Published:Updated:

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

Published:Updated:
##~##

யாராவது, நடக்க முடியாத விஷயத்தைச் சொல்லுறப்ப, 'கேப்பையில (கேழ்வரகு) நெய் வடியுதுனா, கேப்பாருக்கு புத்தி எங்க போச்சு?’னு சொல்றது வழக்கம். ஆனா, கேழ்வரகுல நெய் (எண்ணெய்) இருக்கற விஷயம் பலருக்கும் தெரியாது. அரிசி, கேழ்வரகு இதுமாதிரியான தானியங்களோட தோல் பகுதியில, எண்ணெய் இருக்குதுங்க. அதைத்தான் தவிட்டு எண்ணெய்னு (Bran Oil) சொல்றாங்க. இந்த எண்ணெயை, சமையலுக்கும் தாராளமா பயன்படுத்தலாம்.

தேங்காயை அறுவடை செய்ததும், கண்டபடி குவிச்சு வைக்கறதுதான் வழக்கம். இப்படி செய்யுறப்ப தேங்காய் கெட்டுப் போறதுக்கு நிறையவே வாய்ப்பு உண்டு. அதாவது, தேங்காயோட குடுமி இருக்கற பக்கம் (கண் பகுதி), தேங்காய் தண்ணி தேங்கி நிக்கும்போது, சீக்கிரமா அழுகிடும். அதைத் தடுக்கறதுக்கு குடுமி பாகத்தை மேல் பக்கமா இருக்கற மாதிரி அடுக்கி வெச்சா... ரொம்ப நாளைக்குக் கெட்டுப் போகாம இருக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேங்காயை உடைச்சுட்டா... மொத்தத்தையும் முழுசா சமையலுக்குப் பயன்படுத்திட முடியாது. ரெண்டு, மூணு நாளைக்கு வெச்சுருந்துதான் பயன்படுத்துவோம். ஆனா, அதுக்குள் பூசணம் புடிச்சி கெட்டுப் போயிடும். இதைத் தடுக்கவும் ஒரு வழி இருக்கு. சமைச்சது போக மீதியுள்ள தேங்காயை, நெருப்புல காட்டி, எடுத்து வெச்சா... ஒரு வாரத்துக்குக் கூட கெட்டுப்போகாம இருக்கும்ங்க.

மண்புழு மன்னாரு !

சந்தனம், மலைவேம்பு இதுமாதிரியான கன்னுகள உற்பத்தி செய்றது சாமானியப்பட்ட வேலையில்ல. அதுங்களோட விதைகளை முளைக்க வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். நாம என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், 20% முளைப்புத் திறன்தான் இருக்கும். இந்த முளைப்புத் திறன அதிகரிக்கறதுக்கும் ஒரு உபாயம் இருக்கு. அதாவது, இந்த விதைகளைத் தீவனத்தோட கலந்து ஆடுங்களுக்குக் கொடுத்தா, அதோட புழுக்கையில முழுசா விதை வெளியில வந்து விழுந்துடும். அதை எடுத்து முளைக்க வெச்சா, 80% மேல முளைப்புத் திறன் இருக்கும். காட்டுல சும்மா சல்லுனு வளர்ந்து நிக்கற சந்தனம், மலைவேம்பு... மரமெல்லாம் இப்படி கால்நடைகள், பறவைங்க எச்சத்து மூலமா விழுந்து முளைச்சதுதான்.

வீட்டுக்கு கண்ட, கண்ட நிறத்துல பெயின்ட் அடிக்கிற பழக்கம் இப்ப பெருகிக்கிட்டு இருக்கு. அந்தக் காலத்துல எவ்வளவு பெரிய மாளிகையா இருந்தாலும், வெள்ளை நிற சுண்ணாம்புதான் அடிப்பாங்க. இப்பக்கூட பட்டணத்துப் பக்கம் வந்தீங்கனா, ஃபைவ் ஸ்டார் ஓட்டல் எல்லாம், வெள்ளை நிறத்துல மின்னுறத பாக்கலாம். இதுக்குப் பின்னணியில அறிவியல் காரணம் இருக்கு. அதாவது, வெள்ளை நிறம்கிறது... குளோபல் வாமிங்கை உருவாக்கக் கூடிய பசுமை இல்ல வாயுக்கள பிரதிபலிக்கிறது இல்லையாம். அதனாலதான், 'முடிஞ்ச அளவுக்கு வெள்ளை வண்ணத்தை வீட்டுக்குப் பூசுங்க’னு சர்வதேச விஞ்ஞானிங்க சொல்லிட்டிருக்காங்க.

செடிமுருங்கை... பயிர் செய்யுறப்ப ஒரு விஷயத்துல கவனமா இருக்கணும். அதாவது, மூணு அடி உயரத்துல செடி வளர்ந்த உடனே, நுனியைக் கிள்ளி விடணும். இப்படி செஞ்சா, நிறைய பக்கக் கிளைங்க உருவாகி மகசூல் அதிகமா கிடைக்கும்.

கடினமானத் தோல் இருக்கற சுரை, பீர்க்கன், பாகல், புடலை... விதையை அப்படியே விதைச்சா, சீக்கிரம் முளைக்காது. அதனால, ஒரு லிட்டர் தண்ணியில, அரை கிலோ பசுஞ்சாணத்தைக் கரைச்சு, அதுல விதையைக் கொட்டி, ராத்திரி முழுக்க ஊற வைங்க. மறுநாள் காலையில எடுத்து, விதைங்க. இப்படிச் செய்யறதால, முளைப்புத் திறனும் அதிகரிக்கும், நல்ல விளைச்சலும் கிடைக்கும்.

கோழி முட்டையை அடைக்கு வைக்கும்போது, ஒரு நுணுக்கத்தை செய்ங்க. முட்டையை தினமும், ஒரு முறை திருப்பி, திருப்பி வையுங்க. இதனால முட்டையோட எல்லா பாகத்துக்கும், வெப்பம் சீரா கிடைக்கும். இப்படி 19-ம் நாள் வரைக்கும் செய்தா, பழுதில்லாம குஞ்சு பொறிக்கும். இதே நுட்பத்துலதான் குஞ்சு பொறிக்கும் இயந்திரம் (இன்குபேட்டர்) செயல்படுது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism