Published:Updated:

ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி !

உரம் இல்லை... செலவு இல்லை... வரவு உண்டு... என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி !

உரம் இல்லை... செலவு இல்லை... வரவு உண்டு... என். சுவாமிநாதன் படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:
##~##

''எந்தப் பயிராக இருந்தாலும் சரி... அதற்கேற்ற ஊடுபயிரையும் சேர்த்து நடவு செய்தால், கூடுதல் வருமானத்தோடு பிரதான

பயிருக்கும் சில நன்மைகள் கிடைத்துவிடும். இதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட விவசாயிகள், ஊடுபயிர் சாகுபடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான பயிராக இருக்கும் ரப்பர் மரங்களுக்கு நடுவே... அமோகமாக அன்னாசி பயிரிடப்படுகிறது! ஒரு காலத்தில் வேலிப்பயிர் என்றே அறியப்பட்டு வந்த அன்னாசியை, இப்போது தனிப்பயிராகவே பலரும் சாகுபடி செய்து வருகிறார்கள். சத்தான சந்தைத் தேவை இருப்பதை விவசாயிகள் உணர்ந்ததுதான் இதற்குக் காரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில், மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கிறது காஞ்சிரக்கோடு. காணும் இடமெல்லாம் ரப்பர் சாகுபடிதான். இங்கே தன்னுடைய தோட்டத்தில் 'ரப்பர் பால்’ சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேஸ் ராணியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள... உற்சாகமாய் பேசத் துவங்கினார்.

''ஆரம்பத்துல இருந்தே இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். 'குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மைச் சங்க'த்தின் மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கேன். பொதுவா, ரப்பர் சாகுபடிக்கு ரசாயன உரங்களைத்தான் போடுவாங்க. நான் ரப்பரையும் இயற்கையிலதான் சாகுபடி பண்றேன். ஏற்கெனவே முந்திரி, மா, பலானு மரப்பயிர்களை நடவு செஞ்சுருந்தோம். பசங்களோட படிப்புச் செலவுக்காக கொஞ்ச பூமியை வித்துட்டோம். மிச்சமிருக்குற 82 சென்ட் நிலத்துல ரப்பர் இருக்கு. அதுலதான் ஊடுபயிரா அன்னாசி போட்டிருக்கோம்.

ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி !

ரப்பர் மரங்களுக்கு 18 வயசு ஆகுது. மொத்தம் 125 மரங்கள் நிக்குது. ஒவ்வொரு மரத்துக்கும் பத்தடி இடைவெளி விட்டிருக்கேன். நடவு செஞ்ச முதல் மூணு வருஷத்துல ஊடுபயிரா கத்திரி, வெண்டை, வழுதலங்காய், புடலைனு காய்கறிகளை சாகுபடி செஞ்சேன். வளர, வளர ரப்பர் மரத்தோட வேர் மண்ணுக்கு மேல் பகுதிக்கு வந்துடும்ங்கறதால.. மேற்கொண்டு காய்கறிகளை ஊடுபயிரா போட முடியாது. அதனாலதான் இப்ப அன்னாசியைப் போட்டுட்டேன். இதுலயும் அசத்தலான வருமானம் கிடைக்குது.

வாழையைப் போல பக்கக்கன்றுகள் !

அன்னாசி, மானாவாரி பயிர். இதோட வளர்ச்சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமா இருக்கணும். இதனால ரப்பருக்கு ஊடுபயிரா போடும்போது... நல்ல மகசூல் கிடைக்குது. இதுல ஒரே விசேஷம் என்னான்னா, இதை ஒரு தடவை நட்டாலே போதும்... வாழை மாதிரி பக்கக்கன்னுகளை விட்டு பரவிடும். தொடக்கத்துல 200 செடிகளைத்தான் நடவு செஞ்சேன். அதுல இருந்து பரவி இப்போ ஆயிரத்துக்கு மேல அன்னாசிச் செடி இருக்குது. மொத்த ரப்பர் மரங்களுக்கும் வருஷத்துக்கு ஒரு தடவை 200 கிலோ மண்புழு உரம் போடுவேன். தேவைப்பட்டா மூலிகைப் பூச்சிவிரட்டியும் தெளிப்பேன். அன்னாசிக்குனு தனியா எதையும் போடுறதில்லை. ரப்பருக்கு கொடுக்குற இடுபொருள் மூலமாவே அன்னாசியும் வளர்ந்து, நல்ல வருமானத்தைக் கொடுக்குது'' என்று முன்னுரை கொடுத்த கிரேஸ் ராணி, சாகுபடி பாடம் சொல்லத் தொடங்கினார்.

செம்மண் ஏற்றது !

'அன்னாசியின் ஆயுள் காலம் ஓர் ஆண்டு. செம்மண்ணில் நல்ல மகசூல் கொடுக்கும். தனிப்பயிராக நடும்போது ஏக்கருக்கு

10 ஆயிரம் செடிகள் வரை நடவு செய்யலாம். ஊடுபயிராக நடும்போது இருக்கும் இடைவெளியைப் பொறுத்து செடிகளின் எண்ணிக்கை மாறுபடும்.

ஒவ்வொரு செடிக்கும் மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும். மண்ணை வெறுமனே கையால் தோண்டி, ஒரு கைப்பிடி தொழுவுரத்தைப் போட்டு நடவு செய்ய வேண்டும்.

களை பற்றிய கவலை இல்லை !

அன்னாசிக்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் இருப்பதால், நோய்கள் தாக்காது. ஊடுபயிர் என்பதால், அதிகமாக களை எடுக்கும் வேலையும் இருக்காது. முதல் முறை நடவு செய்யும்போது ஓராண்டு முடிவில்தான் மகசூல் கிடைக்கும். அதன் பிறகு பக்கக்கன்றுகள் அதிகமாகி விட்டால், வாரம்தோறும் மகசூல் எடுக்கலாம். ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 25 காய்கள் என வைத்துக் கொண்டால்... ஓராண்டில் சுமார் 1,200 காய்கள் கிடைக்கும். எந்தச் செலவும் இல்லாமல் இந்த மகசூல் கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எலி, அணில், காகம் ஆகியவற்றால் அன்னாசி கொஞ்சம் சேதமாகும். இதைக் கட்டுப்படுத்த அன்னாசிப் பழம் விளைந்ததும், வாழை நாரைக் (வாழைப் பட்டை) கொண்டு பழத்தைக் கட்டிவிட வேண்டும். இப்படி செய்யும்போது சேதாரம் தடுக்கப்படுவதுடன், காயும் பருமனாக வரும்’

ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி !

சாகுபடிப் பாடம் முடித்த கிரேஸ் ராணி, ''அன்னாசிப் பழத்தைப் பறிச்சதும், செடியைப் பிடுங்கி ரப்பர் மரத்துக்கு உரமா போட்டுருவேன். காஞ்சிரக்கோட்டில் இயற்கை விவசாயிகள் சேர்ந்து நடத்துற 'ஆர்கானிக் பஜார்' இருக்கு. எங்க தோட்டத்துல விளையுற அன்னாசியை அங்க கொண்டு போயி வித்துடுவேன். மார்த்தாண்டம் சந்தையில் ஒரு பழத்தை பத்து ரூபாய்னுதான் எடுப்பாங்க. ஆர்கானிக் பஜா£ர்ல இருபது ரூபாய்ல இருந்து, இருபத்தஞ்சு ரூபாய் வரைக்கும் விலைபோகும்.

ஒரு கன்னு, 1 ரூபாய் 50 பைசா விலையிலதான் அன்னாசியை வாங்கி நடவு செய்தேன். 200 கன்னுக்கும் சேர்த்து 300 ரூபாய்தான் ஆச்சு. அது மட்டும்தான் செலவு. இப்போ வாரத்துக்கு 20 பழம் கிடைச்சுட்டுருக்கு. குறைஞ்சபட்சம் ஒரு காய் 20 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும்... வாரத்துக்கு 400 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாசத்துக்கு 1,200 ரூபாய்'' என்றார், உற்சாகமாக.

அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடலாம் !

ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி !

ஊடுபயிராக அன்னாசி பயிரிடுவது பற்றி பேசிய பேச்சிப்பாறை, கே.வி.கே. (வேளாண்மை அறிவியல் நிலையம்), தோட்டக்கலை இணைப்பேராசிரியர் தங்க செல்வபாய், ''காற்றில் ஈரப்பதமும், சராசரியான வெப்பமும், நல்ல மழையளவும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அன்னாசியைப் பயிரிடலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், மற்ற பகுதிகளிலும் தென்னை மற்றும் பழத் தோட்டங்களில் அன்னாசியை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் அன்னாசி சாகுபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தென்னையில் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும், பழத் தோட்டங்களில் முதல் மூன்றாண்டுகள் வரையிலும் அன்னாசியை நடவு செய்யலாம். இருபது வயதுக்கு மேற்பட்ட மரங்கள் உள்ள தென்னந்தோப்புகள் மற்றும் அதிக இடைவெளியில் நடவு செய்யப்பட்டுள்ள பழத் தோட்டங்களிலும் ஊடுபயிராக அன்னாசியை நடவு செய்யலாம். ஊடுபயிராக இதை நடவு செய்யும்போது வரிசைக்கு வரிசை இரண்டு அடியும், செடிக்கு செடி ஓரடியும் இடைவெளி விட வேண்டும். புதிதாக நடவு செய்பவர்கள் முதலில் குறைந்த எண்ணிக்கையுடன், சோதனை அடிப்படையில் நடவு செய்து பார்த்துவிட்டு, பிறகு அதிக பரப்பில் நடவு செய்வது நல்லது'' என்று ஆலோசனைகளைப் பகிர்ந்தார்.

 தொடர்புக்கு,

கிரேஸ் ராணி, செல்போன்: 95669-43803.
தங்க செல்வபாய்,
தொலைபேசி: 04651-281759.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism