Published:Updated:

மண்புழு மன்னாரு !

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு !

ஓவியம்: ஹரன்

Published:Updated:
##~##

ஆடு, மாடுங்களுக்கு அடிபட்டா, உடனே என்னவிதமான முதலுதவி செய்யணுங்கிறத நாம தெரிஞ்சு வெச்சுருக்கணும். அப்பத்தான் அவசர காலத்துல, நாமளே களத்துல இறங்கி, நம்ம கால்நடைகளைக் காப்பாத்திக்க முடியும். அப்புறம், நாம செய்தது... முதலுதவி மட்டும்தான்கிறத மனசுல வெச்சுக்கிட்டு, கால்நடை வைத்தியர்கிட்டயும் கால்நடையைக் காட்டத் தவற வேணாம்.

ஆடு, மாடுங்களுக்கு ஏதாச்சும் காயம் ஏற்பட்டுச்சுனா... முதல்ல காயத்தை சுத்தமான தண்ணியைப் பயன்படுத்தி கழுவி விடணும். அப்புறமா வேப்பெண்ணெய், இல்லனா சோத்துக் கத்தாழையை அந்த புண்ணு மேல தடவிவிடுங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விபத்து ஏதும் ஏற்பட்டு, கால்நடைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டா, பக்குவமா கையாளணும். முறிஞ்ச நிலையில அப்படியே கால்நடையை இருக்க வெச்சு, அதிக அசைவு ஏற்படாம மூங்கில் பட்டையை அந்த இடத்துல வெச்சு, துணியால கட்டுப்போடுங்க. எலும்பு முறிவோட ரத்தக்காயமும் இருந்தா, இப்படி கட்டுப் போடக் கூடாது. உடனே மருத்துவரைத்தான் அழைக்கணும்.

கால்நடைங்களுக்கு அடிபட்டு ரத்தக் கசிவு இருந்தா, கையைக் கழுவிட்டு ரத்தம் வர்ற இடத்துல விரல் வெச்சு அழுத்திப் பிடிங்க. ரத்தக் கசிவு அதிகமா இருந்தா... சுத்தமான துணியால கட்டுப்போடுங்க.

மண்புழு மன்னாரு !

கால்நடை கொட்டகையில தீப்பிடிச்சா... உடம்புல தீக்காயம் உண்டாகும். ஆடு, மாடுங்க உடம்புல தீப்பிடிச்சி எரிஞ்சா... அடர்த்தியானப் போர்வை, சாக்குப் பை போட்டு போர்த்திவிடுங்க. தீ அணைஞ்ச பிறகு, சுத்தமான தண்ணியை மேல ஊத்துங்க. பாதிக்கப்பட்ட கால்நடையை, காத்தோட்டமான இடத்துக்குக் கொண்டு போக மறந்துடாதீங்க.

வெயில் கடுமையா இருக்கறப்ப, உடம்புல அதிக வெப்பம் உருவாகி, கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல், வெப்ப அதிர்ச்சி வந்துடும். நிழலான, காத்தோட்டமான இடத்துல... கட்டி வெச்சா அதையெல்லாம் தவிர்க்கலாம். பாதிக்கப்பட்ட கால்நடைங்க மேல ஈரத்துணி, ஐஸ் கட்டி இதுமாதிரி எதையாவது வெச்சு, உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம். கோடைக் காலத்துல காலையில, சாயங்காலத்துலதான் மேய்ச்சலுக்கும் பிற வேலைங்களுக்கும் கால்நடைகளை அனுப்பணும்.

மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர்... இதையெல்லாம் கால்நடைங்க தின்னுட்டா... அமில நச்சு உருவாகும். இந்த பாதிப்பு ஏற்பட்டா... ஒரு மணி நேரத்துக்குள்ளயே உயிர் சேதம் ஏற்படும். இதுக்கு, 100 கிராம் சமையல் சோடாவை 500 மில்லி தண்ணியில கரைச்சி... ரெண்டு, மூணு முறை உள்ளுக்குக் கொடுக்கணும். கையோட மருத்துவர்கிட்டயும் காட்டணும்.

அதிக விளைச்சல் கிடைக்கணும்னு வயலுக்கு யூரியா போடறோம். அந்த வயல்ல தேங்கியிருக்கற தண்ணியிலயும் உரத்தோட வீரியம் கலந்திருக்கும். ஆடு, மாடுங்க இப்படிப்பட்ட தண்ணியைக் குடிச்சுட்டா... உசுருக்கே ஆபத்துதான். வாயிலிருந்து எச்சில் ஒழுகும், நுரைநுரையா வடியும், மூச்சுவிட சிரமப்படும், வலிப்புகூட வரும். முதலுதவியா மாடுகளுக்கு வினிகர் 2-4 லிட்டர் வரை கொஞ்சம், கொஞ்சமா கொடுக்கணும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம். பிறகு, மருத்துவர்கிட்ட காட்ட மறந்துடாதீங்க.

ஆடு, மாடுகள பாம்பு கடிக்கிறதுண்டு. கடிபட்ட கால்நடையால நிக்க முடியாது... எழுந்திரிக்க முடியாது. அடிக்கடி வாந்தி வர்றதோட... எச்சிலும் ஒழுகும். மூச்சுவிடறதுக்கும் சிரமப்படும்; சிறுநீர்ல ரத்தம் கலந்து வரும்; கடிபட்ட இடத்துல ரத்தம் வந்துகிட்டே இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தா... நிச்சயம் அது பாம்புக்கடிதான்னு உறுதிபடுத்திக்கலாம். கடிவாயில ரத்தம் வடியறத தடுக்காம, உடனடியா மருத்துவரை அழைக்கணும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism