Published:Updated:

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

படங்கள்: ஏ. சிதம்பரம், வீ. சக்தி அருணகிரி ஆர். குமரேசன்

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

படங்கள்: ஏ. சிதம்பரம், வீ. சக்தி அருணகிரி ஆர். குமரேசன்

Published:Updated:

புதுவரவு

##~##

விளைநிலங்கள் தரிசாகிக் கொண்டே இருக்கின்றன' என்கிற கூக்குரல் ஒரு பக்கம் கேட்டுக் கொண்டே இருக்க... 'தரிசு நிலங்களை, தோப்புகளாக மாற்ற நீங்க தயாராக இருந்தால்... உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் தர நாங்கள் தயார். இதில் 20% தொகை மானியமாகக் கிடைக்கும்'' என்று நம்பிக்கையூட்டுகிறது தோட்டக்கலைத் துறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம், தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 'தேசியத் தோட்டக்கலை இயக்கம்’ மூலமாக இதுபோல பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கே பேசுகிறார், தேனி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் முருகன்.

''தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலமாக, 'புதியத் தோட்டங்கள் அமைத்தல்’ என்ற திட்டத்தின் கீழ், மா விவசாயிகளுக்கு இரண்டு வகையான மானியங்கள் கிடைக்கின்றன. சாதாரண நடவில் 10 மீட்டர் இடைவெளியில் ஒரு ஹெக்டேருக்கு 100 செடிகள் வீதம் நடவு செய்தால், 9 ஆயிரத்து 900 ரூபாய் மானியம். நெருக்கு நடவு... அதாவது, அடர் நடவு முறையில் 5 மீட்டர் இடைவெளியில் ஹெக்டேருக்கு 400 செடிகள் வீதம் நடவு செய்தால் வீரிய ரகக் கன்றுகள், இடுபொருட்கள்... என 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மானியமாகக் கிடைக்கின்றன.

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

நெல்லியில் 6 மீட்டர் இடைவெளியில், ஹெக்«ருக்கு 275 செடிகள் வீதம் நடும் விவசாயிகளுக்கு, இந்தத் திட்டத்தின்படி 10 ஆயிரத்து 500 மதிப்புள்ள கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.  

பழையத் தோப்புகளைப் புதுப்பிக்க!

ஆரம்பக் காலங்களில் முந்திரியில் விதைக் கன்றுகளை நடவு செய்திருப்பார்கள். அதில் சில மரங்கள் பிரமாதமாக காய்க்கும். சில மரங்களில் காய்ப்பே இருக்காது. சில மரங்களில் சுமாரான மகசூல் மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற தோப்புகளில் இரண்டு மரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில், புதிய ஒட்டுக் கன்றுகளை நடவு செய்து, பழைய மரத்தை கொஞ்சம், கொஞ்சமாக கவாத்து செய்து கொண்டே வரவேண்டும். புதிய செடிகள் காய்க்க ஆரம்பித்ததும், பழைய மரங்களை வெட்டி எடுத்து விட வேண்டும். இந்த முறையில் முந்திரித் தோப்புகளைப் புதுப்பிக்க ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு, அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர் நிலத்துக்கு மானியம் கிடைக்கும்.

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

இதேப்போல, பழைய மாமரங்களை அகற்றி விட்டு... அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி போன்ற விற்பனை வாய்ப்புள்ள புதிய ரகக் கன்றுகளை நடவு செய்யவும், ஒட்டுக்கட்டி புதிய கன்றுகளை உருவாக்கவும், ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் உண்டு. அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேர் நிலத்துக்கு மானியம் கிடைக்கும்.

தரிசு நிலங்களை, தோப்புகளாக மாற்றவும் தேசியத் தோட்டக்கலை வாரியத்தின் மூலம் மானியம் கிடைக்கிறது. இத்திட்டத்தில் ஒருவர், அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை திட்ட அறிக்கை தயாரித்து வங்கியில் கடன் பெற முடியும். வங்கிக்கடனில்

20% மானியமாகக் கிடைக்கும்.

திராட்சைக்கு 30 ஆயிரம்!

மகசூலை அதிகரிக்க, 'தேனீ வளர்ப்பு மூலம் மகரந்தச் சேர்க்கை ஊக்குவித்தல் திட்டம்’ மூலம் ஒருவருக்கு தேனீக்களுடன் கூடிய 50 பெட்டிகள் வரை கொடுக்கப்படுகிறது. புதிய திராட்சை ரகங்களைப் பயிரிடுபவர்களுக்கு முதல் ஆண்டில் ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது.

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

வரும் ஆண்டிலிருந்து, பறவைகளின் தாக்குதலில் இருந்து திராட்சையைப் பாதுகாக்கும் வகையில், 'பறவை தடுப்பு வலைகள்’ அமைக்க, அரை ஹெக்டேர் நிலத்துக்கு ஒன்றே கால் லட்ச ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மண்புழுத்தொட்டிகள் அமைக்க 30 ஆயிரம் ரூபாய்; 100 சதுர அடியில் பாலிதீன் ஷீட்டில் மண்புழு வளர்க்க 5 ஆயிரம் ரூபாய் என மண்புழு வளர்ப்புக்கும் மானியம் உண்டு'' என்று அனைத்துத் திட்டங்கள் பற்றியும் கோடு காட்டிய முருகன்,

''மேற்சொன்ன திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுக வேண்டும்'' என்று வழிகாட்டினார்.

50% மானியத்தில் விதைகள், பழக் கன்றுகள்!

தோட்டக்கலைத் துறையின் மானியங்கள் பற்றி பேசும் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆவுடையப்பன், ''தமிழ்நாட்டில் இருக்கும் 385 வட்டாரங்களிலும், தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பை அதிகரிக்கவும், உயர் விளைச்சல் ரகங்கள் மூலமாக உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 'ஒருங்கிணைந்தத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்’ செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, காய்கறி விதைகள், பழக்கன்றுகள் ஆகியவற்றை 50% மானிய விலையில் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். அதிகபட்சமாக அரை ஹெக்டேர் நிலத்தில் விதைக்கும் அளவுக்குத்தான் காய்கறி விதைகள் கிடைக்கும். பழச் செடிகள் என்றால், ஒரு ஹெக்டேர் அளவுக்கு மானிய விலையில் கிடைக்கும்.

சாகுபடி செலவில் 50% மானியம்!

'உயர் தொழில்நுட்பம் மூலமாக உற்பத்தியை அதிகரிக்கும் திட்ட’த்தின் கீழ் வெண்டை, கத்திரி, கீரை, மிளகாய் மற்றும் மலர் சாகுபடி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், மொத்த உற்பத்திச் செலவில் 50% மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஹெக்டேரில் மிளகாய் சாகுபடி செய்தால், 12 ஆயிரத்து 500 ரூபாய்; வெண்டைக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்; கீரைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய்; கத்திரிக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்; தக்காளிக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்; கொத்தவரைக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்; வெங்காயத்துக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய்; மல்லிகை, ரோஜா போன்ற மலர்கள் சாகுபடிக்கு

12 ஆயிரத்து 500 ரூபாய்... என மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மூலிகைப் பயிருக்கு 20% மானியம்!

விளாத்திக்குளம் ஒன்றியத்தில் அவுரி என்று அழைக்கப்படும் சென்னா அதிகளவில் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. 'தேசிய மருத்துவப் பயிர்கள் இயக்கம்’ திட்டத்தின் மூலமாக சென்னா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு சாகுபடி செலவில் 20% அதாவது 5 ஆயிரம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகிறது'' என்று திட்டங்களை விவரித்தார் ஆவுடையப்பன்!

தொடர்புக்கு,

முருகன், செல்போன்: 9443123712
ஆவுடையப்பன், 
செல்போன்: 9894480156.
முதலிச்சாமி, செல்போன்: 8489353502
துரைப்பாண்டி, செல்போன்: 9443805470.

 பலன் பெற்ற விவசாயிகள் பேசுகிறார்கள்...

தோட்டக்கலைத் துறையில் வரிசையாக திட்டங்கள் இருந்தாலும், இதனால் பயன் பெறுவது எந்த அளவுக்கு எளிதாக இருக்கிறது? இதைப் பற்றி பேசுகிறார், இத்திட்டத்தின்கீழ் பலன் அடைந்து வரும் விளாத்திக்குளம் அருகே உள்ள கத்தாழபட்டியைச் சேர்ந்த முதலிச்சாமி.

புதுத்தோட்டங்களுக்கு 1 கோடி ரூபாய்!

''நான் மிளகாய், வெண்டி, கத்திரினு காய்கறி சாகுபடி செய்யுதேன். இப்ப ஒண்ணேகால் ஏக்கர்ல வெண்டி இருக்கு. ஒரு விவசாயிய கடனாளியாக்குறதே இந்த சாகுபடிச் செலவுதான். கடனை வாங்கி விதைச்சுட்டு, அறுவடை பண்ணி வட்டி மட்டும் கட்டிக்கிட்டு இருக்கறதுதான் எங்க நிலமை. ஆனா, இப்ப சாகுபடி செலவுல பாதியை அரசாங்கம் கொடுத்துடுது. இந்த வெண்டிக்கு வீரிய ரக விதைகளை இனாமா கொடுத்தாங்க. சாகுபடிச் செலவுக்கு 3 ஆயிரத்தை பேங்க்ல போட்டுருக்காங்க. இது எனக்கு மிகப் பெரிய உதவியா இருக்கு. களைவெட்டுறது, உரம் வெக்கிறதுனு அவசரத்துக்குக் கடன் வாங்காம... அந்தப் பணத்தை வெச்சே சமாளிச்சுடுவேன்'' என்கிறார், முதலிச்சாமி.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள முத்தாளப்புரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி, ''90% மானியத்துல துல்லியப் பண்ணையத் திட்டம்,

50% மானியத்துல சொட்டுநீர் பாசனம்னு தோட்டக்கலைத் துறையோட மானியத் திட்டங்கள் எங்க விவசாயத்துக்கு ரொம்ப உதவியா இருக்கு. இப்ப, தரிசு நிலத்தைத் தோட்டமா மாத்துறதுக்காக வங்கிக் கடனா 20 லட்ச ரூபா வாங்கினேன். அதுக்கு தேசியத் தோட்டக்கலை வாரியம் 20% மானியம் கொடுத்திருக்கு. நான் வாழை சாகுபடியில

40 வருஷத்துக்கும் மேல ஈடுபட்டு முன்னோடி விவசாயியா பல பாராட்டுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வாங்கியிருக்கேன்னா... அதுக்கு தோட்டக்கலைத் துறையோட உதவிதான் முக்கியக் காரணம்'' என்றார் பெருமையோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism