Published:Updated:

புது நெல்லு... புது நாத்து...

மகசூலுக்கு ஒரு ரகம்... மழையைத் தாங்க ஒரு ரகம்! காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்

##~##

'மகசூல் குறைவாகக் கிடைத்தாலும் பரவாயில்லை. பாரம்பரிய ரகங்கள் அழிந்துவிடக் கூடாது’ என்று பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிப்பிடித்து சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் இருப்பதைப் போல... பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் வெளியிடும் புதுப்புது ரகங்களையும் உடனடியாக சோதனை செய்து பார்க்கும் விவசாயிகளும் உண்டு. அத்தகையோரில் ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம், நயம்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். இவர், 10.09.11-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான 'அக்ஹோனி போரா...வேக வைக்காமலே சோறாக மாறும் நெல்!’ என்ற கட்டுரையின் மூலம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.

''வேளாண் துறை மூலமா நடக்கற நிறைய கருத்தரங்குகளுக்கு நான் போயிருக்கேன். அதேமாதிரி விவசாய சுற்றுலா மூலமா, நிறைய ஆராய்ச்சி நிலையங்களுக்கும் போயிருக்கேன். அந்த மாதிரி சமயங்கள்ல கிடைக்கற புது ரகங்களை வாங்கிட்டு வந்து பயிர் செய்றது என்னோட வழக்கம். சில ரகங்கள் விளைச்சல் அதிகமா இருக்கும்... சில ரகங்கள் பூச்சி, நோய் தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியதா இருக்கும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டிருக்குற மேம்படுத்தப்பட்ட பூசா பாசுமதி-1, பூசா பாசுமதி ஹைபிரீட்-10; நெல் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டிருக்குற வாசுமதி, சுகந்தாமதி; ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டிருக்கற ஆடுதுறை-49 மாதிரியான நெல் ரகங்களை என்னோட நிலத்துல பயிர் செஞ்சுருக்கேன். இதெல்லாம், இந்த ரெண்டு வருஷத்துல வெளியிடப்பட்ட ரகங்கள். பூச்சி, நோய் தாக்குதலை சமாளிச்சு நிக்குறதோட, நல்ல மகசூலும் கொடுக்குது'' என்று உற்சாக முன்னுரை தந்த சிவலிங்கம், தொடர்ந்தார்.

புது நெல்லு... புது நாத்து...

தனித்தனி சிறப்புகள்!

''ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு தனி சிறப்பும் இருக்கு. வாசுமதி, சுகந்தாமதி ரெண்டுலயும் நல்ல வாசனை இருக்கும். பொங்கல், பிரியாணினு விதம்விதமா சமைக்கலாம்; மேம்படுத்தப்பட்ட பூசா பாசுமதி-1 ரகத்தை, குருத்துப்பூச்சி தாக்காது; பூசா பாசுமதி ஹைபிரீட்-10 ரகம், ஒரு ஹெக்டேருக்கு 10 டன் வரைக்கும் மகசூல் கொடுக்கும்; ஆடுதுறை-49.. மழை, காத்து எல்லாத்தையும் சமாளிச்சு நிக்குற சன்ன ரகம். இந்த ரகங்களையெல்லாம் சாகுபடி செய்றதுக்கு, குறைவான அளவுலதான் ரசாயன உரத்தைப் பயன்படுத்தினேன். பூச்சிக்கொல்லிகளை துளிகூட பயன்படுத்தவே இல்லை.

சோதனை முறை சாகுபடி!

மொத்தம் நாலு ஏக்கர் பாசன நிலமும், அஞ்சு ஏக்கர் மானாவாரி நிலமும் இருக்கு. 1 ஏக்கர்ல ஆடுதுறை-49, 30 சென்ட் நிலத்துல வாசுமதி, 30 சென்ட் நிலத்துல சுகந்தாமதி, 30 சென்ட் நிலத்துல மேம்படுத்தப்பட்ட பூசா பாசுமதி-1, 30 சென்ட் நிலத்துல பூசா பாசுமதி ஹைபிரீட்-10... இப்படி மொத்தம் ரெண்டு ஏக்கர் 20 சென்ட் நிலத்துல சாகுபடி செஞ்சேன்.  

புது நெல்லு... புது நாத்து...

நிறைவான மகசூல்!

ஒரு ஏக்கர்ல விதைச்ச ஆடுதுறை-49 நெல்லுல, 33 மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. 30, 30 சென்ட் நிலத்துல போட்டிருந்த சுகந்தாமதி, வாசுமதி, மேம்படுத்தப்பட்ட பூசா பாசுமதி-1, பூசா பாசுமதி ஹைபிரீடு-10 ஒவ்வொண்ணுலயும் தனித்தனியா ஏழு மூட்டை (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது.

புது நெல்லு... புது நாத்து...

விதைநெல்லாத்தான் எப்பவும் விற்பனை செய்யுறது வழக்கம். இந்தத் தடவை, ஆடுதுறை-49 ரக நெல்லை கிலோ 25 ரூபாய்னும்... மத்த ரகங்களை கிலோ 50 ரூபாய்னும் கொடுக்கலாம்னு இருக்கேன். இந்த விலையில வித்தா... ஆடுதுறை-49 ரகம் மூலமா 61 ஆயிரத்து 875 ரூபாய் கிடைக்கும். மத்த ரகங்கள் மூலமா, 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபா கிடைக்கும். எல்லாத்தையும் கூட்டினா... 1 லட்சத்து

66 ஆயிரத்து 875 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் கழிச்சா... 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபமா கையில நிக்கும்'' என்ற சிவலிங்கம் நிறைவாக,

''எப்பவும் இந்த மாதிரி புது ரகங்களுக்கு ரசாயன உரங்களைத்தான் பரிந்துரை செய்யுறாங்க. அதனாலதான் நான் கொஞ்சமா ரசாயனத்தைப் பயன்படுத்த வேண்டியதா போயிடுச்சு. அடுத்த சம்பா பட்டத்துல இந்த ரகங்களையெல்லாம் முழு இயற்கை முறையிலேயே சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுக்க தீர்மானிச்சுருக்கேன். அது கிடைக்கும்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. ஏன்னா... இதுக்கு முன்ன 'அக்ஹோனி போரா’ நெல் ரகத்தை, முழுக்க இயற்கையில சாகுபடி செஞ்சுதான் மகசூல் எடுத்தேன்.

இப்பவே, மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா வளர்ப்புனு முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சுட்டேன். முழு இயற்கையில சாகுபடி பண்றப்போ... கிட்டத்தட்ட மூணாயிரம் ரூபாய்ல இருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ரசாயன உரங்களுக்கான செலவை மிச்சப்படுத்தலாம். கூடுதல் மகசூலும் கிடைக்க வாய்ப்பிருக்கு. இயற்கை முறையில விளைவிச்சா... கூடுதல் விலைக்கும் விக்க முடியும்'' என்று சந்தோஷமாகச் சொன்ன சிவலிங்கம், மேலே குறிப்பிட்ட புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்த விதம் குறித்தும் தெளிவாகவே விளக்கினார் இப்படி-

அனைத்துப் பட்டங்களும் ஏற்றவை...

ஏக்கருக்கு 5 கிலோ விதை!

'இந்தப் புதிய ரகங்கள் அத்தனையுமே அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடிய தன்மை கொண்டவை. அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவை. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். நான்கு லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சாணம், ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து, விதையை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து... தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, ஒரு சாக்கில் இட்டுக் கட்டி, 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருந்து, மறுநாள் நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

15 நாட்களில் நாற்று!

ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் அளவில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் நிலத்தை நன்கு உழுது சமப்படுத்தி, இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி, விதைநெல்லைத் தூவி விதைக்க வேண்டும். 12 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடித்துவிட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் தண்ணீரை இப்படி நிறுத்தி, வடிக்க வேண்டும். அதன் பிறகு, தண்ணீரை வடிக்க வேண்டிய அவசியமில்லை. 15-ம் நாளில் நாற்று தயாராகி விடும்.

முக்கால் அடி இடைவெளி!

நடவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே வயலைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட வேண்டும். வயலில் இரண்டு உழவு செய்து, ஏக்கருக்கு 5 கிலோ சணப்பு என்கிற விகிதத்தில் விதைத்து, 55 நாட்களுக்குப் பிறகு பூ எடுத்தவுடன் ரோட்டாவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, வயலை சேறாக்கி, ஒரு ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சம், 40 கிலோ டி.ஏ.பி., 5 கிலோ நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை கலந்துஇட வேண்டும்.

தலா இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 20 கிலோ மட்கிய எருவில் கலந்து ஒருநாள் வைத்திருந்து, வயலில் தூவி, முக்கால் அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 15 முதல் 19 நாட்கள் வயதுள்ள நாற்றாக இருந்தால்... ஒரு குத்துக்கு ஒரு நாற்று என நடவு செய்ய வேண்டும். அதற்கு மேல் வயதிருந்தால், ஒரு குத்துக்கு இரண்டு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வர வேண்டும்.  

பூச்சிக்கு வசம்புத்தூள்!

புது நெல்லு... புது நாத்து...

நடவு செய்த 20-ம் நாளில் கோனோ வீடர் மூலம் களைகளை அழுத்திவிட வேண்டும். 35-ம் நாளில் ஆட்கள் மூலம் களை எடுத்து, 15 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைக் கலந்து வயலில் இட வேண்டும். 60 மற்றும் 75-ம் நாட்களில் 10 கிலோ வசம்புத்தூளை வயலில் தூவிவிட வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

மேம்படுத்தப்பட்ட பூசா பாசுமதி-1, பூசா பாசுமதி ஹைபிரீடு-10 ஆகிய ரகங்களை 110 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம் (இவற்றின் மொத்த வயது 125 நாட்கள்). சுகந்தாமதி, வாசுமதி, ஆடுதுறை-49 ஆகிய ரகங்களை நடவு செய்த 115 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யலாம் (இவற்றின் மொத்த வயது 130 நாட்கள்).

 தொடர்புக்கு,
சிவலிங்கம்,
செல்போன்: 77084-13085.

அடுத்த கட்டுரைக்கு