Published:Updated:

கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !

தூரன்நம்பி

கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !

தூரன்நம்பி

Published:Updated:

 பிரச்னை

##~##

உலக வரைபடத்தில் இருப்பது ஓர் இந்தியா. ஆனால்... உள்ளுக்குள், பணக்கார இந்தியா, ஏழை இந்தியா என இரண்டு இந்தியா இருக்கிறது என்பதுதான் உண்மை. அதேபோல, தமிழகத்தில் இரண்டு பிரிவுகளை உருவாக்கியுள்ளது தமிழக மின்வாரியம். ஆம்... நகர் மின் வழங்கல் தொகுப்பு (Urban feeder)( என்கிற பெயரில் சென்னைக்கு மட்டும் 24 மணி நேர மின்சாரத்தைக் கொடுக்கும் இந்தத் துறை, கிராம மின்வழங்கல் தொகுப்பு (Rural feeder) என்கிற பெயரில் தமிழகத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் நாளன்றுக்கு 6 மணி நேரம்கூட மின்சாரம் கொடுப்பதில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டது... நீர் மின்சாரத்துக்கும் வழியில்லை... அதனால்தான் இந்தப் பிரச்னை' என்று சொல்லிக் கொண்டே, தாறுமாறாக மின்வெட்டுத் தாக்குதல் கிராமப்புறங்களின் மீது நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு மக்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்பதற்காக, கூடுதல் மின்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்படுவதாக ஆங்காங்கே குமுறல்கள் கேட்கின்றன.

இந்த மின் பகிர்வு முறை... கிராமப் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து முடக்கிப் போட்டிருக்கிறது என்பதே உண்மை! விவசாயத்தோடு சேர்ந்து... சிறு மற்றும் குறுந்தொழில்களும் முற்றிலுமாக முடங்கிவிட்டன. மின்சாரம் தேடி அவர்களும் நகரத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டதால், கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பு சிறிது சிறிதாக சிதைவுறும் ஆபத்து அதிகரித்துள்ளது.

கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !

தற்போது, 'விவசாயத்துக்கு ஆறு மணி நேர மின்சாரம்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது எப்போது வரும் என்பது தெரியாததால், வயல்வெளியை விட்டு எங்கும் செல்ல முடியாமல், நிரந்தரக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர் விவசாயிகள். பல பாசனக் கிணறுகள் இன்னமும், பங்காளிகளின் சொத்தாகவே இருக்கின்றது. ஆளுக்கு ஒரு நாள் பாசனம் செய்துகொள்ளலாம் என்று முறை வைத்து, பல காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதற்காக அவரவர் முறை வரும் வரை காத்திருப்பவர்கள், தற்போது மின்சாரத்துக்காகவும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 'விவசாயம் செய்வதைவிட, சும்மா இருப்பதே மேல்' என்கிற எண்ணம் விவசாயிகளுக்கு ஏற்படுவது இயல்புதானே. அதிலும் மின்சாரம் வந்ததும் அனைத்து மோட்டார்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதால் மின்அழுத்தம் குறைந்து நிறைய மோட்டார்கள் காயில் கருகிப் போகின்றன. இதனால் ஏராளமான பொருட்செலவுக்கும் இன்னல்களுக்கும் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

நம் முன்னோர்கள் திறந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்தனர். ஆனால், இன்றோ 1,200 முதல் 1,500 அடி வரை ஆழ்துளைக் கிணறு தோண்டி, நீர் எடுத்து, பாசனம் செய்கிறார்கள். அதனால், நீர் ஆதாரமும் சுருங்கிக் கொண்டே வருகிறது. புவி வெப்பமடைவதால், பருவமழை, மாறிமாறிப் பொழிகிறது. விவசாயம் நிலையற்றத் தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், நெல் விளைந்த பூமியெல்லாம் கலர் கலராக கல்லும், கொடியுமாக மிளிர்கிறது. எந்த டி.வி-யை திறந்தாலும் நடிகர், நடிகைகள்... 'சென்னைக்கு மிக அருகில் இருக்கும் கோவையில் (!) ஒரு கிரவுண்ட் நிலம் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது..' என 'ரியல் எஸ்டேட் புரோக்கர்' வேலை பார்க்கிறார்கள்.

இப்படி எல்லா நிலங்களும் கல் கட்டடங்களாகவோ, கான்கிரீட் கட்டடங்களாகவோ மாறும்முன், விவசாயத்தை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது. இந்த ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து, எல்லா விவசாயிகளுக்கும் ஒரே சீராக பகலில் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என்று சமூகசேவகர் மற்றும் தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் சென்னிமலை பொன்னையன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

'மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவுப் பொருள்கள் மிக முக்கியம். அத்தகையப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு போதுமான மின்சாரத்தைத் தர மறுக்கிறது அரசு. ஆனால், சென்னை நகரில் கேளிக்கைகள், கொண்டாட்டம், கும்மாளம் என்று பொழுது போகாமல் திரிபவர்கள் அனுபவிப்பதற்காக தடையற்ற மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஊர்க் காடுகளில் சாலைகளில் விளக்கே இல்லை. ஆனால், சென்னையிலோ... பத்து அடிக்கு இரண்டு விளக்குகள் என்று எரியவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு வேண்டித்தான் வழக்கு தொடுத்திருக்கிறேன். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, பதில் தருவதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறது அரசு தரப்பு' என்கிறார் பொன்னையன்

கட் ஆகும் கரன்ட்...ஃப்யூஸ் ஆகும் விவசாயம் !

அய்யா... அரசாங்கத் தரப்பு வக்கீல்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! இந்த விஷயத்தில் உங்களுடைய வாதத் திறமையை எடுத்து வைக்காமல், உண்மை நிலையை உணர்ந்து விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும். இது விவசாயிகளுக்காக நீங்கள் செய்யும் உதவியல்ல... உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் உதவி, உங்களின் சந்ததி நாளைக்கு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக செய்யும் உதவி. நீதிமன்றமே தேவையில்லை, நேரடியாக முதல்வரிடம் விஷயத்தை எடுத்து வைத்து, உணவு உற்பத்திக்கு உரிய மின்சாரத்தைத் தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!

பின்குறிப்பு: மின்சாரத்தைக் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது... நிலத்தடி நீராதாரங்களையும் பெருக்க உரிய நடவடிக்கை தேவை. ஆங்காங்கே இருக்கும் ஏரி, குளங்கள் என்று அனைத்து நீராதாரங்களும் தொடர் ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டே இருக்கின்றன. பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே பயன்படும் தொல்பொருள்கள்... நினைவுச் சின்னங்கள்... போன்றவற்றுக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்குகூட, மனிதன் உயிர்வாழத் தேவையான நீராதாரங்களைக் காப்பாற்றுவதற்கு தரப்படாமல் இருப்பது... வெட்கக் கேடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism