இதுஒருபுறமிருக்க, இப்படி காடு போல வளர்ந்து கிடக்கும் மரங்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாது இருந்த வனத்துறை, தற்போது விஷயம் பத்திரிகைகள் வரை செல்லத் தொடங்கிவிட்டதை அறிந்து, தன் பங்குக்குக் களத்தில் இறங்கியுள்ளது. அணைப்பகுதியைப் பார்வையிட்டு, சீமைக் கருவேல் தவிர்த்த மற்ற மரங்களைக் கண்காணிப்பதற்காக வனத்துறையிலிருந்தே ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த மரங்களுக்கெல்லாம், வரிசை எண் எழுதும் வேலையும் தொடங்கியுள்ளது.

'சீமைக்கருவேல்' என்கிற, பெயரில் பல வகை மரங்களும் மொட்டையடிக்கப்படவிருந்த கொடுமைக்கு இங்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது! இது, 'விவசாயிகள் கைகோத்து களமிறங்கினால், எதையும் சாதிக்கலாம்' என்பதற்கு ஓர் உதாரணம்!

காசில்லா காவல்காரன்;

மரங்களை வெட்டும் பொதுப்பணித்துறை...

இந்தப்பகுதியில் அணை கட்டும்போது, சடையப்பாளையம் என்கிற கிராமம் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டது. அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையை வாங்கிக் கொண்டு மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். ஆனால், நாச்சிமுத்து என்ற ஒருவர் மட்டும் தன் மனைவி ராமாத்தாளுடன் இன்னமும் அங்கேயே வாழ்ந்து வருகிறார். அணைப்பகுதியில் உள்ள மரங்களை, இத்தனைக் காலமாக மரத்திருடர்களிடம் இருந்து காவல் காத்து வருவதும் இவரே!

''முன்ன, ஊர் முழுக்க பனைமரங்களாத்தான் இருக்கும். கருப்பட்டி தயாரிக்கறதுதான், முக்கியமானத் தொழில். அணைக்காக எல்லாரையும் வெளியேத்திட்டாங்க. ஆனா, பொறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற எனக்கு இஷ்டமில்லாததால... ஓரமா ஒரு குடிசையைப் போட்டுக்கிட்டு, ஆடு மேய்ச்சுக்கிட்டு இங்கயே தங்கிட்டேன். புள்ளைங்க எல்லாம் வெளியூர்ல வேலைக்குப் போயிட்டாங்க. அணை கட்டின பிறகு, பலவித மரங்களும் இங்க வளர ஆரம்பிக்க, மிருகங்களும் பறவைங்களும் வந்துடுச்சுங்க. அதுங்களால எனக்கு எந்தத் தொந்தரவும் இல்ல... என்னாலயும் அதுங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்ல'' என்கிறார் நாச்சிமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism