Published:Updated:

விதர்பா பாதையில் தமிழகம்...

கழுத்தை நெறித்த கடன்... காலனை அழைத்த விவசாயி !கரு. முத்து

விதர்பா பாதையில் தமிழகம்...

கழுத்தை நெறித்த கடன்... காலனை அழைத்த விவசாயி !கரு. முத்து

Published:Updated:

பிரச்னை

 ##~##

'இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன் தொகையாக நூறு கோடி ரூபாயை அதிகமாக்கியிருக்கிறோம்' என்று ஒவ்வொரு அரசும், விவசாயிகளுக்கு தரும் கடனை ஏதோ சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கடன் மொத்தமுமே... விவசாயிகளுக்கு தூக்குக் கயிறு என்பதுதான் உண்மை. இதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன... இந்தியாவில் நிகழும் விவசாயத் தற்கொலைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆம்... விவசாயக் கடன் என்பதே தூக்குக் கயிறுதான்'' என்பதை நிரூபிக்க, இதோ தமிழகத்திலும் ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி முருகையன், கடன் சுமை காரணமாக ஜூன் 5|ம் தேதி இரவு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக விஷம் குடித்திருக்கிறார். அடுத்த நாள் காலையில், அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தவர்களுக்கு, சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதத்தைப் படித்தபோதுதான் விஷயமே தெரிந்தது.

'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை... கரும்புக்காக நான் வாங்கிய கடன் மட்டுமே காரணம். சாவிலும் யாருக்காவது பயன்பட வேண்டும். சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு என் உடல் பயன்படட்டும்’ என முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வைத்திருக்கிறார் முருகையன்.

இந்த விஷயம் அப்பகுதி முழுக்க பரவி, விவசாயிகளை அதிர வைத்திருக்கிறது. சோகம் பொங்க குழுமிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சாட்சியாக... ஆறாம் தேதியன்று நடந்தேறியது முருகையனின் இறுதிப் பயணம்!    

விதர்பா பாதையில் தமிழகம்...

''வீடு உண்டு... வயல் உண்டுனுதான் இருப்பார் அப்பா. பழி, பாவத்துக்குப் பயப்படுவார். யாராவது கோபமா பேசினாலே... ஒரு வருஷத்துக்கு அவங்களோட பேசமாட்டார். கரும்பு போட்டா... நல்ல லாபம் கிடைக்கும்னு நினைச்சு, நாலு ஏக்கர்ல கரும்பு போட்டார். ஐ.ஓ.பி. பேங்குல கடன் வாங்கியும் பத்தாம போகவே, நகை நட்ட அடமானம் வெச்சோம். அதுவும் பத்தாம... வெளியில வட்டிக்கு வாங்கி செலவு செஞ்சோம். கரும்பு வெட்டியாச்சுனா... மொத்தக் கடனையும் அடைச்சுட்டு நிம்மதியாயிடலாம்னு சொல்லிட்டே இருந்தார். ஆனா, கரும்பு வெட்டற நேரம் பார்த்து... பாழாப்போன ஸ்டிரைக் வந்துடுச்சு.

விதர்பா பாதையில் தமிழகம்...

கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியருங்க தொடர்ந்து ஸ்டிரைக் செய்ததால... கரும்பு வெட்ட ஆர்டர் கிடைக்கல. நாளாக நாளாக கரும்பு கொஞ்சம் கொஞ்சமா கீழே சாஞ்சுது. கடன் கொடுத்தவங்க நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க.

தனியார் ஆலைக்கு கரும்பை அனுப்புங்கனு அரசாங்கம் சொன்னதால... பெண்ணாடம்  பக்கமிருக்கிற அம்பிகா சுகர்ஸுக்கு அனுப்பினோம். ஆனா... வெட்டுக் கூலி, போக்குவரத்துக் கூலினு செலவுதான் அதிகமாச்சுது. இதுக்கு மேல தாங்காதுனு... நெல் நடவு போட்டிருந்த மூணரை ஏக்கர் நிலத்தை அடமானம் வெச்சுட்டு, கடன்காரங்களுக்கு கணக்கு தீர்த்தோம். அதிலிருந்தே மனசொடிஞ்சுதான் இருந்தார். ஆனா, இப்படி ஒரு முடிவை எடுப்பாருனு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல'' என்று கதறிய முருகையனின் மகன் வீரமணி,

''இந்த நாட்டுல விவசாயம் செய்றதே... ரொம்ப பெரிய தப்புங்க'' என்று சொல்லி மீண்டும் வெடித்து அழுதார்.  

முருகையன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான (மார்க்சிஸ்ட் கட்சி) கே. பாலகிருஷ்ணன், ''இந்த சாவுக்கு முழுக்காரணமும் தமிழ்நாடு அரசுதான். கரும்பு விவசாயிகள் பாதிக்கிறார்கள் என்று தெரிந்தும்,

45 நாட்களாக கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல், இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

விதர்பா பாதையில் தமிழகம்...

மழைவெள்ளம், புயல் என்று இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் அழிவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு காரணமாக நடந்திருக்கும் இந்தத் தற்கொலையை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

இந்தத் தற்கொலை மூலமாக, கரும்பு விவசாயிகளின் சோகத்தை ஊருக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் முருகையன். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகள் அனைவரின் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட முருகையனின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதிஉதவி அளிக்க வேண்டும்'' என்று சொன்னார்.

பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் 'செஸ்' போட்டியில் வெற்றி பெற்றவருக்கு இரண்டு கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக அள்ளிக் கொடுக்கும் முதல்வர் ஜெயலலிதா... நாட்டின் முக்கிய தேவையான உணவு உற்பத்தியில் தன்னுடைய பங்கை உறுதிப்படுத்த... கடன் என்கிற ஓட்டைப் படகு மூலமாகவே வாழ்க்கைக் கடலை கடக்கும் விவசாயிகளின் நல்வாழ்வுக்காக என்ன செய்யப் போகிறார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism