Published:Updated:

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

விவசாயிகளுக்கு உதவாத, 'உழவர் பெருவிழா..!' ஆர். குமரேசன், ஆறுச்சாமி, எஸ். கதிரேசன், ஜி. பழனிச்சாமி, கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன், சொ. பாலசுப்பிரமணியன், க. ரமேஷ், ஆ. முத்துக்குமார்

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

விவசாயிகளுக்கு உதவாத, 'உழவர் பெருவிழா..!' ஆர். குமரேசன், ஆறுச்சாமி, எஸ். கதிரேசன், ஜி. பழனிச்சாமி, கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன், சொ. பாலசுப்பிரமணியன், க. ரமேஷ், ஆ. முத்துக்குமார்

Published:Updated:

சர்ச்சை

##~##

இரண்டாம் பசுமைப் புரட்சி', 'உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு' என்பது போன்ற கோஷங்களுடன், தமிழகம் முழுவதும் 16,564 கிராமங்களில் உழவர் பெருவிழாவை நடத்தி வருகிறது தமிழக அரசு. வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒரே இடத்தில் குவித்து,  விவசாயிகளுக்கான மானியங்கள், திட்டங்கள் உட்பட அனைத்து உதவிகள் பற்றியும் விளக்குவதுதான் உழவர் பெருவிழாவின் முக்கிய நோக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விவசாயிகளின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்த இந்த விழா, அதன் நோக்கத்தில் முழுமையடைந்திருக்கிறதா?' என்கிற கேள்விக்கு, தமிழகம் முழுவதும் உள்ள சில விவசாயிகள், விவசாயச் சங்க பிரதிநிதிகள் தரும் அனுபவப்பூர்வமான பதில்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.

நாருதான் வந்து சேர்ந்துச்சு!

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

ரவீந்திரன்,  (தலைவர், கடலூர் மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பு): ''விவசாயிகளின் நலனுக்காக இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்ததற்கு தமிழக முதல்வருக்கு முதலில் நன்றி சொல்லித்தான் ஆகணும். ஆனா, மேல இருந்து 'திட்டம்' என்ற பெயரில் பூமாலையைத் தூக்கிப் போட்டாலும், விவசாயிகளின் கைக்கு வரும்போது நார் மட்டும் வந்து சேரும்னு சொல்வாங்க. அதுக்கு இந்தத் திட்டமும் விதிவிலக்கு இல்லங்கறதுதான் உண்மை. 'கடமை’க்கு வேலை செய்றாங்க அதிகாரிங்க. எந்த ஊர்ல உழவர் பெருவிழா, என்னிக்கு நடக்குதுங்கிற தகவலை, முறையா விவசாயிகளுக்குச் சொல்லல. கட்சிக் கூட்டம் மாதிரி ஆளுங்கள கூட்டிட்டு வந்து, கூட்டம் கூட்டி போட்டோ எடுக்கறதோட அவங்க வேலை முடிஞ்சு போச்சுனு நினைக்கறாங்க. அதேபோல 70 பேருக்குக்கான உணவை 100 பேருக்கு பகிர்ந்துக் கொடுக்குறாங்க. மொத்தத்துல, இந்தத் திட்டம் முதல்வரோட எதிர்பார்ப்புல 10% அளவைக்கூட நிறைவேத்தல.''

வரிப்பணம் விரயமாகுது!

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

அரவிந்தன் (விவசாயி, சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம்): ''சாத்தான்குளம் தாலூகா, தச்சுமொழி கிராமத்துல கூட்டம் நடந்துச்சு. காலையிலகூட எந்தத் தகவலும் சொல்லல. ஆனா, மதியம் 12 மணிக்கு மைக் செட் கட்டி விழா நடக்குதுனு சொல்றாங்க. அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டதுல ஏழெட்டு பேர்தான் நிஜமான விவசாயிங்க. மத்ததெல்லாம், நூறுநாள் வேலை திட்டத்துல இருக்கற ஆட்கள்தான். இப்படி செய்றதுக்கு பதிலா எந்தெந்த துறையில, என்னென்ன திட்டங்கள் இருக்கு, அதுக்கு மானியம் எவ்வளவு, யாரைத் தொடர்பு கொள்ளணும்னு ஒவ்வொரு பஞ்சாயத்து ஆபீசுலயும் ஒரு போர்டை எழுதி வெச்சுட்டா விவசாயிக சுலபமா தெரிஞ்சுக்குவாங்க. இதுக்கு எதுக்காக விழா எடுத்து, வரிப்பணத்தை விரயமாக்கணும்.''

'சாப்பிட்டுபோட்டு வந்துட்டேனுங்க'

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

என்.எஸ். பழனிச்சாமி (தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): ''திட்டம் நல்ல திட்டம்தான் ஆனா, ஏற்பாடு சரியில்ல. திருப்பூர்ல கூட்டம் நடக்குது கலெக்டர், மந்திரியெல்லாம் வர்றாங்கனு கூப்பிட்டாங்க. நான் போய் மதியம் ரெண்டு மணி வரைக்கும் காத்திருந்தேன். யாரும் வரல. மதியம் சாப்பிட்டுபோட்டு கிளம்பி வந்துட்டேன். சாயங்காலம் 5 மணிக்கு போன் பண்ணி அங்க இருந்தவங்ககிட்ட கேட்டேன். யாரும் வரலனு சொன்னாங்க. கடைசியில இரவு 7 மணிக்கு அமைச்சர் வந்துருக்காரு, அப்ப விவசாயிக யாரும் அங்க இல்ல. அதிகாரிகளோட மெத்தனத்தால திட்டம் தோல்வி அடைஞ்சுடுச்சுனுதான் சொல்லணும்.''

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

சுகுமாறன் (தலைவர், திருவையாறு வட்டார விவசாயச் சங்கம்): ''ஒன்றிய அளவில் இரண்டு, மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த பகுதியில் விளையும் பயிர், பிரச்னைகள், மானியங்கள், அந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என எடுத்துச் சொல்லி இருந்தால்... இந்த விழா சிறப்பாக இருந்திருக்கும்.

வழக்கமாகப் பார்க்கும் அதே அலுவலர்கள் இல்லாமல்... முன்னோடி விவசாயிகள், அனுபவ விவசாயிகள் என்று அழைத்து வந்து அவர்களது சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதையெல்லாம் செய்யாமல், 'அறுசுவை உணவு கொடுக்கிறோம்' என்கிற பெயரில் விவசாயிகளை இழிவுபடுத்துகிறார்கள். எங்களுக்குத் தேவை தொழில்நுட்பங்களும், ஆலோசனைகளும்தான் சோறு இல்லை.''

மத்தளத்துக்கு ரெண்டு  பக்கமும் இடி!

குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேளாண்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, தங்கள் பங்குக்கு அவர்களும் குமுறித் தீர்த்துவிட்டனர்.

''ஆந்திராவுல சந்திரபாபு நாயுடு முதல்வரா இருந்தப்ப விவசாயிகளுக்காக நடத்தின 'ரத யாத்திரை’, குஜராத்துல நடந்த 'கிராமங்களை நோக்கி’ங்கற திட்டம் இதெல்லாம் அங்க பெரிய மாறுதலை ஏற்படுத்துச்சு. ஒவ்வொரு விவசாய அதிகாரியும் கிராமத்துக்குப் போனாங்க. அதேபோல நம்ம ஊர்லயும் ஒவ்வொரு அதிகாரியும் அவங்கவங்க எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு நேர்ல போறதுக்கு உதவி இருக்கு இந்த பெருவிழா. எங்க ஆளுங்க சிலர், 'இந்த கிராமத்தையெல்லாம் நான் பாத்ததே இல்லை’னு சொல்றதைக் கேக்கும்போது பரவாயில்லை... திட்டம் நல்லபடியா வேலை செஞ்சுருக்குனுதான் தோணுது.

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

அதேநேரத்துல திட்டத்துல சில குளறுபடிக இருக்கறது உண்மைதான். என்ன பண்றது 'உரலுக்கு ஒருபக்கம் இடினா, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி’னு சொல்ற மாதிரி அரசாங்கத்துக்கு நல்ல பிள்ளையாகி, விவசாயிக்கு நல்ல பிள்ளையாக முடியாம தவிக்குறோம். திட்டத்தை முறையா செயல்படுத்த போதுமான அவகாசத்தை எங்களுக்குக் கொடுக்கல. மேலிடத்துல உக்கார்ந்திருக்கற அதிகாரிகதான், இதையெல்லாம் எடுத்துச் சொல்லி... முதல்வருக்குப் புரிய வெச்சு, கால அவகாசத்தை எங்களுக்கு வாங்கித் தந்திருக்கணும்.

இதுவரைக்கும் நிதி வரல!

''எங்களுக்குத் தேவை, சோறு அல்ல, தொழில்நுட்பங்களே!''

ஏப்ரல் 13-ம் தேதியில இருந்தே திட்டத்தைத் தொடங்கச் சொல்லிட்டாங்க. ஆனா, ஏப்ரல் 20|ம் தேதி வரைக்கும் இந்தத் திட்டத்துக்காக பணம் ஒதுக்கல. ஆத்மா திட்டத்துக்கான பணத்தை வெச்சுதான் சமாளிக்குறோம். இப்படி எங்களுக்கும் பல பிரச்னைகள் இருக்கு. இதை விவசாயிகளும், அரசும் புரிஞ்சுக்கணும்'' என்று உண்மை நிலையைப் புட்டுபுட்டு வைத்தவர்கள்,

''கடைக்கோடி விவசாயிக்கும் தொழில்நுட்பங்கள் சென்று சேர வேண்டும் என்ற அரசின் நல்ல நோக்கம் நிறைவேறணும்னா... திட்டத்துல சில மாறுதல்களைச் செய்யணும். ஒவ்வொரு கிராமத்துலயும் நடத்துறதுக்கு பதிலா, ஒரு ஒன்றியத்துக்கு பத்து இடங்கள்ல அனைத்துத் துறை அதிகாரிகளையும் வெச்சு, முன்னோடி விவசாயிகள், அனுபவ விவசாயிகளைக் கூப்பிட்டு ஒரு நாள் கருத்தரங்கு மாதிரி செஞ்சா... இதன் பலன் விவசாயிக்குப் போயி சேரும். அடுத்தடுத்த ஆண்டுகள்லயாவது இதை அரசு மனசுல வெச்சுக்கணும்'' என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்.

அமைச்சர் என்ன சொல்கிறார்?

இதையெல்லாம் வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது... விஷயங்களை பொறுமையாக கேட்டவர், ''விவசாயிகளின் வாழ்வு மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் வகுத்த அருமையான திட்டம் இது. விவசாயிகளின் கருத்துப்படி அனுபவ விவசாயிகளை பேச வைப்பது, ஒன்றிய அளவில் கூட்டங்களை நடத்துவது போன்ற விஷயங்களை ஆலோசித்து நடைமுறைப்படுத்தலாம். அதிகாரிகள் தரப்பில் உள்ள தவறுகளை சரிசெய்வதுடன், அவர்களது கருத்துகளையும் கவனத்தில் கொண்டு இந்த திட்டம் சிறப்பாக செயல்பட ஆவன செய்யப்படும்'' என்றார்.

 வடை போச்சே!

''உழவர் பெருவிழாவில் வழங்க வேண்டிய உணவுகளுக்கான மெனுவை நானே தயார் செய்தேன்'' என சட்டசபையில் முதல்வர் பெருமையடித்துக் கொண்டாலும், அந்த மெனு அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி பின்பற்றப்படவில்லை. உதாரணமாக, திருப்பூரில் வடை வைக்கவில்லையாம்!

கலெக்டருக்கே தெரியல!

பல மாவட்டங்களில், 'விழா எந்த ஊரில் நடக்கிறது என்கிற விவரமே எங்களுக்குத் தெரியவில்லை' என விவசாயிகள் புலம்புகிறார்கள். 'விழா நடக்கும் இடம் எது?' என்று தெரியாமல் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரே திண்டாடிப் போயிருக்கும்போது பாவம், விவசாயிகள் என்ன செய்வார்கள்?

திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 19|ம் தேதி வடமதுரை வட்டாரத்தில் கொல்லம்பட்டி என்ற இடத்தில் விழா நடைபெறுவதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. கலெக்டர் வெங்கடாசலம், மாலை 4.30 மணியளவில் விழாவுக்குக் கிளம்பியிருக்கிறார். பாதி வழியில் போகும்போது குறிப்பிட்ட இடத்தில் விழா நடக்காமல் 'பஞ்சந்தாங்கி’ என்ற இடத்தில் நடக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் திட்டிவிட்டு திரும்பிவிட்டாராம் கலெக்டர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism