Published:Updated:

மா சாகுபடி...

கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்!ஆர்.குமரேசன்

மா சாகுபடி...

கன்றில் கவனம் வைத்தால், கடைசி வரை லாபம்தான்!ஆர்.குமரேசன்

Published:Updated:
##~##

சென்ற இதழ் தொடர்ச்சி...

 'நேரடி குரல் பதிவு சேவை' (044 -66808003) மூலமாக, 'மா மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்திருந்தாலும், காய் பிடிப்பதே இல்லை. பூ பூத்ததுமே உதிர்ந்து விடுகின்றன. பேசாமல் இந்த மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு, தென்னையை நடவு செய்யலாமா?' என்று வருத்தப்பட்டு பேசியிருந்தார் திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி தேவநாதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவருடைய தோட்டத்துக்கு, பசுமை டாக்டராக மா சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த, திண்டுக்கல் மாவட்டம், பழனி, சௌந்திரராஜன் பயணப்பட்டு, பல்வேறு யோசனைகளை எடுத்து வைத்தார். இதையெல்லாம் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.

அதன்பிறகு, ஏகத்துக்கும் நம்பிக்கை பிறக்க... ''பக்கத்துல இருக்கற இன்னொரு நிலத்துலயும் மா நடவு செய்யலாம்னு இருக்கேன். அதுக்கும் உங்களோட ஆலோசனை கிடைச்சா உதவியாயிருக்கும்'' என தேவநாதன் வைத்த வேண்டுகோளுக்கு... ''அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு'' என்றபடி பசுமை டாக்டர், பாடமாகவே நடத்திய விஷயங்கள் இந்த இதழில் இடம்பிடிக்கின்றன.

மா சாகுபடி...

'மா சாகுபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. புதிதாக மா கன்றுகளை நடவு செய்யும்போது ரகங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். 'நல்ல விலை கிடைக்கும்’ என்று ஏதாவது ஒரு வெளி மாநில ரகத்தை வாங்கி விடக்கூடாது. நமது பகுதியில் நல்ல விலை கிடைக்கும் ரகங்கள், அதேசமயத்தில் அதிக விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் என்று தேர்வு செய்து நட வேண்டும்.

அப்படியே நடக்கூடாது!

தரமான நர்சரிகளில் கன்றுகளை வாங்க வேண்டும். வாங்கி வந்த கன்றுகளை உடனே நடவு செய்து விடாமல்... நடவு செய்ய உள்ள நிலத்தின் மேல் மண்ணை, கன்று இருக்கும் பையில் இட்டு, தோட்டத்தில் வழக்கமாக பாசனத்துக்குப் பயன்படுத்தும் அதே நீரைத் தெளித்து நிழலில் வைத்திருந்து, புதிய தளிர்கள் வரும் வரை காத்திருந்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கன்றுகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும்.

மா சாகுபடி...

கன்றுகளுக்கு இடையே 30 அடி இடைவெளி கொடுக்கலாம். அடர் நடவு முறையில் 15 அடி இடைவெளியிலும் தற்போது நடுகிறார்கள். மண்ணின் வளம், நீர் வசதி, நடவு செய்யும் ரகத்தின் வளர்ச்சி விகிதம் ஆகியவையின் அடிப்படையில்தான் இடைவெளியைத் தீர்மானிக்க வேண்டும். ரகம், இடைவெளி ஆகியவற்றைத் தீர்மானித்த பிறகு 2 கன அடியில் குழிகளை எடுத்து ஆறப்போட வேண்டும். தலா 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 3 கிலோ தொழுவுரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் கொஞ்சம் மேல் மண்ணைக் கலந்து ஒவ்வொரு குழியிலும் இட்டு கன்றை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் தேங்கக் கூடாது!

கன்றுகளை நடவு செய்யும்போது அடிப்பகுதிக்கு அருகே பக்கவாட்டில் கிளைகள் இருந்தால், அதை வெட்டி விடவேண்டும். வெட்டிய இடத்தில் காப்பர் ஆக்சிக்-குளோரைடு பசையைத் தடவிவிட வேண்டும். நம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவதைப் போலத்தான் இதுவும். பாசனத்தைப் பொருத்தவரை சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. குழிகளில் ஈரம் காயாதவாறு பாசனம் செய்தாலே போதும். அதேநேரத்தில், கன்றின் மையத் தண்டுப்பகுதியைச் சுற்றி தண்ணீரைத் தேங்க விடக்கூடாது. இதைச் சரியாகச் செய்தாலே, பாதி நோய்களைத் தடுத்து விடலாம்.

மா சாகுபடி...

நடவு செய்த ஆறாவது மாதம், தளிர்களில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருப்பதற்காக, ஏதேனும் ஒரு வளர்ச்சி ஊக்கியுடன் கூடிய பூச்சிக்கொல்லி அல்லது பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில், ரசாயனம் அல்லது இயற்கை என அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மழைக் காலத்துக்கு முன்பாக உரத்தைக் கொடுக்க வேண்டும்.

மரத்தின் வளர்ச்சி, மண்ணின் தன்மை, பாசன வசதி ஆகியவை நன்றாக இருந்தால்... மூன்றாம் ஆண்டிலேயே மரங்கள் பூக்கத் தொடங்கி விடும். அப்போது மரத்தின் வளர்ச்சியைப் பொருத்து... அதன் தாங்கும் திறனின் அடிப்படையில் தேவையான அளவுக்கு மட்டும் பூக்களை அனுமதிக்க வேண்டும். அதிகப்படியாக உள்ள பூக்களை உருவி விடுவது நல்லது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதேமுறையைக் கடைபிடிக்க வேண்டும். அந்த நேரத்தில் மண்ணின் வளத்துக்கு ஏற்ப பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவுக்குக் கொடுக்க வேண்டும்.

மண் பரிசோதனை மூலம், 'நமது மண்ணில் என்னென்ன சத்துக்கள் அதிகமாக உள்ளன, எது குறைவாக உள்ளது?’ எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப, சத்துக்களைக் கொடுக்க வேண்டும். இரண்டு இட்லி சாப்பிடும் நபருக்கு 10 இட்லியும், 10 இட்லி சாப்பிடும் நபருக்கு இரண்டு இட்லியும் கொடுப்பது போலத்தான் மண்ணிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் உரமிடுவதும்.’

மா சாகுபடி...

பாடத்தை முடித்த சௌந்திரராஜன், ''காய்க்க ஆரம்பிச்ச பிறகு, காயோட வளர்ச்சிக்காக ஒரு முறை இயற்கை வளர்ச்சி ஊக்கி தெளிக்கணும். நல்லா விளைஞ்ச காய்கள 80 சதவிகிதம் முத்தின நிலையில அறுவடை செய்யணும். சிலர் 50% முத்தினதும் பறிச்சுடுவாங்க... இது தப்பான விஷயம். காய்கள அடிபடாம பறிக்கணும்கறதும் முக்கியம். அப்பத்தான் அது நல்லபடியா பழுத்து வரும். அதேபோல பேக்கிங் விஷயத்துலயும் கவனமா இருக்கணும்.

இப்பல்லாம் பேக்கிங் பண்றதுக்கு நிறைய வசதிங்க வந்துடுச்சு. அதைப் பயன்படுத்தி காய்கள அடைச்சு விற்பனைக்கு அனுப்பினா, கூடுதல் லாபம் கிடைக்கறதுக்கு நல்ல வாய்ப்பிருக்கு'' என்று சந்தைக்கான சங்கதிகளையும் சொன்னார்.

ஆலோசனைகள் முழுவதையும் கேட்டுக் கொண்ட தேவநாதன், ''காய்க்கலையேனு கலங்கிப் போயிருந்த எனக்கு சரியான ஆலோசனையைக் கொடுத்தீங்க. இனி, நானே களத்துல இறங்கி, கூடுதல் கவனத்தோட பராமரிக்கப் போறேன். உங்களுக்கும், இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்த பசுமை விகடனுக்கும் எப்பவும் நான் நன்றியுள்ளவனா இருப்பேன்'' என்று நெகிழ்ந்தபடி விடை கொடுத்தார்.

பெங்களூராவைக் காயாகவே விற்கலாம்!

மா சாகுபடி...

பெங்களூரா விவசாயிகள் கவனத்துக்காக சௌந்திரராஜன் சொன்ன சந்தைத் தகவல்: பெங்களூரா ரகத்தின் விலை, பழக்கூழ் தொழிற்சாலைகளின் தேவையின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு பழக்கூழ் நிறுவனங்கள் உற்பத்தி செய்த கூழ், இன்னும் இருப்பில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பெங்களூரா ரகம் அதிகளவில் விளைந்துள்ளது. இதனால் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் நல்ல விளைச்சல் இருந்தாலும், விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், பெங்களூரா ரகத்தைப் பயிரிட்ட விவசாயிகள். இதைச் சமாளிக்க, கறிக்கான காயாக விற்பதுதான் நல்ல வழி. டிசம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து, டன் கணக்கில் கறி மாங்காய்கள், கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. அப்போது கிலோ 25 ரூபாய் வரைகூட விலை கிடைக்கும். இந்தச் சந்தைத் தேவையை மனதில் வைத்து, காய்களாகவே அறுவடை செய்து லாபம் பார்க்கலாம். இதற்கு வசதியாக இந்த ரகக் காய்களை (கார் காய்) டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்து விற்கலாம். இந்த சீஸனில் காய்த்துக் குலுங்கச் செய்வதற்கும் தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism