Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

பசுமைப் போராளி எழுதும் பரபர தொடர் ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

பசுமைப் போராளி எழுதும் பரபர தொடர் ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

அச்சுறுத்தும் கூரானக் கொம்புகளோடு... 'மைசூர் பூரணி’ இன மாடு (அலிகார் இனம்) ஒன்று, சுண்ணாம்பு சாந்து அரைக்கும் கல் உருளை ஒன்றை இழுத்தபடி, திமுதிமுவென ஓடி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது என்னை நெட்டித் தள்ளியதில், இரண்டு கொம்புகளுக்கு நடுவில் எனது கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்டது. அதைப் பார்த்து அக்கம், பக்கமிருந்த அத்தனை பேரும் பதறித் துடித்தார்கள். ஆனால்... அப்படியே, என்னை அலேக்காகத் தூக்கிச் சென்ற மாடு, சில அடி தூரம் தள்ளிச் சென்று அழகாக என்னை இறக்கி வைத்துவிட்டு, தன் பாதையில் நடக்க ஆரம்பித்தது. சிறு காயம்கூட ஏற்படவில்லை. என்றாலும்... மரணத்தின் விளிம்பு வரை போய் திரும்பிய கதைதான். இன்றும் அந்த மாட்டை கருணாமூர்த்தியாக நினைத்து வணங்குகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாம் நிகழ்வு... முதல் சுதந்திர தினம். காலையில் பள்ளி வந்ததுமே, புத்தகப் பையை அவரவர் இடத்தில் போட்டுவிட்டு, வெளியில் அணி வகுத்தோம். பேரணியின் முகப்பில் ஊர் பெரியவர்கள் இருந்தார்கள். சட்டையில் காலணா கொடுத்து வாங்கியிருந்த தேசியக் கொடியைக் குத்தி இருந்தோம். அனைவரும் கையை உயர்த்தி, 'மகாத்மா காந்திக்கு ஜே', 'ஜவஹர்லால் நேருக்கு ஜே', 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ஜே', 'பாரதியாருக்கு ஜே' 'கப்பலோட்டியத் தமிழனுக்கு ஜே', 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட்டோம். அந்தப் பேரணியை ஊரே வியந்து பார்த்தது.

மூன்றாவது முக்கிய நிகழ்வு, தேர்வு சம்பந்தமானது. எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர், ராமசாமி. அவருக்கு 'மொங்கு வாத்தியார்’ என்று செல்லப்பெயர் வைத்திருந்தார்கள், ஊர் மக்கள். மாணவர்கள், 'நொங்கு வாத்தியார்’ என்று அழைப்போம். அவர், அரையாண்டுத் தேர்வில், 'நால்வகைப் படைகள் யாவை?’ என வினா எழுப்பி இருந்தார். அதற்கு, கோல் வீச்சு, கத்திக் குத்து, அரிவாள் வெட்டு, கல் எறிதல் என விடை எழுதியிருந்தேன்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

விடைத்தாள் திருத்திய வாத்தியார், என் அப்பாவைப் பார்த்தபோது இதைச் சொல்லிக் காட்டிச் சிரித்திருக்கிறார். 'அப்படியா' என்ற என் தந்தையிடம், 'வருத்தப்படாதீர்கள், மற்ற மாணவர்கள் அதையும்கூட எழுதவில்லை' என்று ஆறுதல் சொன்னாராம். வீடு திரும்பிய அப்பா, 'அவ்வையார் பாட்டு நினைவில் இல்லையா...?' என்று கேட்டபோதுதான் ஆசிரியரின் எதிர்பார்ப்பு புரிந்தது.

'ஆலமரத்தின் விதையானது, சிறியதொரு மீனின் சினையினும் சிறியது. ஆனால், அந்த சின்னஞ்சிறு விதை முளைத்து, வளர்ந்து, மரமாகியபோது மன்னவனுடைய தேர், யானை, குதிரை, காலாள் ஆகிய நால்வகைப் படையும் நிற்க நிழல் தருகிறது என்று சொல்கிறார் அவ்வைப் பாட்டி', என ஆசிரியர் கற்றுக் கொடுத்த பாடம் மண்டையில் மின்னல் வெட்டியது. அது முதலாக 'அவ்வையும் பாட்டும்' என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார்கள்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

கிராமத்தில் விளையாட்டுக்குப் பஞ்சமே இருக்காது. 'கண்ணாமூச்சி’ முதல் 'தாயக்கட்டை’ வரை பலப்பல விளையாட்டுகள் பரவசம் ஊட்டின. அந்நிய ஆட்சியில் ஆள்வோரின் மீதான எதிர்ப்பை எப்படி முன்னோர்கள் விளையாட்டாக்கினார்கள் என்பதை, வளர்ந்த பிறகு நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

கண்ணாமூச்சி விளையாட்டைப் பார்ப்போம். வெளிநாட்டில் இருந்து வந்தவர் துரை. அவருடைய மனைவி துரைச்சி. அவள் வெள்ளை துரைச்சி. உள்நாட்டு ஜமீன்தார் மனைவி காட்டு துரைச்சி. கண்கள் கட்டப்படும் காட்டு துரைச்சி ஓடியாடி, படாத பாடுபட்டு இன்னொரு பெண்ணைக் கொண்டு வந்து ஒப்படைக்கிறாள். அவள் கண்ணும் கட்டப்படுகிறது. ஒற்றையா? ரெட்டையா? விளையாட்டில், 'திறமையாக ஊதுபவன், பொதுச்செல்வத்தை தனதாக்கிக் கொள்கிறான்’ என்கிற வெள்ளையரின் சூது வெளிப்பட்டது.

பல்லாங்குழி விளையாட்டில், அப்பாவிகள் நிலத்தை தரிசு போடுகிறார்கள்.  தாயக்கட்டையில் மலை ஏறியவன் பாதுகாப்பாக இருக்கிறான் என்பது புரிந்தபோது வியப்பாக இருந்தது. வளர்ச்சி அடையும்போது பல விளையாட்டுகள் இணைந்து கொண்டன. கிட்டிப்புள், குண்டு விளையாட்டு, பம்பரம், பிள்ளையார்ப் பந்து, பச்சைக்குதிரை, பல்லிங்குத்து என எந்த விளையாட்டையும் விட்டு வைத்ததில்லை.

விளையாட்டில் ஈடுபடும்போது பெரும்பாலும் 'ராசப்பா’ அணியில் இருக்கவே விரும்புவேன். ராசப்பா அவருடைய அம்மா, அப்பாவைப் போலவே குண்டாக இருப்பார். அதனால் அவருக்கு 'இட்லி ராசப்பா' என்று பெயர் வைத்திருந்தோம். குண்டு விளையாடும்போதும் சரி, வேலியில் உள்ள ஓணானை அடிக்கும்போதும் சரி... இட்லி ராசப்பாவின் இலக்கு தப்பாது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !

இளங்காடு தெருக்களில் உப்புமண் மிகுதி. உடல் வியர்க்க விளையாடி, தெருப்புழுதியும் படியும்போது சுடலைப்பொடி பூசிய சிவனாகவே வீடு திரும்புவோம். அப்பொழுது எல்லாம் என் அக்காள் கமலம், 'என் அண்ணனைக் கண்டியாங்கற கதையா எங்கப்பா போய் வர்றே?'னு கேட்பார். அப்போது எனக்கு அது புரியாது.

அது ராமாயணக் கதை. பரதன், அயோத்தியில் இல்லாத சமயத்தில் ராமன் காட்டுக்குச் சென்று விடுவார். நாடு திரும்பும் பரதன், அல்லும்பகலும் ராமனைத் தேடி, தரையில் விழுந்து அழுது புரள்வார். அந்த சமயத்தில் எதிர்படுவோர் அனைவரிடமும், என் அண்ணனைக் கண்டியா?' என்று கேட்பாராம், பரதன். அதைச் சொல்லித்தான் என்னைக் கிண்டலடிப்பார், அக்கா. அந்தளவுக்கு அவருக்கு ராமாயணம் அத்துபடி.

என்னுடன் நேரடியாகப் பேச விரும்புபவர்கள் கீழ்க்கண்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்: 94426-24589. என்னுடைய பணிகளின் காரணமாக, தொடர்பு கொள்வதில் தாமதம் ஏற்படலாம். வருத்தப்படாமல் மீண்டும் தொடர்பு கொள்ளவும்.

-நம்மாழ்வார்
-இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism