Published:Updated:

மணல் குவாரிகளாக மாற்றப்படும் மகசூல் பூமிகள்!

கு. ராமகிருஷ்ணன்படங்கள்: மு. ராமசாமி

மணல் குவாரிகளாக மாற்றப்படும் மகசூல் பூமிகள்!

கு. ராமகிருஷ்ணன்படங்கள்: மு. ராமசாமி

Published:Updated:

பிரச்னை

##~##

ஆறுகளைக் குடைந்து குடைந்து, மணலை அள்ளி அள்ளி நீராதாரங்கள் நாசமாக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. அடுத்தக் கட்டமாக... விளைநிலங்களைக் குடைந்தும் மணல் அள்ளும் விபரீதம்... டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தில் வெகுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது! இதன் காரணமாக அக்கம்பக்கம் வயல்களுக்கு நிலத்தடி நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால்... ஆங்காங்கே விவசாயிகள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெங்கடங்கால், ஓர்குடி, எழுசியம், பூலாங்குடி, பட்டமங்கலம், திட்டச்சேரி, மஞ்சவாடி, வடகரை, இருக்கை, திருமருகல், ஒக்கூர், கோகூர், காக்கழனி, சாட்டியங்குடி, உத்தமச்சோழபுரம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் விளைநிலங்கள் எல்லாம் மணல் குவாரிகளாக மாற்றப்பட்டுள்ளன.

வெங்கடங்கால் கிராமத்தில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 30 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள், 20 அடி முதல் 40 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் குவாரிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பலவிதமான பயிர்கள் விளைந்த நிலங்கள், அலங்கோலமாக்கப்பட்டு, பள்ளத்தாக்குகளாக கோரமாகக் காட்சி அளிக்கின்றன.

''கடல்ல இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துலதான் இந்த கிராமங்கள்லாம் இருக்கு. ஆழமா தோண்டித் தோண்டி மணலை அள்ளுனதால கடல் தண்ணி ஊடுருவி, கிணறு, போர்வெல் தண்ணியெல்லாம் உப்பா மாறிடுச்சு. அதனால, குடிக்கிறதுக்கே தண்ணிக்குத் தட்டுப்பாடு வந்துடுச்சு. அங்கங்க பள்ளமா கிடக்கறதால வாய்க்கால்கள் எல்லாம் அப்படி அப்படியே துண்டிச்சுப் போச்சு. அதனால மழை பெய்ஞ்சாலும், பாசனத்துக்கான தண்ணி வராது. பாதைகளையும் உபயோகப்படுத்த முடியல. ஆடு, மாடுகளை அழைச்சுட்டுப் போய் மேய்க்கிறதும் ரொம்பக் கஷ்டமா போயிடுச்சு'' என்று ஏகத்துக்கும் வருத்தம் காட்டுகிறார், வெங்கடங்கால் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி.

மணல் குவாரிகளாக மாற்றப்படும் மகசூல் பூமிகள்!

அருகிலேயே இருக்கும் செம்பியநதி கிராமத்தில் இப்படி விளைநிலங்களில் மணல் குவாரிகள் அமைப்பதற்காக நடந்த முயற்சி, விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய விவசாயி பக்கிரிசாமி, ''எங்க கிராமத்துல, 'கிருஷ்ணமூர்த்தி’ங்கறவருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை 'ஜாகீர் உசேன்’ங்கறவர் விலைக்கு வாங்கி,

7 ஏக்கர்ல மணல் குவாரி அமைக்க ஏற்பாடு செஞ்சார். இதுக்கு வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளுமே உடந்தையா இருந்தாங்க.

சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்புனு தொடர்ச்சியா பல போராட்டங்களை நடத்தினோம். ஆனாலும், குவாரியைத் தடுக்க முடியல. அப்பறம், சென்னை ஹைகோர்ட்டுல கேஸ் போட்டு, மணல் குவாரிக்கு எதிரா இடைக்காலத் தடை வாங்கி இருக்கோம்'' என்று சொன்னார்.

''ஓர்குடி கிராமத்தில் ஒரு செழிப்பான மாந்தோப்பு, மணல் குவாரியாக மாறிப் போச்சு. கீழ்வேளூர் ஒன்றியத்துல

200 ஏக்கரை மணல் குவாரியா மாத்திட்டாங்க. நாகப்பட்டினம் மாவட்டத்துல ஏகப்பட்ட நிலங்களை இப்படி வளைக்க ஆரம்பிச்சுருக்காங்க. விவசாயத்துல போதுமான அளவுக்கு லாபம் கிடைக்கறதில்லை. அதையும் சகிச்சுக்கிட்டு விவசாயம் செய்யலாம்னா... வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை. அதனால, விவசாயிகளெல்லாம் விரக்தியில இருக்காங்க. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கிட்டு, மணல் வியாபாரிங்க பணம் பாக்கறாங்க.

ஒரு குவாரி அமைக்கணும்னா, குறைஞ்சது மூணு ஏக்கர் தேவை. ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய்ல இருந்து மூணு லட்சம் ரூபாய் வரை விலை பேசி வாங்கி குவாரிகளை அமைக்கறாங்க. ஒரு ஏக்கர் நிலத்துல 20 அடி ஆழத்துக்கு தோண்டுனா, 9 ஆயிரம் யூனிட் மணல் கிடைக்குது. ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய்னு வித்தா, குவாரிக்காரங்களுக்கு 90 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். மூணு ஏக்கருக்கு 2 கோடியே 70 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

மணல் குவாரிகளாக மாற்றப்படும் மகசூல் பூமிகள்!

'ஆறடிக்குக் கீழ மணல் எடுக்கக் கூடாது’னு சட்டம் இருக்கு. ஆனா, அதிகாரிகளும் இவங்களுக்குச் சாதகமா இருக்கறதால, பகிரங்கமா இந்தக் கொள்ளை நடந்துக்கிட்டிருக்கு. அரசாங்கம் உடனே இதைத் தடுத்து நிறுத்தாட்டி, வாய்ப்பு கிடைக்கற இடத்துலயெல்லாம் இப்படிப் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அப்பறம், உணவு உற்பத்திங்கறதே கேள்விக்குறியாயிடும்'' என்று ஏகத்துக்கும் வருத்தம் காட்டிய இப்பகுதி முன்னோடி விவசாயியும், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளருமான தனபாலன்,

''மணல் குவாரிகளைத் தடுக்கற அதேசமயம், விவசாயிகளோட விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கறதுக்கும், ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கிறதுக்கும் அரசாங்கம் உதவி செய்யணும். அப்பத்தான் மணல் வியாபாரிகள் ஆசை காட்டினாலும், விவசாயிகள் இப்படியரு முடிவை நோக்கிப் போகாம இருப்பாங்க. இல்லனா... சட்டம் போட்டாகூட இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த முடியாதுங்கறதுதான் நிதர்சனம்.

மணல் அள்ளுறதுக்காக குவாரியை நடத்தறவங்க, 'இந்த நிலத்தில் மீன் வளர்க்கறதுக்காகத்தான் இப்படி தோண்டுறோம்'னு சொல்றாங்க. ஆனா, 20 அடி ஆழ வரைக்கும் தோண்டிட்டு, அதுல மீன் வளர்க்கறதுங்கிறது சாத்தியமில்லாத விஷயம். மணல் அள்ளிட்டா, அந்த நிலம் எதுக்குமே உதவாத 'பாலை’ குழிகளாத்தான் கிடக்கும்'' என்று சொன்னார்.

மணல் குவாரிகளுக்காக நிலத்தை விற்ற விவசாயிகள் மற்றும் நிலத்தை வாங்கி மணல் தோண்டிவரும் நபர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற முயன்றபோது, ஒருவருமே அதைப் பற்றி பேச முன்வரவில்லை.

இந்த விஷயத்தை, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனியநாதன் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது... ''இது என்னங்க அநியாயமா இருக்கு... 20 அடி ஆழத்துல மணல் எடுக்குறாங்களா... அதுவும் விவசாய நிலத்துலயா'' என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியவர்,

''உடனடியா விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்'' என உறுதியாகச் சொன்னார்.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், சமீபகாலமாக முதல்வர் ஜெயலலிதா காண ஆரம்பித்திருக்கும் இரண்டாம் பசுமைப் புரட்சி என்பது கனவாகவே முடிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை!

'நிலம் பிளந்து கொள்ளும்!’

'மணல் அள்ளுவதால் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?’ என்று, தஞ்சாவூர், பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகத்தின் மண் மற்றும் கட்டடப் பொறியியல் துறை பேராசிரியர் சி. சங்கரிடம் கேட்டபோது, ''தொடர்ந்து மணல் அள்ளுவதால், நிலப்பிளவு ஏற்படும். ஏறத்தாழ அதை பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறி என்றுதான் சொல்வோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்படி தோண்டப்படும் மணலில் உப்புத் தன்மை கண்டிப்பாக இருக்கும். இத்தகைய மணலைப் பயன்படுத்திக் கட்டடம் கட்டினால், நான்கு ஆண்டுகளுக்குக்கூட அது நிலைத்து நிற்காது. இத்தகைய மணல் குவாரிகள், சுற்றுச்சூழலுக்கும் கேடு, மனித உயிர்களுக்கும் உலை வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று எச்சரிக்கை செய்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism