Published:Updated:

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

முடிவுக்கு வருமா... முறிந்து போகுமா? காசி.வேம்பையன்

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

முடிவுக்கு வருமா... முறிந்து போகுமா? காசி.வேம்பையன்

Published:Updated:

 அலசல்

##~##

தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள முந்திரி மரங்கள், நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் அப்புறப்படுத்தப்படும்' என்பது உட்பட விவசாயிகளுக்கு உண்மையிலேயே பயன் தரக்கூடிய சுமார் 790 கோடி ரூபாய் மதிப்பிலான 'சிறப்புத் தொகுப்புத் திட்ட'த்தை சமீபத்தில் அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா! இதைப் பற்றி... 'சாய்ந்து கிடக்கும் மரங்களை அரசே அகற்றித் தரும்' என்ற தலைப்பில் 25-02-2012 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அறிவிப்புகள் அனைத்தும் கடைசி உழவருக்கும் தடையற சென்று சேர்வதில்தான் இருக்கிறது... அனைத்து முயற்சிகளுக்குமான உண்மையான பலன்' என்று அந்தக் கட்டுரையை முடித்திருந்தோம். தற்போது இந்தப் பணிகள் நடப்பதைப் பார்த்தால்... 'முதல்வரின் அறிவிப்புகள் எல்லாம், வழக்கம்போலவே, விழலுக்கு இறைத்த நீராக ஆகிவிடுமோ?' என்கிற கவலைதான் ஏற்படுகிறது! 'முன்மாதிரிப் பணி’ என்கிற பெயரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில் முதல்வரின் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நடைபெற்றுவரும் மேலிருப்பு, பணிக்கன்குப்பம் மற்றும் மருங்கூர் கிராமங்களில் வலம் வந்தபோதுதான்... இப்படியரு கவலை நமக்கு!  

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

பணிக்கன்குப்பம் கிராமத்தில் ஃபிளோமின் ஆரோக்கியதாஸ் என்பவரின் தோட்டத்துக்கு சென்றபோது, அங்கு பணியிலிருந்த பெண்களில் ஒருவரான கிளாரா, ''முந்திரி மரங்களை வெட்டுற வேலை கடுமையானதா இருக்கு. ஆம்பளைங்க மாதிரி மரத்து மேல ஏறியெல்லாம் வெட்டச் சொல்றாங்க. கை எல்லாம் காய்ச்சிப் போகுது. ஆனா, 119 ரூபாய்தான் கூலினு சொல்றாங்க. கூலியை ஏத்திக் கொடுக்காட்டி, நாங்க வேலை செய்றதா இல்லை'' என்று சொன்னார்.

பணிக்கன் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியதாஸ், ''மெஷின் மூலமா மரத்தை அறுக்கற ஆளுக்கு 350 ரூபாய் கூலி கொடுங்கனு வாய்மொழி உத்தரவா அதிகாரிங்க சொல்லியிருக்காங்க. ஆனா, இந்த வேலை கடுமையானதா இருக்கறாதால, அந்த சம்பளத்துக்கு யாரும் வரல. இது முன்மாதிரி வேலைங்கறதால, நானே முடிவெடுத்து, 400 ரூபாய் கொடுத்து ஆட்களை அழைச்சுட்டு வந்தேன்.

ஆட்கள், பெட்ரோல்னு ஒரு ஏக்கருக்கு 14 ஆயிரத்து 320 ரூபாய் செலவாகியிருக்கு. ஆனா, ஒரு ஏக்கருக்கு அரசாங்கம் அறிவிச்சுருக்கறது... வெறும் 6 ஆயிரம் ரூபாய்தான்.

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

இது இப்படியிருக்க, வெளியில எல்லாம் மெஷின் மூலமா மரம் வெட்டுற ஆளுக்கு 500 ரூபாய்ல இருந்து 700 ரூபாய் வரை கூலி கொடுக்குறாங்க. அவரோட உதவியாளுக்கு 400 ரூபாய் கூலி. ஆனா, நான் வெறும் 400 ரூபாய் கொடுத்ததால மேற்கொண்டு யாரும் வேலைக்கு வரல. இதுதான் உண்மை நிலவரம். இந்த நிலையில, மரம் வெட்டுற வேலையை எப்படி செய்து முடிக்கப் போறோம்னே தெரியல'' என்று புலம்பினார்.

மேலிருப்பு ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமமாலினியின் கணவர் பாபு, ''முன்மாதிரியா ரெண்டு ஏக்கர் நிலத்துல மரங்களை அடியோட வெட்டி சுத்தப்படுத்தினோம். ஒரு ஏக்கருக்கு 17 ஆயிரத்து 260 ரூபாய்

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

செலவாச்சு. மாதிரி திட்டம்கறதால எப்படியோ வேலை வாங்கிட்டோம். இந்தத் திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது, ரொம்பக் கஷ்டம்தான்னு தோணுது. இந்தக் கூலிக்கு ஆட்கள் வரவே மாட்டாங்க. அதனால, விவசாயிகள்ட்டயும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிச்சு, அரசு கொடுக்கற தொகையோடு சேர்த்துக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்'' என்றார்.

மேலிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம், ''எனக்கு அஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. அதுல 3 ஏக்கர்ல முந்திரி, பலா மரங்கள் இருக்கு. சேதமான மரங்களை மட்டும் வெட்டி எடுக்கவே 75 ஆள் பிடிச்சுது. ஒரு ஆளுக்கு 350 ரூபாய்னு கூலி கொடுத்துதான் வெட்டினேன்.

பொதுவா... 100 நாள் வேலை திட்டம்னு சொன்னாலே... அதுல பெருசா வேலை செய்யமாட்டாங்க. காலையில ஏரி, வாய்க்கால், ரோடுனு ஏதாவது ஒரு இடத்துல கூடி நிப்பாங்க. கொஞ்ச நேரம், ஏதாச்சும் வேலை பார்த்துட்டு கிளம்பிப் போயிக்கிட்டே இருப்பாங்க. அதனாலதான் அவங்க கொடுக்கற நூறு, நூத்தி இருபது ரூபாய்க்காக அந்த வேலைக்கு வர்றாங்க. ஆனா, மரம் வெட்டுற வேலை அப்படி இல்லை. கண்டிப்பா மரத்தை வெட்டிக் காண்பிச்சாகணும். அதோட வெளியில வேலைக்குப் போனா... ஒரு நாள் கூலி

300 ரூபாய்க்கு மேல கிடைக்கறப்ப, நூறு ரூபாய்க்கு யாரு வேலை செய்வாங்க. கூலியை உயர்த்திக் கொடுக்கலனா... முதலமைச்சர் அறிவிச்சபடி மரம் வெட்டுற வேலை நடக்கவே நடக்காது. வெறும் அறிவிப்பாதான் இருக்கும்'' என்று உண்மையை உரித்துப் போட்டார்.

முதல்வரின் மரம் வெட்டும் திட்டம்...

பணியாளர்கள், விவசாயிகள், ஊராட்சித் தலைவர்கள்... என்று பலரிடமும் பேசி, நாம் சேகரித்த விஷயங்களை, கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

அவர் நம்மிடம், ''விவசாயிகள் நிலத்தில் இருந்து, அகற்ற வேண்டிய மரத்தைக் காட்டினாலே போதும். 100 நாள் வேலைத் திட்ட ஆட்களை வைத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அப்புறப்படுத்திக் கொடுத்து விடுவார்கள். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை என மூன்று துறை அதிகாரிகளும் இந்தப் பணிகளில் பிரச்னை ஏதும் வராதபடி பார்த்துக் கொள்வார்கள். இப்பணிகளைக் கவனிக்க தற்பொழுது கூடுதல் ஆட்சியர் ஒருவரும் உள்ளார். அதனால், விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை. கூடிய விரைவில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 100 கிராமங்களின் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் அழைத்து இப்பணிகள் பற்றி பயிற்சி கொடுக்க இருக்கிறோம்'' என்று சொன்னார்.

திரும்பவும் நாம் சொல்வது... 'அறிவிப்புகள் அனைத்தும் கடைசி உழவருக்கும் தடையற சென்று சேர்வதில்தான் இருக்கிறது... அனைத்து முயற்சிகளுக்குமான உண்மையான பலன்' என்பதைத்தான்!

இந்தப் பலனை அறுவடை செய்ய வேண்டுமெனில், அனைத்துக் கட்சி மற்றும் அரசியல்சாராத விவசாயிகளைக் கொண்ட நடுநிலையான குழுக்களை அமைத்துக் கண்காணிப்பதில்தான் இருக்கிறது. இல்லையெனில்... முதல்வரின் திட்டம், முறிந்து போகும் என்பதே நிஜம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism