Published:Updated:

பத்மஸ்ரீ கனகாம்பரம்...

விருது வாங்கிய விவசாயி காசி. வேம்பையன்

பத்மஸ்ரீ கனகாம்பரம்...

விருது வாங்கிய விவசாயி காசி. வேம்பையன்

Published:Updated:

விருது

##~##

'அதி நவீன ஆராய்ச்சிக் கூடங்களில், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து, பல பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகளைக் கொண்டுதான் புதியனவற்றைக் கண்டு பிடிக்க முடியும்’ என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் கூற்றைத் தவிடு பொடியாக்கி இருக்கிறார், புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயி வெங்கடபதி. கனகாம்பரம், சவுக்கு போன்ற பயிர்களில் புதிய ரகத்தைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதால் இவருக்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, 'பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருது பெற்ற உற்சாகத்தில் இருந்த வெங்கடபதிக்கு வாழ்த்துக்களைச் சொல்வதற்காகச் சென்றோம். ''நாங்க பரம்பரையா விவசாயம்தான் பாக்குறோம். நாலாம் கிளாஸுக்கு மேல பள்ளிக்கூடம் போகல.

16 வயசுலயே எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு. 19 வயசுக்கு மேலதான் விவசாயம் பாக்க ஆரம்பிச்சேன்.

ஒரு தடவை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரிக்குப் போயிருந்தேன். அப்போ அங்க சம்பந்தமூர்த்தி முதல்வரா இருந்தார். அவர், எனக்கு ரெண்டு, மூணு கனகாம்பரச் செடிகளைக் கொடுத்தாரு. அதை நட்டு வளத்தப்போ... அதிகளவுல பூ கிடைச்சுது. 'இதுல இருந்து நாத்துகள உற்பத்தி பண்ணிப் பாக்கலாம்’னு யோசனை வந்தது. அதுக்கான வழிமுறைகளைத் தேடி அலைஞ்சப்போ... 'கதிர் வீச்சு’ முறையில் நாற்று உற்பத்தி பண்றதைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன்.

பத்மஸ்ரீ கனகாம்பரம்...

அப்பறம், கல்பாக்கம் அணுமின் நிலையத்துல அனுமதி வாங்கி, 'கதிர் வீச்சு’ மூலம் 100 கனகாம்பர ரகங்களை உருவாக்கினேன். அதுல நல்லா வளர்ந்த ஒரு ரகத்தை தாய் செடியா வெச்சு... 'குளோனிங்’ முறையில கனகாம்பரம் நாத்துகளை உற்பத்தி செஞ்சேன்.

இதுக்கு எனக்கு ரொம்ப உதவி செஞ்சவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்தான். அதனால, அவர் பெயரையே நான் உருவாக்குன ரகத்துக்கு வெச்சுட்டேன்'' என்று கனகாம்பரக் கதை சொன்ன வெங்கடபதி, சவுக்கு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  

பத்மஸ்ரீ கனகாம்பரம்...

''இதே மாதிரி, வீரிய ரகமான 'ஜுங்குலியானா’ ரக சவுக்குலயும் கதிர் வீச்சு மூலமா, ஒரு ரகத்தை உருவாக்கினேன். அதுல, அஞ்சு வருஷத்துல ஏக்கருக்கு 200 டன் மகசூல் கிடைச்சுது.

அதுக்குப்பிறகு அந்த ரக நாத்துக்களை அதிகளவுல உற்பத்தி செஞ்சு, இந்தியா முழுதுக்கும் கொடுத்திருக்கேன். இதைக் கண்டுபிடிக்கறதுக்கு எனக்கு உதவி செஞ்சவர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. அதனால, சவுக்கு ரகத்துக்கு அவர் பேரை வெச்சுட்டேன்.

இந்த கனகாம்பரம், சவுக்கு ரெண்டுக்குமே காப்புரிமையும் வாங்கியிருக்கேன். இந்த ரகங்களைப் பயிர் செய்யுற விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கறத பாக்குறப்போ... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காக, எனக்கு இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கற 'பத்மஸ்ரீ' விருது, எனக்கு மட்டுமில்ல, ஒட்டுமொத்த விவசாயிங்க அனைவருக்குமே கொடுத்த விருதாத்தான் நினைக்கிறேன்... ரொம்பப் பெருமையா இருக்கு!'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

தொடர்புக்கு,
வெங்கடபதி,
செல்போன்: 94432-26611.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism