Published:Updated:

ஜனநாயக எருமைகள்!

ஓவியம்: ஹரன்

ஜனநாயக எருமைகள்!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

நான் பள்ளியில் படித்த காலத்தில், உயர்நிலைப் பள்ளியில் படிக்க, ஒரு மாணவன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏழு ரூபாய் கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. ஆனால்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தத் தொகையே அக்காலத்தில் உழவர் குடும்பங்களில் பெரும் சுமை தரும் தொகையாகவே இருந்தது. அப்பணத்தைக் கட்டுவதற்கே படாதபாடு படுவார்கள். தாலூகா அலுவலகத்தில் விண்ணப்பித்தால், கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துக் கொடுப்பார்கள். ஆனால், அதற்காக அந்த அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும்.

ஐந்தாம் வகுப்பில் தேறிய பிறகு, ஆறாம் வகுப்புக்கு அனுப்புவதில் என் அப்பாவுக்கு இஷ்டமில்லை. 'ஏற்கெனவே மூன்று பேரை பள்ளிக்கு அனுப்பி விட்டேன். விவசாயத்துக்கு ஒருவன் இருக்க வேண்டும்’ என்பது அவரது வாதம்.

''அண்ணனெல்லோரும் படித்துவிட்டார்கள் நானும் படிப்பேன்'' என்று அம்மாவிடம் முறையிட்டேன். அதையடுத்து, மேல்படிப்புக்கு அனுப்ப முடிவு செய்தார்கள்.

சர். சிவகாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி திருக்காட்டுப்பள்ளியில் இருந்தது. பிள்ளையில்லாத உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், விடுதி வசதிகளோடு கல்விக்கூடங்களைக் கட்டி, பத்து மைல் சுற்று வட்டாரத்திலும் இருந்து மாணவர்கள் வந்து படித்து முன்னேற வழி செய்திருந்தார்.

ஜனநாயக எருமைகள்!

நான் நுழைவுத் தேர்வு எழுதி, ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது.... புதிய சூழ்நிலை உற்சாகமளிப்பதாக இருந்த அதேசமயத்தில், காச நோய் முற்றிய நிலையில் அம்மா இயற்கை எய்தி, பேரதிர்ச்சிக்கு ஆளானேன்.  

உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில் ஏணியாக இருந்து எனக்கு உதவிய ஆசிரியர்களை நினைவுகூராமல் இருக்க முடியாது. ஆறாம் வகுப்பாசிரியர் கோவிந்தராசன், தவறு செய்யும் மாணவர்களை, 'வெறுந்தீவெட்டி’ என்று கடிந்து கொள்வார். ஆனால், அன்போடும் கனிவோடும் பாடம் சொல்லிக் கொடுப்பார். பள்ளிக்கு வெளியே சந்தித்தாலும் அன்போடு விசாரிப்பார்.

இந்தி ஆசிரியர் சுந்தரேசன், விளையாட்டாக கரும்பலகையில் கோடுகள் வரைந்து எழுத்துக்களைப் போதிப்பார். ஆறாவது வகுப்பிலேயே நிறைய சொற்களை மனதுக்குள் பதிய வைத்த பெருமை அவருக்குரியது. 'உன் பெயரென்ன..? என் பெயர் நமமாழ்வார்’ என்பது தொடங்கி, 'என்னுடைய தேசம் பாரதம்’... என்பது வரை இன்னும் பல வாக்கியங்கள் எனது நினைவில் உள்ளன. ஏழாவது வகுப்பு வரும்போது... தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்திருந்தது. இந்தி படிப்பதை, எழுதுவதை நாங்களும் புறக்கணித்தோம். அதற்காக இந்தி ஆசிரியர் சுந்தரேசன் வருத்தப்படவில்லை.

பத்தாவது வகுப்பில் மாதிரிக் கணக்குகளை முன்னதாகவே தயாரித்து, வாழ்க்கையில் பயன்படுத்துபவற்றில் இருந்து எடுத்துக்காட்டுகளைப் பாடமாக்கி, கணக்குகளைப் புரிய வைத்தவர், சூரியநாராயண சாஸ்திரி. ரசிக்கும்படியாக சிரிப்புகளை உதிர்த்து, வருத்தமில்லாமல் விஞ்ஞானத்தைப் போதித்தவர் கே.கே.எஸ். இவர் குள்ளமானவர், கேரளக்காரர். வேட்டி கட்டி நீளமாக சட்டை அணிந்து, சரிகையுடன் கூடிய அங்கவஸ்திரத்தை மடிப்பு கலையாமல் தோளின் இரு பக்கங்களிலும் தொங்க விட்டிருப்பார்.

விஷ்ணம்பேட்டை சுப்பிரமணியம் என்ற ஆசிரியரை 'வி.வி.எஸ்' என்று அழைப்போம். ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சைக்கிளில் வரும் அவர்... திருக்காட்டுப்பள்ளியில் நுழையும்போது... நடந்து செல்லுகிற மாணவர்கள் ஓடத் தொடங்குவார்கள். வி.வி.எஸ் அவர்களின் சைக்கிள் மணி வித்தியாசமாக ஒலிக்கும். கடைத்தெருவில் அந்த மணி ஒலிக்கிறது என்றால், இன்னும் பத்து மணித்துளிகளில் பள்ளி தொடங்கிவிடும் என்று அர்த்தம். அதுதான் மாணவர்களின் ஓட்டத்துக்குக் காரணம். அவ்வளவு கறாராக நேரத்தைக் கையாள்பவர்.

தமிழாசிரியர் சீதாராமன், என்னோடு இணக்கமாக இருந்தவர் அல்லர். இருந்தாலும், தமிழ்ப் பாடல்களை இசையோடு பாடி, தெளிவாக விளக்கம் சொல்லி மனதில் இடம் பிடித்தார்.

நாடறிந்த பெரும்புலவர் வே. கோபாலன், பத்தாவது வகுப்பில் எனக்குத் தமிழாசிரியர். தேவையில்லாமல் சாதி குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டதால்... அவரிடம் எனக்கு கருத்து மோதல் வலுவடைந்தது. இருந்தாலும், இறுதியில் அவரிடமும் ஆட்டோகிராஃபை நீட்டினேன். அவர் எழுதிய 'குன்று என நிமிர்ந்து நில்' என்ற பாரதியார் 'ஆத்திச்சூடி' இன்றும் என் நினைவில் நிற்கிறது.

என் நெஞ்சில் நிறைந்து நின்றவர் தமிழாசிரியர் அரசப்பன். அண்ணன் இளங்கோவுடன் சேர்ந்து பள்ளிக்கு வெளியிலேயே வெண்பா இலக்கணம் படித்திருந்தேன். ஆதலால், அரசப்பர் வகுப்பில் முன்மாதிரியாகத் திகழுகின்ற வாய்ப்பு கிடைத்தது.

ஜனநாயக எருமைகள்!

என்னைவிட வளர்ச்சியாக இருந்த மாணவர்களைப் பார்த்து, 'நம்மாழ்வார் சிறியவன் என்று நினைக்காதீர்கள். இடைவேளை நேரங்களில், அவனிடம் இலக்கணம் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் மறைமுகமாகப் பாராட்டியது எனக்கு ஊக்க மருந்தாக இருந்தது! மறக்க முடியாத இன்னொரு ஆசிரியர் சந்தானம் ஐயங்கார்,  ஒன்பதாம் வகுப்பில் அவர் எனக்கு சமூக இயல் ஆசிரியர். மேசையையும், பலகையையும் இணைத்து பொருத்தப்பட்ட இருக்கைகள் அவை ஒவ்வொன்றிலும் மூன்று மாணவர்கள் இருக்கலாம்.

ஆசிரியருக்கு முன்பு இருந்த இருக்கையில், நடு இடம் என்னுடையது. ஒரு நாள் எனக்கு முன்பு இருந்தவனை எழுப்பி, ''ஜனநாயகம் குறித்து ஆபிரகாம் லிங்கன் என்னடா சொன்னான்?'' என்று கேட்டார். மாணவன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான். சென்ற வாரம் ஆபிரகாம் லிங்கன் குறித்து சந்தானம் ஐயங்கார் பாடம்  நடத்தி இருந்தார்.

ஆனால், அந்த அமெரிக்க ஜனாதிபதி சொன்னது நினைவில் இல்லை. ஆசிரியர் என்னைச் சுட்டிக் காட்டி ''நீயாவது சொல்லுடா'' என்றார். நானும் எழுந்து தலைக் கவிழ்ந்து நின்றேன். மூணாவது மாணவனை எழுப்பினார் அவனும் தலைக் கவிழ்ந்து நின்றான். அடுத்து, ''விடுதி மாணவர் யாராவது உண்டா?'' என்று கேட்டார்.

குறும்பு செய்யும் இளைஞர்களை... விடுதியில் சேர்த்து விடுவது உண்டு. அப்படி வந்தவன்தான் கிருஷ்ணமூர்த்தி. ''விடுதிக்குப் போ ஒரு பக்கெட் நிறைய கழனித்தண்ணி (கழுநீர்) கொண்டு வா... மூன்று எருமை மாடுகள் இங்கே நிற்கின்றன'' என்று சொன்னார். ஆசிரியர் கட்டளையை ஏற்று, கழனித்தண்ணி கொண்டுவர போய்க் கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி. 'இன்னும் என்ன அவமானம் காத்திருக்கிறதோ?' என்கிற நடுக்கம், என் உள்ளத்தை ஆக்கிரமித்தது.

ஜனநாயக எருமைகள்!

சற்று நேரத்தில் ஆசிரியர் நடுக்கத்தைக் களைவித்தார். முன் வரிசையில் சுவரை ஒட்டி அமர்ந்திருந்த மாணவனை நோக்கி ''வெளியில் போய் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வா!'' என்றார். சற்று நேரத்தில் இருவரும் உள்ளே வந்தார்கள். ''இருக்கையில் போய் அமருங்கள்'' என்று சொன்ன ஆசிரியர் பின்பு நிதானமாக சொன்னார், ''எருமைகளா நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆபிரகாம் லிங்கன்... 'டெமாக்ரசி இஸ் பை தி பீப்பிள்ஸ், பார் தி பீப்பிள்ஸ் அண்டு ஆஃப் தி பீப்பிள்ஸ்' என்று சொல்லியிருக்கிறார். எருமைகள், எருமைகளுக்காக, எருமைகளைக் கொண்டு செயல்படுத்துவது ஜனநாயகம்''

சந்தானம் ஐயங்கார் சொல்லித் தந்தது இன்று வரை மறக்கவே இல்லை.

 -இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism