Published:Updated:

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை...

கொண்டாட்டமும்... திண்டாட்டமும் ! தூரன்நம்பி

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை...

கொண்டாட்டமும்... திண்டாட்டமும் ! தூரன்நம்பி

Published:Updated:

சாட்டை

##~##

ஏற்கெனவே, பருத்தி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை எகிறிக்கொண்டே இருக்கிறது இந்தியாவில். இந்நிலையில், 'பருத்தி ஏற்றுமதிக்குத் தடை' என்கிற அறிவிப்பை வெளியிட்டு, கூடுதல் பாடைகள் கட்டுவதற்கான வேலையைக் கையில் எடுத்திருக்கிறது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திடீர் தடை காரணமாக, அடுத்த சில நிமிடங்களிலேயே விவசாயிகளை சோகம் சூழ ஆரம்பித்து விட்டது. குவிண்டால் 4,000 ரூபாய்க்கும் மேல் விற்றுக் கொண்டிருந்த பருத்தி, ஒரே நாளில் 3,000 ரூபாய்க்கும் கீழே இறங்கிவிட்டதோடு, பருத்தியை வாங்கிக் கொண்டிருந்த வியாபாரிகளும் கடைகளை அடைத்துவிட்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த ஆண்டு, குவிண்டால் ஒன்றுக்கு 6,500 ரூபாய் வரை விற்றது பருத்தி. இதில் ஈர்க்கப்பட்டு, கிடைத்த இடத்தில் எல்லாம் பருத்தியை விதைத்தனர் விவசாயிகள். அதனால், இந்த ஆண்டு, 345 லட்சம் பேல் என்கிற அளவுக்கு உற்பத்தி செய்து குவித்து விட்டனர். சென்ற ஆண்டின் கையிருப்பான 50 லட்சம் பேல்களையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 400 லட்சம் பேல்களுக்கு மேல் இந்தியாவில் பருத்தி இருப்பு இருக்கின்றது. பருத்தி ஏற்றுமதி காரணமாக உலகச் சந்தையில் இந்தியப் பருத்திக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டைப் போல குவிண்டால் ஒன்றுக்கு 6,500 ரூபாய் இல்லையென்றாலும், 4 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விலை போனது. அப்போதும்கூட விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் விலையே! இந்நிலையில், ஏற்றுமதிக்குத் தடைவிதித்து ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு பால் ஊற்றும் வேலையில் இறங்கிவிட்டது மன்மோகன் சிங் அரசு!

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை...

இந்தியப் பஞ்சாலைகளின் பருத்தி தேவை, 240 லட்சம் பேல்கள் மட்டுமே. உபரியாக இருக்கும் சுமார் 150 லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்வதில் எந்தப் பிரச்னையுமே இல்லை. இந்திய வியாபாரிகளும் போட்டிபோட்டுக் கொண்டு இதுவரை 84 லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்திருக்கின்றனர். மேலும் பல லட்சம் பேல்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தமும் போட்டிருக்கின்றனர். ஆனால், மொத்தத்தையும் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, பஞ்சாலை முதலாளிகள் என்ன மாய, மந்திரம் செய்தார்களோ தெரியவில்லை... எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரே இரவில் ஏற்றுமதிக்குத் தடை போட்டுவிட்டது சோனியா வழிகாட்டுதலில் நடைபோடும் மத்திய அரசு!

''மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டியில் பருத்தி மூட்டைகளை ஏற்றி, மண்டிக்கு கொண்டு செல்லும் விவசாயிகளிடம், விலை கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. கனத்த இதயத்தோடு பருத்தி மூட்டைகளை மீண்டும் வீட்டுக்கே எடுத்து வருகிறார்கள்'' என்று பொங்குகிறார் விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் விஜய ஜாவந்தியா.

''கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பஞ்சாலை அதிபர்களுக்கு ஆதரவாக பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. இது ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல்'' என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி.

பருத்தி ஏற்றுமதிக்குத் தடை...

ஏற்றுமதிக்குத் தடை விதித்த அதேநேரத்தில், இறக்குமதிக்கு மட்டும் தடை விதிக்கவில்லை. இத்தனைக்கும் திறந்த பொது சந்தைகளின் பட்டியலில்தான் பருத்தி வருகிறது. இந்தப் பட்டியலில் வரும் பொருட்களை ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ எந்தத் தடையும் இல்லை என்கிறது அரசின் விதி. ஆனாலும், சட்டத்துக்கு விரோதமாக, நடவடிக்கை எடுத்துள்ளது முதலாளிகளின் கைப்பாவையாக செயல்படும் மத்திய வர்த்தகத் துறை.

இதற்கு ஆதாரம் தேடி எங்கேயும் போகவேண்டியதில்லை. மத்திய வேளாண் துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார் ஒருவரே போதும். ஆம்... ''பருத்தி ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது குறித்து முன்கூட்டியே என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. வேளாண்துறையைக் கையில் வைத்திருக்கும் எனக்குத் தெரியாமல், வர்த்தகத் துறை தன்னிச்சையாக  இப்படி செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம். எனவே தடையை உடனடியாக நீக்கவேண்டும்'' என்று வெளிப்படையாகவே விஷயத்தை உடைத்துப் போட்டிருக்கிறார் சரத் பவார்.

ம்... மத்திய மந்திரிக்குகூட விஷயத்தைத் தெரியப்படுத்தாமல், ஒரு காரியத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றால், பஞ்சாலை அதிபர்களின் லாபி எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மணிப்பூர் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் தோல்வி அடைந்துள்ளது காங்கிரஸ் கட்சி. குறிப்பாக, 'உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தே தீருவேன்’ என சூளுரைத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கேயே கதியென கிடந்தார் 'வருங்கால பிரதமர்' என்று வர்ணிக்கப்படும் நேரு குடும்பத்து வாரிசு, ராகுல் காந்தி. ஆனால், மறுபடியும் கிடைத்தது... மரண அடிதான்!

மக்கள் விரோதப் போக்கை... குறிப்பாக, விவசாய விரோதப் போக்கை காங்கிரஸ் அரசு கைவிடாவிட்டால், இந்த மரண அடி, இந்தியா முழுக்கவே தொடர்ந்து விழும், என்பதில் சந்தேகமே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism