Published:Updated:

இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?

இதை அவசியம் படிங்க..! ஜி. பழனிச்சாமி

இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?

இதை அவசியம் படிங்க..! ஜி. பழனிச்சாமி

Published:Updated:
##~##

ரசாயனங்களால் விளைந்த விபரீதங்களைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்த பிறகு, உலகமே இப்போது இயற்கையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இயற்கை விளைபொருட்கள் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே வருவதால்... இயற்கைப் பொருட்களுக்கான தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது.

இத்தகையச் சூழலில், 'இயற்கை முறையில் விளைந்தது எது? ரசாயன முறையில் விளைந்தது எது?’ என்று நுகர்வோர் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், பல இடங்களில் போலிகளும் புழங்கத் தொடங்கியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், இத்தகையப் போலிகளால் இயற்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்புமே பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், இயற்கை முறையில் விளைந்தவற்றுக்கு 'அங்கக விளைபொருட்கள்’ என்ற சான்றிதழை அளித்து வருகிறது, தமிழக வேளாண்மைத் துறையின் ஒரு அங்கமான 'விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்ககம்’. இதனால், இயற்கை விளைபொருட்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் விலை கிடைப்பதோடு, நுகர்வோரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது.

மூன்று வகைச் சான்றிதழ்கள்!

இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?

இந்த சான்றிதழைப் பெறுவது பற்றி இங்கே விரிவாக விளக்குகிறார், விதை மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறையின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன்.

''மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டம் மற்றும் 'அபிடா' (APEDA -Agricultural and Processed Food Products Export Development Authority)நிறுவனம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்படி, 2007-ம் ஆண்டிலிருந்து கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு 'தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை' இயங்கி வருகிறது. தனி நபர் சான்று, குழு சான்று, நிறுவனச் சான்று என்று மூன்று வகைகளில் இங்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நிலத்தின் சிட்டா நகல், மண் மற்றும் பாசன நீர் பற்றிய பரிசோதனை முடிவு நகல், பண்ணையின் வரைபடம், விவசாய முறை, ஆண்டு பயிர்த் திட்டம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, 2 ஆயிரத்து 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சிறு விவசாயிகளாக இருந்து, அதற்கான சான்றிதழை இணைத்து 1,700 ரூபாய் செலுத்தினால், போதுமானது.

தேவை, முறையான குழு!

குழுச்சான்று பெற வேண்டுமானால், குறைந்தபட்சமாக 25 நபர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். முறையான அலுவலகத்தோடு, தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடங்கிய முறையான அமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குழுச்சான்று பெறுவதற்கான பதிவுக் கட்டணம்

6 ஆயிரத்து 200 ரூபாய். நிறுவனச் சான்று பெற 7 ஆயிரத்து 400 ரூபாய் பதிவுக் கட்டணம்.

இந்த மூன்று பிரிவுகளைத் தவிர, கால்நடைப் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப்பொருள் சேகரிப்பவர்கள், அங்கக விளைபொருட்கள் பதனம் செய்வோர், அங்கக இடுபொருட்கள் உற்பத்தி செய்வோர், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

மூன்று ஆண்டுகளில் சான்று!

குறுகிய காலப்பயிர், ஆண்டுப் பயிர், பல்லாண்டுப் பயிர் என்றுள்ள மூன்று வகைப் பயிர்முறைகளுக்கும் அங்ககச் சான்று பெறலாம். அங்கக வேளாண்மை செய்யும் நிலம் தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால், அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் வேறு சூழ்நிலைகளினால் அங்ககப் பண்ணை மாசுபடுவது தடுக்கப்படும்.

ஆண்டுப் பயிர்களுக்கு பதிவு செய்த நாளில் இருந்து, இரண்டு ஆண்டுகள் கழித்தும், பல்லாண்டுப் பயிர்களுக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் சான்று வழங்கப்படும். அங்கக விவசாயிகள் இடுபொருட்களை சுயசார்புடன் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். அதையும் எங்கள் நிபுணர் குழு ஆய்வு செய்யும். மேலும், பண்ணைக்கு வெளியில் இருந்து இயற்கை இடுபொருட்கள் மற்றும் இயற்கைப் பூச்சிவிரட்டிகள் வாங்கி உபயோகிக்கும்பட்சத்தில் எங்கள் துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

சுகாதாரம் அவசியம்!

தொழிற்சாலைகள், கழிவுநீர் ஓடைகள், ரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தும் பண்ணைகள் அருகில் அங்ககப் பண்ணைகளை அமைக்கக் கூடாது. மேலும் அங்ககப் பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் அங்கேயே பராமரிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கு முடிந்த அளவில் பண்ணையில் விளைந்தவற்றையே தீவனமாகப் பயன்படுத்த வேண்டும். வெளியிலிருந்து வாங்க வேண்டி இருந்தால்... அந்தத் தீவனங்கள் மாசு இல்லாத இடத்தில் விளைந்ததாக இருக்க வேண்டும். அங்கக வேளாண் பண்ணைக்கருவிகள் மாசுபடாதவாறு அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

கொள்கலன்கள் உஷார்!

அங்கக விளைபொருட்களைச் சேமிக்கும் இடங்களைத் தனியாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். விளைபொருட்களை அனுப்பும் கொள்கலன்கள் எளிதில் மட்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கொள்கலன்களின் மீது பொருட்களின் முழுவிவரங்களும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அங்ககப் பண்ணையில் தினசரிப் பதிவேடு, இடுபொருள் பதிவேடு, விற்பனைப் பதிவேடு, பயிர் உற்பத்திப் பதிவேடு, ஆண்டு உற்பத்தித் திட்டம், பரிசோதனை விவரங்கள்... உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வின் போது காண்பிக்க வேண்டும்'' என்று பொறுமையாக விவரித்த கோபாலகிருஷ்ணன்,

தினசரி பதிவேடு!

''அவ்வப்போது நடக்கும் அங்கக விவசாயிகள் கூட்டங்களில் சாகுபடி, பதனம், விற்பனை உள்ளிட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்!  

ரசாயனம் கூடாது!

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், ரசாயனங்களால் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள்... ஆகியவற்றைப் பயன்படுத்தும் பண்ணைகள் சான்று பெறும் தகுதியற்றவை

நான்கு மண்டலங்கள்!

அங்ககச் சான்றளிப்புத் துறையின் தலைமையிடம் கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகிறது. அங்கு துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆகிய இருவர் மாநில அளவிலான அலுவலர்களாக உள்ளனர். கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான மணடல அலுவலர்கள் அங்ககச் சான்றளிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்...

இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற இவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

துணை இயக்குநர், விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்ககம்,

1424-ஏ, தடாகம் சாலை, ஜீ.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர்-641013. தொலைபேசி: 0422-2435080. சு. கிருஷ்ணராஜ், துணை இயக்குநர் (தலைமையிடம்), செல்போன்: 93441-95289.

டாக்டர்.டாம் பி சைலஸ், உதவி இயக்குநர் (தலைமையிடம்), செல்போன்: 94427-34344.
மண்டல அலுவலர்கள்: சீனிவாசன் (கோவை) செல்போன்: 94869-50364
டாக்டர்.ஆறுமுகம் (மதுரை), செல்போன்: 94425-65452.
மீனாட்சிசுந்தரம் (திருச்சி) செல்போன்: 94423-46115.
சத்தியமூர்த்தி (வேலூர்), செல்போன்: 93441-95289.

  இயற்கை வேளாண்மை இயக்கம்!

இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?

நாடெங்கும் இயற்கை மீதான பாசம் பரவ ஆரம்பித்துள்ள இந்த வேளையில், 'இயற்கை வேளாண்மை இயக்கம்' என்கிற அமைப்பு ஏப்ரல் 8-ம் தேதியன்று சென்னையில் துவங்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் ஆர்வலர்கள், விவசாயிகள் என நூற்றுக்கணக்கில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்கத்தின் தலைவர் ஜி.ஏ. வடிவேலு, ''ஒருபுறம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பறித்து, பெரும் முதலாளிகளுக்கு தொழில் நடத்த தாரை வார்க்கிறது அரசாங்கம். இன்னொரு புறம், விவசாயிகளே தங்கள் நிலங்களை விற்று விட்டு, தங்கள் சந்ததியினரை வேறு பணிக்கு அனுப்பி வருகின்றனர். இத்தகைய அவல நிலையை மாற்றி, நம் நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.

பங்கேற்ற அனைவருக்கும் இயற்கை உணவுகளே அளிக்கப்பட்டதுடன், விவசாயத்தில் வெற்றி பெற பல்வேறு வழிமுறைகளும் சொல்லித் தரப்பட்டன!

தொடர்புக்கு, தொலைபேசி: 044-28418641.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism