Published:Updated:

சர்வதி...

காவிரிப்பாசனத்திலும் கலக்கும் காஷ்மீர் நெல் !கு. ராமகிருஷ்ணன் படங்கள்: மு. ராமசாமி

சர்வதி...

காவிரிப்பாசனத்திலும் கலக்கும் காஷ்மீர் நெல் !கு. ராமகிருஷ்ணன் படங்கள்: மு. ராமசாமி

Published:Updated:

பாரம்பரியம்

பளிச்... பளிச்...

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை.
குறைவான பராமரிப்பு.
சன்ன ரக அரிசி கிடைக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

இயற்கை வழி விவசாயமோ... ரசாயன வழி விவசாயமோ... எதைப் பின்பற்றினாலும் சரி, ஒரே மாதிரியான பயிர்களை மட்டும் விவசாயம் செய்யாமல்... பலவிதமான பயிர்கள், ரகங்கள் என வயலையே சோதனைக் கூடமாக மாற்றும் விவசாய விஞ்ஞானிகள் பலர் இங்கே உண்டு. அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவர், காஷ்மீர் பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்படும் 'சர்வதி’ ரக நெல்லை தனது வயலில் சாகுபடி செய்திருக்கிறார்!

''என்னோட நண்பர் நடராஜன், ராணுவத்துல இன்ஜினீயரா வேலை பாக்கறார். அவர்தான் காஷ்மீர்ல இருந்து  சர்வதி ரக நெல்லைக் கொண்டு வந்தார். அதைத்தான் நான் சாகுபடி செஞ்சேன். நம்ம பகுதியிலயும் ரொம்ப நல்லாவே விளையுது அந்த நெல்'' என்று உற்சாகமாக சொன்ன ராஜா, அந்த உற்சாகம் குறையாமல் தொடர்ந்தார்.

'எங்க குடும்பத்துக்குச் சொந்தமா 20 ஏக்கர் நிலம் இருக்கு. 10 ஏக்கர்ல கடலை, 10 ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். 'இயற்கை விவசாய முறையில இதை சாகுபடி செய்' அப்படினு சொல்லித்தான் ஒரு கிலோ விதைநெல்லை மட்டும் என்கிட்ட கொடுத்தார் நடராஜன். அதனால, 33 சென்ட் நிலத்துல மட்டும்தான் அதைப் போட்டிருந்தேன். 'முழுசா இயற்கையில பண்ணி சரியா வராம போயிடுச்சுனா என்ன பண்றது?’னு கொஞ்சம் பயம் வந்ததால, கொஞ்சம் ரசாயனத்தையும் பயன்படுத்தினேன்'' என்ற ராஜா, தன்னுடைய சாகுபடி முறையைப் பாடமாகவே சொல்ல ஆரம்பித்தார்.

சர்வதி...

12 நாள் நாற்று !

சர்வதி ரக நெல்லின் வயது 120 நாட்கள். இந்த ரக நெல், நீளமாகவும், அரிசி அதிசன்னமாகவும் இருக்கும். 33 சென்ட் நிலத்தில் ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய,

7 அடி நீளம்... 6 அடி அகலத்துக்கு, பாலிதீன் சாக்கை விரித்துப் பாய் நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.

பாலிதீன் சாக்கின் மீது மண்ணைப் பரப்பி, 25 கிலோ தொழுவுரத்தைத் தூவி, தண்ணீர் தெளித்து சமப்படுத்த வேண்டும். அதில், 24 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட ஒரு கிலோ விதைநெல்லை, பரவலாகத் தூவ வேண்டும். மறுநாள், அரை கிலோ டி.ஏ.பி. உரத்தைத் தெளித்து, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப தினமும், மாலை நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். 12-ம் நாள் நாற்றைப் பறித்து நடவு செய்யலாம்.

25 சென்டி மீட்டர் இடைவெளி !

முன்னதாக சாகுபடி நிலத்தைத் தயாரிக்க வேண்டும். மூன்று சால் சேற்று உழவு செய்து, 10 கிலோ தொழுவுரத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றில் தலா

சர்வதி...

800 கிராம் மற்றும் 500 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து நிலத்தில் தூவி, ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்ய வேண்டும். நடவிலிருந்து 15, 23 மற்றும் 30-ம் நாட்களில், கோனோவீடர் மூலம் களைகளை நிலத்தில் அழுத்திவிட வேண்டும்.

108-ம் நாள் அறுவடை!

நடவு செய்த 40-ம் நாள்... டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் கரைசலை வயலில் தெளிக்க வேண்டும். முதல் நாளே, மேற்சொன்ன இந்த மூன்று உரங்களிலும் தலா ஒரு கிலோ அளவுக்கு எடுத்து தண்ணீரில் கரைத்து, 24 மணிநேரம் வைத்திருந்து, அடியில் தேங்கும் கசடுகளை நீக்கிவிட்டு, அந்தக் கரைசலைப் பயன்படுத்தலாம். நிலத்தில் எப்போதும் ஈரம் இருக்குமாறு தண்ணீர் பாய்ச்சி வர வேண்டியது முக்கியம்.

இந்த ரக நெல்லின்  இலைகளில் சுனைகள் அதிகமாக இருப்பதால்... பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால் வேறு பராமரிப்புகள் எதுவும் தேவையில்லை. 108-ம் நாளுக்கு மேல் அறுவடைக்குத் தயாராகி விடும்.  

பதர்களே இல்லை !

சாகுபடிப் பாடம் முடித்த ராஜா, ''அறுவடை செஞ்ச சமயத்துல, பயிர் நாலடி வரைக்கும் வளர்ந்திருந்துச்சு. ஒண்ணரை அடி அளவுக்கு கதிர் இருந்துச்சு.

ஒவ்வொரு செடியிலயும் இருபத்திரண்டுல இருந்து இருபத்தெட்டு தூர்... ஒவ்வொரு கதிர்லயும் இருநூறுல இருந்து இருநூத்தி அறுபது நெல்மணினு நல்ல திரட்சியா இருந்துச்சு. பதர்ங்கற பேச்சுக்கே இடமில்லாம இருந்துச்சு. 33 சென்ட்ல ஒன்பது மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சது. ஒருவேளை... முழுக்கவே இயற்கையில செய்திருந்தா, இதைவிட கூடுதல் மகசூல் கிடைச்சுருக்கலாம்'' என்ற ராஜா,

''இந்த அரிசி ரொம்ப சன்ன ரகமா இருக்கறதால பிரியாணிக்கு அருமையா இருக்குமாம். குறைவானப் பராமரிப்புலயே நல்லா விளையுறதால... இந்தப் பகுதி விவசாயிகள் நிறையபேர் விதைநெல் கேக்கறாங்க. அதனால, விதைநெல்லாவே கிலோ 25 ரூபாய்னு கொடுக்கத் தீர்மானிச்சுட்டேன்.

சர்வதி...

இந்த அரிசிக்கு தமிழ்நாட்டுல எவ்வளவு விலை கிடைக்கும்னு இப்போதைக்குக் கணிக்க முடியல. ஆனா, கண்டிப்பா நல்ல வரவேற்பு இருக்கும்னு மட்டும் தோணுது. காஷ்மீர்ல இந்த ரக விதைநெல்லை கிலோ

20 ரூபாய்னு விக்கிறாங்களாம். அரிசி, 60 ரூபாயாம்'' என்று கணக்கு வழக்குகளையும் பேசினார்.

மண்ணை வளமாக்கும் தொழுவுரம் !

சர்வதி ரக விதைநெல்லைக் கொண்டு வந்த நடராஜனிடம் பேசியபோது, ''ஜம்மு பகுதியில இந்த ரகத்தைத்தான் அதிகளவு சாகுபடி செய்றாங்க. அங்க ஏக்கருக்கு 33 முதல் 40 (60 கிலோ மூட்டை) மூட்டை வரை மகசூல் எடுக்கறாங்க. அந்தப் பகுதிகள்ல இந்த அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துறாங்க. அங்க எல்லாரும் எருமை மாடு வெச்சுருப்பாங்க. அதுல கிடைக்கிற எருவை மட்டும்தான் அடியுரமா போடுறாங்க. பெரும்பாலும் ரசாயன உரம் பூச்சிக்கொல்லி இதையெல்லாம் பயன்படுத்துறதில்ல. தொடர்ந்து தொழுவுரம் போட்டுகிட்டே இருக்கறதால... அங்க மண்ணே கருப்பு கலருலதான் இருக்கும்.

பரம்பரையாகவே ஒற்றை நாற்று !

அவங்க பரம்பரை பரம்பரையா, ஒரு ஒரு நாத்தாத்தான் நடவு பண்றாங்க. அங்க அதிகளவு களைகளும் மண்டுறதில்லை. அதனால களை எடுக்குற வேலையும் குறைவு. ஜூன் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரைக்கும் அங்க பனிப்பொழிவு குறைவாவும் வெயில் அதிகமாவும் இருக்கும்.

பனி மூட்டத்தோட, மழையும் பெய்யும். அந்த சமயத்துலதான் இந்த ரகத்தை சாகுபடி பண்றாங்க. நம்ம பகுதியிலயும் அதே சீதோஷ்ண நிலை இருக்கறதாலதான் இது நல்லா விளையுது போல'' என்று சொன்னார் நடராஜன். 

தொடர்புக்கு,
நடராஜன், செல்போன்: 94888-85364
ராஜா, செல்போன்: 94433-33417.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism