Published:Updated:

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

பசுமைப் போராளியின் குடும்பத்தைக் காக்க கைகோப்போம்என். சுவாமிநாதன், ஆ. கோமதி நாயகம் படங்கள்: எல். ராஜேந்திரன்

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

பிரச்னை

##~##

'ஆற்றுப் படுகைகளில் அளவுக்கு அதிகமாக மணலைச் சுரண்டுவது, தாயின் மடியை அறுத்து பால் குடிப்பதற்கு சமமானது’ என்றெல்லாம், பல ஆண்டுகளாக சூழல் ஆர்வலர்கள் சொல்லி வந்தாலும், மணல் கொள்ளையை மட்டும் தடுக்க முடிவதில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது தொடர்கதையாகவேதான் இருக்கிறது! அதுமட்டுமல்ல, தங்களின் கொள்ளைக்கு இடைஞ்சலாக யார் வந்தாலும், அவர்களைக் கொல்லவும் யோசிப்பதில்லை இந்த கொடூரர்கள்!

இதோ... இயற்கையைச் சீரழிக்கும் இந்தக் கொடியவர்களை எதிர்த்து நின்ற காரணத்துக்காக அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சதீஷ் குமார்!

மிட்டாதார்குளம் மக்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாயத்துக்கு, கைகொடுப்பது... நம்பியாறு. இந்த ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு, பாசனம் குறைந்து கொண்டே போனது. இதைத் தடுப்பதற்காக தாசில்தார், கலெக்டர், அமைச்சர்கள் என்று மாறிமாறி மனுக்கள் கொடுத்தும் தீர்வு இல்லை. இதையடுத்து, நீதிமன்றம் மூலமாக மணல் அள்ளுவதற்கு தடை பெற்றனர். ஆனால், அதிகாரிகள், கையூட்டுப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து கொள்ளையர்களுக்குத் துணைபோகவே, நீதிமன்ற ஆணை செல்லுபடியாகவில்லை.

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

''இதுக்குப் பிறகுதாங்க, நாமளே களத்துல இறங்கி நம்பியாத்தை காப்பாத்துவோம்னு ஊர் கூடி தீர்மானிச்சோம். ஊர்ல உள்ளவங்களே ஷிப்ட் போட்டு நாலு வருஷமா அதைச் செய்துகிட்டிருக்கோம். மணல் கொள்ளை நடந்தா போலீஸுக்கு தகவல் கொடுப்போம். அந்த வகையிலதான் மார்ச் 11-ம் தேதி சதீஷ்குமார் உட்பட ஒன்பது பேர் கண்காணிப்பு வேலையில இருந்தாங்க. அதையும் மீறி மணல் லாரி ஒண்ணு வரவே, ராத்திரி நேரம்கறதால போலீஸுக்கு சொல்லாம, தடுத்து நிறுத்த முயற்சி பண்ணியிருக்காங்க. கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம லாரியை ஏத்தி சதீஷ்குமாரைக் கொன்னுட்டாங்க. நல்ல பையன்... ஊருல எந்த விஷயம்னாலும் முன்ன வந்த நிப்பான்... அவனை அநியாயமா கொன்னுட்டாங்க'' என்று சோகம் பொங்கச் சொன்னார் ஊர்த் தலைவர் அகஸ்டின்.

சதீஷ்குமாரின் தந்தை 'எஸ்டாக் வின்சென்ட்’டிடம் ஆறுதல் சொல்லி பேசியபோது, ''பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்ல தண்ணி திறந்து விடுற வேலை பாக்குறேன். வீட்டுத் தேவைக்காக கொஞ்சம் நெல்லும் போட்டிருக்கேன். ஆனா, இதுலயெல்லாம் பெருசா வருமானமில்ல. எனக்கு ஐந்து ஆணு, ஒரு பொண்ணுனு மொத்தம் ஆறு பிள்ளைங்க. சதீஷ்தான் மூத்தவன். ஐ.டி.ஐ. படிச்சுட்டு எலக்ட்ரிகல் வேலை பார்த்துட்டுருந்தான். அவன் வருமானத்துலதான் குடும்பமே ஓடிட்டுருந்துச்சு. இப்ப எல்லாம் போச்சு.

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

சாகுறதுக்கு முதல் நாள்கூட ஊர்ல மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சம்பளமே வாங்காம ரிப்பேர் செஞ்சு கொடுத்தான். ஆத்துல காவலுக்குப் போனப்போ நானும்கூட போயிருந்தேன். அவன் மேல லாரிய ஏத்தி துள்ளத் துடிக்கக் கொன்ன காட்சியை நேர்ல பார்த்துட்டு... அப்படியே உறைஞ்சு போயிட்டேன்'' என்றவர்,

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

''இதனால என் குடும்பமே இப்ப நடுவீதிக்கு வந்துடுச்சு. அதைப் பத்தியெல்லாம் இப்ப நாங்க கவலைப்படல. ஆனா, இதுக்குப் பிறகாவது இந்த ஊர்ல மணல் கொள்ளை நடக்காம இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்கறதுதான் எங்க எதிர்பார்ப்பு. மணலைக் காப்பாத்த உசுரையே கொடுத்த என் மகனோட ஆசை நிறைவேறினாலே போதும்'' என்று இந்த நிலையிலும் அழுத்தமாக வலியுறுத்தினார்.

சம்பவத்தை அடுத்து, ஊர் மக்கள் சாலை மறியலில் இறங்க, சமாதானப்படுத்தி, அதைக் கைவிடச் செய்த அதிகாரிகள், நம்பியாற்றைச் சுற்றிலும் செக்போஸ்ட்களும் அமைத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, நாங்குநேரி ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலர் டென்சிங் உட்பட 12 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிங்ஸ்டன் (டென்சிங்கின் தம்பி) மற்றும் கிளீனர் அருள் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், சதீஷ்குமாரின் குடும்பத்துக்கு இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை.

சதீஷ்குமார், தினசரி கொண்டு வந்த 300 ரூபாயில்தான் எட்டு பேர் கொண்ட குடும்பமே வாழ்ந்து வந்தது. தற்போதுதான் இரண்டாவது மகன் படிப்பு முடித்து எலக்ட்ரீஷியன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார். சதீஷின் மரணத்தால் குடும்பச் செலவுகள் மட்டுமல்ல... பாலிடெக்னிக், 12|ம் வகுப்பு, 7|ம் வகுப்பு என படிக்கும் மூன்று தம்பிகள் மற்றும் 4-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் குட்டித் தங்கை ஆகியோரின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. ''சதீஷின் தம்பிக்கு அரசாங்க வேலை ஏதாவது கொடுத்தால், அது உதவியாக இருக்கும்'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

வெறிபிடித்த மணல் கொள்ளையர்....பறிபோன இளைஞனின் உயிர் !

இந்த விஷயம் பற்றி பேசிய 'எவிடன்ஸ்' அமைப்பின் நிர்வாகி கதிர், ''இயற்கையைக் காப்பதற்காக தன்னுடைய இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறான் 'பசுமைப் பேராளி' சதீஷ்குமார். சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தால்கூட, லட்சங்களில் நிவாரணத்தை அளிக்கும் அரசு, மணலைக் காப்பதற்காக உயிரைக் கொடுத்த சதீஷ் விஷயத்தில் துளிகூட அக்கறை காட்டவில்லை. அவனுடைய குடும்பம் பொருளாதாரச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் காக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். இயற்கையைக் காப்பாற்றுவதற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கைகோக்க வேண்டும். என்னுடைய பங்காக சிறுதொகையை நான் தருகிறேன்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்.

ஆம்... சதீஷின் குடும்பத்துடைய பொருளாதாரச் சுமையை இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருமே பங்கு போட்டுக் கொள்வதுதான்... இயற்கையை அழிக்கத் துடிக்கும் பஞ்சமா பாதகர்களுக்கு விடக்கூடிய எச்சரிக்கையாக இருக்கும்.

வாருங்கள், அனைவரும் உதவிக்கரம் நீட்டுவோம்!  

மக்கள் தீர்ப்பு!

கடந்த 2004-ம் ஆண்டு இதேபோல் ஒரு கும்பல், நம்பியாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருக்க, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஊர் மக்கள். ஆனால், 'கிராம மக்கள் ஒன்று திரண்டு எங்களைத் தாக்கினர்' என்று மணல் கொள்ளையர்கள் ஒரு புகார் கொடுக்க, கிராமத்தைச் சேர்ந்த 21 பேரை கைது செய்தது போலீஸ். ஒன்பது நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பின்னரே ஜாமீனில் வெளிவந்தனர். 2008-ம் ஆண்டு வரை இழுபட்ட இந்த வழக்கில், 'ஊர் மக்கள் மீது தவறு இல்லை' என கடைசியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு