Published:Updated:

ஏ குருவி.. சிட்டுக்குருவி..!

டென்ஷனைக் குறைக்கும் குருவிகள் சத்தம்!என்.சுவாமிநாதன்

ஏ குருவி.. சிட்டுக்குருவி..!

டென்ஷனைக் குறைக்கும் குருவிகள் சத்தம்!என்.சுவாமிநாதன்

Published:Updated:
##~##

வீடுகள், வீதியோர மரங்கள், ஆலயச் சுவர்கள்... என நீக்கமற நிறைந்திருந்த சிட்டுக்குருவிகள்... தற்போது நம் நாட்டின் பல பாகங்களிலும் காண்பதற்கரிய பறவையாக அருகிக் கொண்டிருக்கின்றன. செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு, இந்தக் குருவிகளுக்கு எமனாக இருக்கிறது என்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேசமயம், 'செல்போன் கதிர்வீச்சுக்கும் சிட்டுக்குருவிகள் குறைந்து வருவதற்கும் தொடர்பில்லை' என்றொரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது!

 இந்நிலையில், எது எப்படி இருந்தாலும், சிட்டுக்குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது உண்மை. எனவே, அவற்றைக் காப்பாற்றவேண்டும் என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதியை உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தினத்தை சம்பிரதாயத்துக்காக கொண்டாடாமல், சாதிக்கும் தினமாகவே கொண்டாடி வருகின்றனர்... கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள். ஆம், இந்த முத்தரப்பினரும் இணைந்து எடுத்துவரும் கூட்டுமுயற்சியின் காரணமாக, ஏகப்பட்ட சிட்டுக்குருவிகள் தற்போது மாவட்டத்தில் சிறகடித்து  பறக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஏ குருவி.. சிட்டுக்குருவி..!

இதுபற்றி நம்மிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட 'இயற்கையின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் கல்வியாளர் டேவிட்சன், ''இன்னிக்கு உலகம் போகுற வேகத்தில்... செல்போன், இன்டர்நெட்னு ரொம்பவே முன்னேறிட்டோம். அதேசமயம் பாதிப்புகளும் பெருகிட்டே இருக்கு. செல்போன் டவர்ல இருந்து வர்ற கதிர்வீச்சு, சிட்டுக்குருவி இனம் அழியறதுக்கான முக்கியக் காரணமா இருக்குனு சொல்றாங்க.

சமீபத்துல மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் ஒரு ஆய்வு நடத்தி இதை உறுதிப்படுத்தியிருக்கு. அம்பது சிட்டுக்குருவி முட்டைகளை செல்போன் ரேடியேஷன்ல வெச்சிருக்காங்க. அந்த முட்டைகள் பொரிச்சுப் பிறந்த குஞ்சுகள், பாதிக்கப்பட்ட உடலமைப்புகளோட பிறந்திருக்கறத உறுதிப்படுத்தியிருக்காங்க. அதுங்களோட இனப்பெருக்க உறுப்புகளும் தீவிரமா பாதிக்கப்பட்டிருக்கு. இந்த கதிர்வீச்சு மட்டுமில்லாம... வயல்ல தெளிக்கற ரசாயன உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாம்கூட குருவிகளோட அழிவுக்குக் காரணமா இருக்கு.

அதனாலதான், ஒவ்வொரு வருஷமும் எங்க அமைப்பின் சார்பா சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடிட்டிருக்கோம். அந்த சமயத்துல, தன்னார்வ அமைப்புகளோட சேர்ந்து, அரசாங்க உதவியோட... சிட்டுக்குருவி வளர்க்க விரும்புறவங்களுக்குப் பயிற்சி கொடுத்து இலவசமா கூடையும் கொடுத்துக்கிட்டிருக்கோம்.

நாகர்கோவில்ல விவசாயிகளும், வியாபாரிகளும் சேர்ந்து உருவாக்கியிருக்குற 'அப்டா’ மார்க்கெட்டில் ஆறு வருஷமா சிட்டுக்குருவி வளத்துக்கிட்டிருக்காங்க. அவங்களுக்குதான் இந்த வருஷம் கூடுகளைக் கொடுத்தோம்.

இலக்கியத்தில் சொல்லப்படுற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைனு ஐந்து வகை நிலமும் குமரி மாவட்டத்தில் உண்டு. அதனால இயல்பாகவே பறவைகள் வாழ்றதுக்கு ஏத்த சூழ்நிலை இங்க இருக்கு. அதனாலதான் இந்த முயற்சியை இங்கிருந்து துவங்கியிருக்கோம்'' என்ற டேவிட்சன்,

ஏ குருவி.. சிட்டுக்குருவி..!

''சிட்டுக்குருவி ஒரு மென்மையான பறவை. அதை வீட்டில் வளக்கறப்போ... மனசுக்கு அமைதி கிடைக்கும். முன்ன மனிதர்களோடு நெருங்கிப் பழகின இனம்தான் சிட்டுக்குருவி. வீட்டுக் கூரை, ஓடுகளில் உள்ள துவாரங்கள்ல கூடு கட்டி இருக்கும். இப்போ, வீட்டு கட்டமைப்புகள் மாறி, நகர்ப்புற விரிவாக்கம்னு மரங்களையும் வெட்டிட்டதால எல்லாம் மாறிப் போச்சு. வீட்டுக்கு வீடு மரத்தோட சிட்டுக்குருவியையும் வளர்க்கணும்கிறதுதான் எங்களோட ஆசை'' என்றார், உருக்கமாக.

நாகர்கோவில் 'அப்டா' சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளிலும் சிட்டுக்குருவிகளின் கூடுகள் உள்ளன. ஒரு கடையில் பணியாற்றும் ஊழியர் சுயம்புலிங்கம், ''இங்க எல்லா கடைகள்லயும் சிட்டுக்குருவிகளுக்குக் கூடு வெச்சுருக்கோம்.

அதனால மார்க்கெட்டுக்குள்ள நூத்துக்கணக்கான குருவிகள் இருக்கு. அட்டைப் பெட்டியில ஓட்டை போட்டு வெச்சா போதும். தேவையான சாமான்களை எடுத்துட்டு வந்து குருவிகளே கூட்டைக் கட்டிக்கும். நாம தொந்தரவு செய்யாம இருக்கணும், அவ்வளவுதான்.

இங்க கிடைக்கிற காய்கறிக் கழிவுகளையே குருவிகள் சாப்பிட்டுக்கும். எங்க கடை ஷட்டர்ல ஒரு குருவி கூடு கட்டியிருக்கு. அதனால நாங்க ஷட்டரை அடைக்குறதே இல்ல. எங்களோட கடுமையான வேலைகளுக்கு இடையில, இந்தக் குருவிகளோட சத்தம்தான் எங்க பிஸ்னஸ் டென்ஷனையே குறைக்குது'' என்கிறார், சந்தோஷமாக.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த முயற்சி... காஷ்மீர் வரை பரவுவது... நம் ஒவ்வொருவரின் கைகளில்தான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism