Published:Updated:

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

பல் இளிக்கும் பணப்பயிர்கள்! எஸ். ராஜாசெல்லம். காசி. வேம்பையன் படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

பல் இளிக்கும் பணப்பயிர்கள்! எஸ். ராஜாசெல்லம். காசி. வேம்பையன் படங்கள்: எம். தமிழ்ச்செல்வன்

Published:Updated:

பிரச்னை

##~##

பணப்பயிர்கள்' என்று போற்றப்படும் கரும்பு, மஞ்சள், மரவள்ளி... போன்றவையெல்லாம், விவசாயிகளைச் சிரிக்க வைத்த காலம் மலையேறி, சமீபகாலமாக அழ வைத்துக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓராண்டு காலத்தில் மகசூல் தரக்கூடிய பயிர்களான இவற்றின் மூலமாக கணிசமான வருமானம் கிடைத்து வந்ததால், இந்தப் பணப்பயிர்களை சிறிய அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள்கூட தொடர்ந்து விளைவித்தனர். ஆனால், இந்த ஆண்டு மஞ்சள், மரவள்ளி போன்றவற்றின் விலை அதலபாதாளத்துக்குப் போக... கரும்பு விவசாயமும் கொஞ்சம் ஆழமாகவே கையைக் கடிக்க... செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள், தமிழக விவசாயிகள்.

இதைப் பற்றி வருத்தம் பொங்க நம்மிடம் விவரித்த தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், ''போன வருஷம் வரைக்கும் ஒரு குவிண்டால் மஞ்சள், பதினஞ்சாயிரம் ரூபாய் வரை வித்துக்கிட்டிருந்துச்சு. இப்போ ஐயாயிரம் ரூபாய் கிடைக்கிறதே பெரிய விஷயமாகி போச்சு.

ஒரு ஏக்கர்ல மஞ்சள் சாகுபடி செய்றதுக்கு கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் செலவாகும். அறுவடை செஞ்சு பாலீஷ் பண்ணுனா... ஒரு ஏக்கர்ல 8 முதல் 12 குவிண்டால் வரைக்கும் மஞ்சள் கிடைக்கும். சராசரியா 10 குவிண்டால்னு வெச்சுக்கிட்டாலும்... இப்போ விக்கிற விலையில அதிகபட்ச விலை கிடைச்சாலும், அம்பதாயிரம் ரூபாய்தான் கிடைக்கும். இதுல செலவெல்லாம் கழிச்சா, இருபதாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறதே பெரிய விஷயம். ஒரு ஏக்கர்ல ஒரு வருஷத்துல இருபதாயிரம் ரூபாய் லாபம் கிடைச்சா... அந்த விவசாயி எப்படிங்க குடும்பத்தைக் காப்பாத்த முடியும்?'' என்று பரிதாபமாகக் கேட்டவர்,

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

''இதே மாதிரிதான் மரவள்ளி கதையும் கண்ணீரை வரவழைக்குது. தண்ணி குறைவா கிடைக்கிற விவசாயிங்களுக்குக் கைகொடுத்துக்கிட்டு இருந்தது மரவள்ளிதான். ஒரு ஏக்கர்ல அதிகபட்சமா 8 டன் கிழங்கு எடுக்கலாம். ரெண்டு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் ஒரு டன் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரைக்கும் வித்துக்கிட்டிருந்துச்சு. போன வருஷம் பத்தாயிரம் ரூபாயைத் தொட்டுருச்சு. இந்த வருஷம்... ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குதான் விலை போகுது. ஒரு ஏக்கர்ல அதிகபட்சமா கிடைக்கற

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

எட்டு டன் கிழங்கை வித்தா, பன்னெண்டாயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனா, சாகுபடிச் செலவே ஏக்கருக்கு பதினெட்டாயிரம் ரூபாய்க்கு மேல ஆகுது. ஒரு வருஷம் காப்பாத்தி அறுவடை செஞ்சா... ஆறாயிரம் ரூபாய்க்கு மேல நட்டம்தான். கடனை உடனை வாங்கி வெள்ளாமை வெச்சு கடைசியில இப்படி நட்டமாச்சுனா, கடனை எப்படி அடைக்க முடியும். அறுவடைக்காக வேற எதுக்காக தெண்டமா செலவழிக்கணும்னு நிறைய பேர் அறுவடை பண்ணாமலே விட்டுட்டாங்க.

மரவள்ளியை விக்கிறதுக்கு, தமிழ்நாட்டுல அரசாங்கம் எந்த வசதியையும் செஞ்சு தரல. தனியார் ஜவ்வரிசி ஆலைகள நம்பித்தான் ஒவ்வொரு வருஷமும் விவசாயிங்க மரவள்ளி நடுறாங்க. அறுவடை சமயத்துல ஜவ்வரிசி ஆலை முதலாளிகளெல்லாம் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு விலையில விளையாடிடுறாங்க. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம்தான் ஒவ்வொரு பயிருக்கும் நிரந்தர விலை நிர்ணயிச்சு நடவடிக்கை எடுக்கணும். இல்லேனா... விதர்பா விவசாயிகள் கதையா, நம்மூரு விவசாயிங்களும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படுவாங்க. அப்புறம் தற்கொலைகள் தடுக்க முடியாததாகிடும்'' என்று அபாய மணி ஒலித்தார்.

இதேமாதிரியான கவலைதான் கரும்பு விவசாயிகளுக்கும் நீடிக்கிறது. வெலிங்டன் நீர்த் தேக்கப் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சோமசுந்தரம் இதைப் பற்றி பேசும்போது, ''கடந்த சர்க்கரைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கான செலவு 1,650 ரூபாயாக இருந்தது. ஆனால், இந்தப் பருவத்தில் செலவு 2 ஆயிரத்து 193 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அரசு கொடுக்கும் 2,100 ரூபாயைக் கணக்குப் பார்த்தால்... ஒரு டன் கரும்புக்கு 93 ரூபாய்  நஷ்டம்தான் ஏற்படும். இன்னும் நிலத்துக்கான வாடகையை எல்லாம் சேர்த்தால் விவசாயிக்கு என்ன மிஞ்சும்?'' என்று கேட்டார்.

தென்னிந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு செயல் தலைவர் 'போளூர்’ ராஜ்குமார், ''தேர்தல் அறிக்கையில், 'ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவோம்’ என்று அறிவித்த அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்த பிறகு, 2 ஆயிரத்து 100 ரூபாய் என நிர்ணயித்து எங்களை ஏமாற்றிவிட்டது. மாநில வேளாண் விளைபொருள் விலை நிர்ணையக்குழு, 'ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2 ஆயிரத்து 200 ரூபாய் வழங்க வேண்டும்’ என்று தேசிய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. அதையும்கூட கணக்கில் எடுக்கவில்லை'' என்று சொன்னார்.

''ஒரு டன் கரும்பில் இருந்து... 95 கிலோ சர்க்கரை; 10 லிட்டர் ஸ்பிரிட்; ஆலைக்குச் செலவானது போக 100 யூனிட் உபரி மின்சாரம்... என 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவு லாபம் கிடைக்கும்போது, 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பதில் அரசாங்கத்துக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. சரியான விலையை அறிவிக்க, இப்படிக் காலம் தாழ்த்திக் கொண்டே போனால், பலருக்கும் கரும்பு சாகுபடியைக் கை விடுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று எச்சரிக்கை செய்தார், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின், தமிழ்நாட்டுக்கான கரும்புப் பிரிவு செயலாளர் கோதண்டராமன்.

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

இந்தப் பிரச்னைகளையெல்லாம் எடுத்து வைத்து தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரனிடம் பேசியபோது, ''மரவள்ளிக் கிழங்கு இறக்குமதி; அதிக விளைச்சல் என்ற காரணங்களை சொல்லி 'சேகோ’ ஆலை முதலாளிகள் சிண்டிகேட் அமைத்து, விலையைக் குறைப்பதாக தகவல் வந்திருக்கிறது.

மஞ்சள், மரவள்ளி, கரும்பு...

அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். மஞ்சளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு விளைச்சல் அதிக அளவில் இருப்பதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கூடிய விரைவில் அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கரும்புக்கு, முதல்கட்டமாக ஒரு டன்னுக்கு  100 ரூபாய் உயர்த்தி, முதல்வர் அறிவித்திருக்கிறார். 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை எங்களுடைய ஆட்சி காலத்தில்தான் 'எத்தனால்’ உற்பத்தி கொண்டு வரப்பட்டது. ஆனால், அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் அதை நிறுத்தி விட்டனர். தற்பொழுது சர்க்கரை ஆலைகள் மூலம் ’எத்தனால்’ உற்பத்தியைத் தொடங்குவதற்கான அனுமதியைக் கொடுத்து வருகிறோம். எத்தனால் உற்பத்தி முழுமையாகத் தொடங்கப்பட்ட பிறகு... கரும்புக்கான விலை மேலும் உயர்த்தப்படும்'' என்ற அமைச்சர்,

''பொதுவாக... விவசாயிகள், எந்த ஒரு பயிரையும் நடவு செய்வதற்கு முன்பு... அறுவடை காலத்தில் அவற்றின் விலை எந்த அளவுக்கு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை துறை வெளியிடும்  முன்னறிவிப்பை தெரிந்து கொண்டு பயிரிட்டால்... இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்'' என்கிற அறிவுரையையும் சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism