Published:Updated:

'விவசாயிகளின் நண்பேன்டா’

பலே பறக்கை வங்கி! என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

'விவசாயிகளின் நண்பேன்டா’

பலே பறக்கை வங்கி! என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:

 சேவை

##~##

நெல் விவசாயிகள் கடன் கேட்டு சென்றால், மணிக் கணக்கில் காக்க வைக்கும் வங்கிகள், அரவை ஆலை அதிபர்களுக்குத் தேடிச் சென்று கடன் கொடுக்கின்றன. கரும்பு விவசாயிகளுக்குக் கிள்ளிக் கொடுக்கத் தயங்கும் வங்கிகள், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்றன''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-தமிழகம் முழுவதுமே இதுபோன்ற பொருமல் குரல்கள்தான் பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக... கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதி விவசாயிகள்... ''ஸ்டேட் பேங்ஃ ஆஃப் திருவிதாங்கூர்... எங்க நண்பேன்டா'' என்கிற உற்சாகக் குரல் கொடுக்கின்றனர்!

நாகர்கோவிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பறக்கை, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமம். இங்கே துவங்கப்பட்ட இந்த வங்கி, இரண்டரை ஆண்டுகளில் 38 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது. இதில், 23 கோடி ரூபாய் விவசாயக் கடனாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சர்யம்!   

'விவசாயிகளின் நண்பேன்டா’

'இது எப்படி சாத்தியமானது?’

அதைப் பற்றி பேசுகிறார் வங்கி மேலாளர் முருகன். ''பறக்கை மற்றும் பக்கத்து கிராமங்களான காந்திபுரம், புத்தளம், மணக்குடி கிராமங்களிலும் ஏராளமான விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் கை கொடுக்கும் வகையில் விவசாயத்தின் மீது எங்கள் பார்வையைப் பதித்தோம். வங்கி துவங்கிய குறுகிய காலத்திலேயே எங்களிடம் வாடிக்கையாளர்களாக இருக்கும் 8,000 பேரில் விவசாயிகளே அதிகம். விவசாயிகளின் களத்துமேட்டுக்கே சென்று சேமிப்பின் அவசியங்களை விளக்கினோம். அறுவடை செய்ய பணம் இல்லாமல் இருந்த விவசாயிகளைத் தேடிப் பிடித்து, நகைக் கடன்கள் கொடுத்தோம்.

வேளாண் கருவிகள் வாங்குவதற்கு டிராக்டர் கடன், டில்லர் வண்டி கடன் என விவசாயிகளின் தேவையைத் தெரிந்து கொடுத்தோம். நிறைய விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். இத்தகைய விழிப்பு உணர்வுகள்தான் எங்களுக்கு வெற்றியைக் கொடுத்தது.

'விவசாயிகளின் நண்பேன்டா’

விவசாயிகளுக்கு எந்தவிதமான நிலவரி ரசீதும் இல்லாமலே, ஒரு லட்சம் ரூபாய் வரை ஏழு சதவிகித வட்டியில் கடன் கொடுக்கிறோம். அதையும் அந்த விவசாயி ஒரு வருடத்துக்குள் கட்டி முடித்தால், ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மூன்று சதவிகித வட்டியைத் திருப்பிக் கொடுக்கிறோம்.

விவசாயிகளுக்குக் கடன் கிடைப்பதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே நில உடைமைதான். பெரும்பாலான விவசாயிகள் குத்தகை அடிப்படையில்தான் விவசாயம் செய்கிறார்கள். சொந்தமாக நிலம் இருக்காது. இந்த மாதிரி விவசாயிகளுக்குக்  கைகொடுக்கவே ஒரு திட்டம் இருக்கிறது. நிலத்தின் உடைமையாளரிடம் இருந்து, 'என்னுடைய நிலத்தை, இவர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்கிறார்' என்று ஒரு கடிதம் மட்டும் வாங்கிக் கொடுத்தாலே போதும்... அந்த விவசாயிக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கிறோம். இதற்கும் ஏழு சதவிகித வட்டிதான்'' என்று ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையோடு எடுத்து வைத்தார்.

வங்கியின் இந்த அன்பான அணுகுமுறையால், பறக்கை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்திருக்கின்றன. அதைப் பற்றி ஒரு சோறு பதமாக பேசிய மது, ''எனக்கு சொந்தமா 75 சென்ட் நிலம் இருக்கு. கூடவே, குத்தகை அடிப்படையில் பல பேரோட நிலத்துல நெல் விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்.

என்னோட 75 சென்ட் பரப்பு நிலத்துல தென்னை நடவு செய்யத்தான் முதல்ல இந்த பேங்க்ல லோன் வாங்கினேன். பேங்க்னாலே ஒரு தயக்கம் இருக்கத்தானே செய்யும். அதன்படிதான் உள்ள நுழைஞ்சேன். ஆனா, உள்ள போய் 'விவசாயி'னு சொன்னதும் ரொம்பவே மதிப்பா நடத்தி ஆச்சரியப்படுத்திட்டாங்க. லோனும் உடனே கிடைக்க ஏற்பாடு பண்ணுனாங்க. இப்ப மூணு விவசாயிகளை நானே கூட்டிட்டு போய் லோன் வாங்கி கொடுத்திருக்கேன்'' என்றார் தயக்கம் உடைத்தவராக!

'நாங்கள் விவசாயிகளின் தோழன்', 'இது உங்களுடைய பேங்க்' என்றெல்லாம் போர்டு மாட்டிக் கொண்டு இருக்கும் வங்கிகளில் பெரும்பாலும், விவசாயிகளுக்குக் கசப்பான அனுபவங்களே அதிகம். அதற்குக் காரணம்... திட்டங்களைச் செயல்படுத்தும் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்தான். அவர்களுடைய மனதில், விவசாயம்தான் நம்முடைய ஜீவன்... விவசாயிகள்தான அதன் பாதுகாவலர்கள் என்கிற புரிதல் இருந்தால்... பறக்கை போல நாடே விவசாயத்தில் றெக்கைக் கட்டி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தொடர்புக்கு,
முருகன், செல்போன்: 94861-78181
மது, செல்போன்: 99525-01997.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism