மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

புறா பாண்டிஎன்.ஜி. மணிகண்டன், காசி. வேம்பையன்படங்கள்: தி. விஜய்,

''வாழையிலிருந்து நார் பிரித்தெடுத்து விற்பனை செய்ய விரும்புகிறோம். அது பற்றிய தகவல்கள் தேவை?''

வி.எஸ். மோகன்ராஜ், மணக்குப்பம்.

##~##

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.கே. சுப்பிரமணியம் பதில் சொல்கிறார்.

''வாழை, பல வகைகளில் பயன்படும் என்பதை அறிந்திருந்த நம் முன்னோர், 'வாழை ஒரு கற்பக விருட்சம்’ என்று சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால், பெரும்பாலும் வாழை இலை மற்றும் பழங்களை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம். குலையை வெட்டியவுடன், மரத்தைக் குப்பையில்தான் போடுகிறோம். வாழை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுத்து நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்கிற தகவல், இன்னும் பரவலாகப் போய்ச் சேரவில்லை. தென்னை நார் திரிப்பது போல, இது எளிதான வேலைதான். இதை, ஆடு, மாடு வளர்ப்பது போல பகுதி நேரத் தொழிலாகச் செய்தாலே நல்ல வருமானம் கிடைக்கும். நார் திரிப்பது மட்டுமல்ல, அலங்காரப் பை, மணிபர்ஸ்... என்று பலவிதமான பொருட்களையும் செய்யலாம். சுற்றுச்சூழலுக்குக் கேடு செய்யாத வாழை நார் பொருட்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் கேட்டவை

வாழை நாருக்கு இருக்கும் வரவேற்பைக் கருத்தில் கொண்டுதான், எங்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வாழை நார் தொழில் பற்றிய பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறோம். விஞ்ஞானிகள் மட்டுமல்லாது, பயன் பெற்ற அனுபவசாலிகளையும் இத்தகையப் பயிற்சின்போது அழைத்து வந்து கருத்துக்களைப் பரிமாறச் செய்து வருகிறோம். அண்மையில், 'தானே’ புயல் மூலம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட விவசாயிகளுக்காக 'வாழை நார் மதிப்புக் கூட்டும் பயிற்சி’யை நடத்தினோம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற தொழில் முனைவோர்தான் பயிற்றுநராக இருந்தார். காய்ந்த மட்டையில் இருந்து நார் பிரித்து எடுக்கும் நுட்பத்தையும், அதை விற்பனை செய்யும் வழிகளையும் அவர் விளக்கினார். திரிக்கப்பட்ட ஒரு மீட்டர் வாழை நாருக்கு 30 பைசா விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் உறுதியளித்திருக்கிறார் முருகேசன். மேலும் தகவல் பெற விரும்பும் விவசாயிகள், எங்கள் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''

நீங்கள் கேட்டவை

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், விருத்தாசலம், கடலூர்-606001. தொலைபேசி: 04143-238353.

''எங்கள் பகுதியில் மலைவேம்பு மரங்களில் புல்லுருவித் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?''

இரா. கணேசன், பட்டுக்கோட்டை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, 'இயற்கை விவசாய ஆலோசகர்' ஏங்கல்ஸ் ராஜா பதில் சொல்கிறார்...

''மரங்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழக் கூடிய தாவரம்தான் புல்லுருவி. மஞ்சள் நிறத்தில் கொடி போல இருக்கும். பறவைகள், மரங்களில் கூடுகளைக் கட்ட, குச்சிகளைச் சேகரிக்கும்போது, இந்தப் புல்லுருவிக் கொடிகளும் சேர்ந்தே மரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன. ஒரு மரத்தில் இருந்து மற்ற மரங்களுக்கும் இந்தப் புல்லுருவி எளிதாகப் பரவக்கூடியது.

நீங்கள் கேட்டவை

பட்டுக்கோட்டை பகுதிகளில், வேம்பு, மலைவேம்பு... போன்ற மரங்களில் புல்லுருவித் தாக்குதல் அதிகமாக உள்ளது. சில இடங்களில், ரசாயன மருந்துகளைத் தெளித்து அழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதற்கு கொஞ்சம்கூட புல்லுருவி அசைவதில்லை. ஒரே வழி... புல்லுருவி தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி கவாத்து செய்வதுதான். இல்லை என்றால், ஒட்டுமொத்த மரமும் பாழாகி விடும். மர சாகுபடியில் ஈடுபடுபவர்கள் புல்லுருவித் தாக்குதலைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.''

''காங்கிரேஜ், கிர்... போன்ற வட மாநில மாடுகளை வளர்த்து வருகிறோம். கோடைக் காலத்தில் இவற்றைப் பாதுகாக்கும் முறைகளைச் சொல்ல முடியுமா?''

ஆர். கீதா, கோவை.

காங்கிரேஜ் மாடு வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த விவசாயி அருண் பிரசாத் பதில் சொல்கிறார்.

''ஆரம்பத்தில், இந்த மாடுகள் நம் ஊர் சூழ்நிலைக்கு சரிப்பட்டு வருமா? என்று நானும் கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த மாடுகள் சுட்டெரிக்கும் வெயிலையும், கொட்டும் மழையையும் தாங்கி வளர்கின்றன. எங்கள் பண்ணையில் இந்த மாடுகளுக்காக தனிக் கொட்டகைகூட கிடையாது. மர நிழலில்தான் ஒதுங்கிக் கொள்கின்றன.

நீங்கள் கேட்டவை

தமிழ்நாட்டு வெயிலை ஒப்பிடும்போது, குஜராத்தில் வெயில் அதிகம். தவிர, இவை பாலைவனப் பகுதி மாடுகள் என்பதால், வெயிலால் பாதிக்கப்படுவதில்லை. அதிக வெயில் இருந்தால், மட்டும் சில சமயங்களில் கொஞ்சமாகப் பாலின் அளவு குறைகிறது. வேறு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. இளம் கன்றுக்குட்டிகளை வெயிலில் இருந்து காப்பாற்ற, சிறு கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

காங்கிரேஜ்... கிர் போன்ற மாடுகள், நம் சூழ்நிலைக்கு ஏற்றபடி வாழக்கூடியவையே! அதனால், கத்தரிவெயில் பற்றிய பயம் தேவை இல்லை. சீமைமாடுகளாக இருந்தால்தான்... தனிக்கொட்டகை, ரப்பர் படுக்கை, சுத்தம், சுகாதாரம்... என்று அவற்றைப் பராமரிக்கவே வருமானத்தில் பாதியைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.''

தொடர்புக்கு: அருண்பிரசாத், 98428-26284.

''பாலிதீன் ஜீட் மூலம் கலன் அமைத்து சாண எரிவாயு உற்பத்தி செய்ய முடியுமா?'

கே. சந்தானம், ஈரோடு.

பாலீதின் ஷீட்  மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்து வரும் அர்ஜுன் மோகன் பதில் சொல்கிறார்.

''விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சில காரணங்களால் சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன மீட்டர் அளவுக்குத்  தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குச் சமையல் செய்ய இந்த அளவு எரிவாயு போதும்.

நீங்கள் கேட்டவை

பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 6 ஆயிரத்து 500 ரூபாய்தான் செலவாகும். செங்கல், சிமென்ட்... எதுவும் தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், பாலிதீன் ஷீட்டைப் போட்டு கலன் அமைத்து விடலாம். அதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்... சில நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம்.

'சில்லரி’ என்று சொல்லப்படும், கழிவு வெளி வருவதற்கும் இக்கலனில் அமைப்பு உள்ளது. இக்கழிவை இயற்கை உரமாகப் படுத்தலாம். எளிதாக அமைத்து விடக்கூடிய இந்தக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு... போன்ற நகரங்களில் இந்த பாலீதீன் ஷீட் எரிவாயுக் கலன் கிடைக்கிறது.''

''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 'இளநிலை வேளாண் தொழில்நுட்பம்’ பட்டப்படிப்பில் சேர வேண்டுமானால், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?'

 ஆர்.சம்பத், திருச்சி.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள், விவசாயத் துறையில் பட்டப்படிப்பு படிக்கும் வகையில் 'பி.எஃப்.டெக்’ என்னும் இளநிலை வேளாண் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதில், அதிகமானோர் சேர வேண்டும் என்பதற்காக, தற்போது தமிழ்நாடு அரசு 50% கட்டணச் சலுகையையும் அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், சிறு-குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகை கிடைக்கும்.  

தொடர்புக்கு: இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422-6611229.

நீங்கள் கேட்டவை