Published:Updated:

தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012

தூரன்நம்பி படம் : கே.குணசீலன்

தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012

தூரன்நம்பி படம் : கே.குணசீலன்

Published:Updated:

சாட்டை

##~##

நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை|2012 வடிவமைக்கப்படுகிறது''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இந்தியத் தலைநகர் டெல்லியில், சமீபத்தில் நடைபெற 'தேசிய தண்ணீர் வார விழா'வைத் துவக்கி வைத்த கையோடு, 'தேசிய தண்ணீர் கொள்கை|2012' என்கிற கையேட்டையும் வெளியிட்டு, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகள்தான் இவை!

பிரதமர் கூறியிருப்பதை மேலோட்டமாக பார்த்தால்... 'அட, என்னவொரு அருமையான கருத்து. நாடு முழுக்க இப்படித்தான் நடக்கிறது. நம்முடைய இயற்கைச் செல்வங்களில் ஒன்றான, நீராதாரத்தைப் பாதுகாக்க... இப்படி ஒரு சட்டம் அவசியம் தேவை' என்றுதான் துள்ளிக் குதிப்பீர்கள்.

ஆனால், இப்படி ஒரு கொள்கை வகுக்கப்படுவதன் பின்னணியில், சர்வதேச முதலாளிகளின் 'கொள்ளைத் திட்டம்' ஒளிந்திருக்கிறது என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால்... 'அட, ஆடு நனையுதுனு ஓநாய் அழுத கதையால்ல இருக்கு' என்று, பிரதமரை நோக்கியே கணைகள் விட ஆரம்பித்துவிடுவீர்கள்!

தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012

ஆம், தேசிய நீர் கொள்கை என்கிற பெயரில், இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்தமான நிலத்தடி நீரையும் ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான அஸ்திவாரம்தான்... தேசிய தண்ணீர் கொள்கை-2012. உண்மையில், இதை 'தேசிய தண்ணீர் கொள்ளை-2012' என்றுதான் சொல்லவேண்டும்!

இந்தியாவின் உணவுத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்வது... நிலத்தடி நீரைப் பயன்படுத்தி செய்யப்பட்டு வரும் விவசாயம்தான். இயற்கையாகவே இருந்த நீராதாரங்கள், மன்னர்களின் காலத்துக்கும் முந்தைய காலத்திலிருந்தே உருவாக்கி வைக்கப்பட்ட நீராதாரங்கள் என்று பலவித நீர்நிலைகளும், நாடு முழுக்கவே ஆக்கிரமிப்பின் பிடியில்தான் இருக்கின்றன. எஞ்சியிருக்கும் நீர்நிலைகளும், சொல்லிக் கொள்ளும்படி தண்ணீரைத் தேக்கி வைக்க ஏதுவானவைகளாக இல்லை. இந்நிலையில், நிலத்தடி நீரைவிட்டால் வேறு கதியே இல்லை என்பதுதானே உண்மை! அப்படியிருக்க, அந்த நீருக்கும் வேட்டு வைக்க முற்படுவது என்ன நியாயம்?

விவசாயிகளின் நிலையைப் பற்றி யோசிக்காமல், சட்டங்களையும், திட்டங்களையும் போட்டுக் கொண்டே இருப்பதன் நோக்கம்..? விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, பெரிய பெரிய பணக்கார பண்ணையார்கள், தொழில்முதலைகள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்க நீண்டகாலமாக நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் 'கொலைகார திட்ட'த்தை அரங்கேற்றவா?

'இந்தியாவில் இத்தனைக் கோடி மக்கள் எதற்காக விவசாயத்தில் இருக்க வேண்டும். அவர்களெல்லாம் நிலங்களிலிருந்து வெளியேற வேண்டும்' என்று வெளிப்படையாகவே உங்கள் அமைச்சரவை சகாக்கள் சில மாதங்களுக்கு முன் முழங்கியது எங்களுக்கு மறந்துபோகவில்லை!

தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012

அய்யா மன்மோகன் சிங் அவர்களே... 'உலகமயம்' என்கிற உருப்படாத வார்த்தையைச் சொல்லி, சொல்லியே இந்த நாட்டின் அத்தனை வளங்களையும் அடகு வைத்துவிட்டீர்கள். 'இப்படி செய்தது தவறு. உலகமயமாக்கலை அறிமுகப்படுத்தியதற்கான பலனை இப்போது நாம் அனுபவிக்கிறோம்' என்று சில மாதங்களுக்கு முன்புதான் மேடையிலேயே உண்மையை நீங்கள் ஒப்புக் கொள்ளவும் செய்தீர்கள். ஆனால், அதற்குப் பிறகும்கூட திருந்தாமல், கடைசி கடைசியாக இருக்கும் இயற்கையின் அருட்கொடையான நிலத்தடி நீரையும்\ தனியாருக்கு பட்டா போட்டு கொடுக்கும் பணியில் இறங்கி விட்டீர்களே!

வேண்டாம் அய்யா இந்த விபரீத விளையாட்டு.

தண்ணீர் தேவையைக் குறைக்கவும்... நீர்வளத்தைப் பெருக்கவும் நினைத்தால், அதற்கு 1,008 வழிகள் உண்டு. உதாரணமாக, மிகவும் குறைவாக தண்ணீர் தேவைப்படக்கூடிய இயற்கை வழி விவசாயத்தை மக்களிடம் பெரிய அளவில் பரப்பலாம்; மழைநீர் சேகரிப்பை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்லலாம்; நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை எங்கள் ஊர் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் சொல்லியிருப்பதைப் போல சமூகக் குற்றமாக அறிவித்து தண்டனையைக் கடுமையாக்கலாம்! ஆனால், அதையெல்லாம் விடுத்து பகாசுர முதலாளிகளுக்கு ஆதரவாக தேசிய தண்ணீர் கொள்கை-2012 என்பதை அறிமுகப்படுத்தினால்... அதன் பின்விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்!

ஏற்கெனவே சாகுபடி செலவுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் தூக்கு போட்டு செத்துக் கொண்டிருக்கிறான் விவசாயி. அந்தக் கணக்கு, இப்போதைக்கு லட்சங்களில்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில், பாசனத்துக்கான தண்ணீரையும்  காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் போட்டுவிட்டால்... தற்கொலைகள் கோடிகளில் உயர்ந்துவிடும்... ஜாக்கிரதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism