Published:Updated:

கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...

ஆகா... ஆடி !படங்கள்: மு. ராமசாமி ,கரு.முத்து,கு.ராமகிருஷ்ணன்

ஆடிப் பட்டம்

##~##

'ஆடிப் பட்டம் தேடி விதை...’ என்ற பழமொழி, விவசாயிகளின் மத்தியில் பிரபலமான ஒன்று. காரணம்... காலகாலமாக அது அவர்களுக்குத் தவறாமல் கைகொடுத்து வருவதுதான். ஆம், ஆழ்ந்த அனுபவத்துக்குப் பிறகு முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கும் ஒரு சூத்திரமாகவே இந்தப் பழமொழி அவர்களுக்குப் பயன்பட்டு வருகிறது! இந்தப் பட்டத்தில் விதைத்தால்... எதிர்பார்த்தபடி விளைந்து கைகொடுப்பது... கண்கூடு! அந்த வகையில், 'ஆடிப் பட்டம்' கைகொடுக்கும்விதம் பற்றி இங்கே பேசுகிறார்... 'காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க'த்தின் பொதுச் செயலாளர், 'கீழ்வேளூர்’ தனபாலன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை!

''வைகாசி, ஆனி மாதங்களில் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் தமிழகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும். இந்த மழைநீரானது... கொஞ்சம் கொஞ்சமாக உள் தமிழகத்தை நோக்கி ஓடி வந்து, ஆடி மாதத்தில்தான் ஊரையே நனைக்கும். கூடவே, கொஞ்சம் போல மழையும் எட்டிப் பார்க்கும். இப்படி கிடைக்கும் தண்ணீரை வைத்தே விவசாய வேலையைத் தொடங்குவார்கள். குறிப்பாக... நெல் சாகுபடி,  பெரும்பாலான ஊர்களில் ஆடிப் பட்டத்தில்தான் நடக்கும். அந்தக் காலத்தில் ஆறு மாத நெல் ரகங்கள் எல்லாம்கூட இருந்தன. அதாவது... ஆடியில் விதைத்தால்... தையில் பொங்கல் வைக்க, புது அரிசி விளைந்து வந்துவிடும்.

கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகும், அணையில் தேங்கும் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடைக்கு தண்ணீர் வரும் சமயத்தில், ஆடி மாதம் துவங்கி விடும். அதனால், ஆடியில் விதைப்பது என்பது பல காலமாவே இங்கே வாடிக்கையாகியிருக்கிறது. பாட்டன், பூட்டன்கள் ஆடிப் பட்டத்தில்தான் தேடி விதைத்திருக்கிறார்கள்!'' என முன்னுரை கொடுத்த தனபாலன், தொடர்ந்தார்.

பருவம் மாறும் நேரம்!

''நெல் மட்டுமல்லாமல்... வெண்டை, அவரை, துவரை, மொச்சை, பாகற்காய், பீர்க்கங்காய், புடலை என அனைத்து விதமான பயிர்களையும் ஆடி மாதத்தில்தான் விதைத்திருக்கிறார்கள். இன்றும் நாம் அதைத்தான் பின்பற்றி வருகிறோம்.

புரட்டாசி மாதக் கடைசி அல்லது ஐப்பசி மாதத் தொடக்கத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். அந்த சமயத்தில், வயலில் இளம்பயிர்களோ, பூக்கும் பருவத்திலுள்ள பயிர்களோ இருந்தால், வீணாகி விடும். ஆனால், ஆடியில் விதைக்கும்போது, இப்படி பயிர் வீணாவதைத் தடுக்க முடியும்.

கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...

தை மாதம் அறுவடை முடித்த பிறகு சணப்பு, நரிப்பயிர், காவாலை, டேஞ்சா என்று வயலை வளப்படுத்தும் பயிர்களின் விதைகளை வயலில் தெளித்து, கொஞ்ச காலம் நிலத்தைக் காய போட்டு விடுவார்கள். அந்தச் சமயத்தில் கடுங்கோடை வாட்டும். ஆடி பிறக்கும்போது கோடை மாறி பருவம் மாறும் என்பதும் ஆடிப் பட்டத்துக்கு ஒரு காரணம்'' என்ற தனபாலன், தொடர்ந்து விவசாய முறைகளைப் பற்றி சொன்னார்.

கோடை உழவு!

''சித்திரை மாதத்தில் புழுதி உழவு ஓட்டி காயப் போடுவார்கள். அடிக்கும் வெயிலில் வயலில் இருந்த களைகளின் வேர் காய்ந்து பட்டுப்போகும். கோடை மழை பெய்தால்... உடனே உழவு ஓட்டி விடுவார்கள். மழை ஈரத்தில் முளைத்த களை, உழவில் புரட்டப்பட்டு விடும். அதோடு மண்ணுக்கு காற்றோட்டமும் கிடைக்கும். ஆனி மாதத்தில், தொழுவுரத்தை வயலில் கொட்டுவார்கள். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வயலில் பட்டி போடுவார்கள். அந்த சமயத்தில் வீட்டுக்கு ஒருவர் என ஆட்கள் திரண்டு, ஊரிலிருக்கும் பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தாங்களாகவே வெட்டி சீர்படுத்திக் கொள்வார்கள்.

விதை முகூர்த்தம்!

ஆடி மாதத்தில் முதலில் வரும் ஒரு நல்ல நாளில் ஊரில் உள்ள விவசாயிகள் அத்தனைப் பேரும் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து, தங்களது பண்ணை ஆட்களோடு அங்கே கூடுவார்கள். அவர்கள் அந்த வருடத்தில் விதைக்கப் போகும் விதையில் கொஞ்சத்தையும் எடுத்து வருவார்கள். இறைவழிபாடு முடிந்ததும் எல்லோரும் எடுத்து வந்த விதைகளை அவரவர்க்கு ஒதுக்கிய இடத்தில் விதைத்து வைப்பார்கள். இதற்குப் பெயர் 'விதை முகூர்த்தம்'. மூன்று நாட்களில் அந்த விதைகள் முளைத்து வருவதை வைத்து, தங்களது விதையின் விதைப்புத் திறனைச் சோதித்துக் கொள்வார்கள். அந்தச் சமயத்திலேயே பண்ணை ஆட்கள், நீராணிக் காவல், தலையாரி என அனைத்தையும் முடிவு செய்து விடுவார்கள். இப்படி முன்னேற்பாடுகளைச் செய்து வெற்றிகரமான விவசாயம் செய்து வந்திருக்கின்றனர், நமது முன்னோர்.

பொன்னேர் பூட்டுதல்!

ஆடி மாதத்தில், ஒரு நல்ல நாளில் முதல் உழவு தொடங்குவதை விழாவாகவே கொண்டாடுவார்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்து விவசாயிகள் என்று அனைவரும் கூடியிருக்க... உழவு மாடுகளும் கலப்பையும் அலங்கரித்து நிற்க பிள்ளையார் பிடித்து வைத்து, அவருக்கும் வருணபகவானுக்கும் வேண்டுதல் செய்து பூஜைகள் நடத்தி, முதல் உழவை ஆரம்பிப்பார்கள் விவசாயிகள். இதற்குத்தான் 'பொன்னேர் பூட்டுதல்’ என்று பெயர். நல்லேர் பூட்டுதல் என்றும் சொல்வார்கள்.

இது தவிர, யாராவது ஊருக்குக் கிளம்பும்போது மண்வெட்டியோடு எதிரே யாரும் வந்தால்... அது சகுனத்தடை என்று கிராமத்தில் சொல்வார்கள். விவசாய வேலை செய்ய உகந்த நேரம் இது என்பதால், அவன் வேலை செய்யப் போகிறான். அந்த நேரத்தை தவறவிட்டு, நாம் ஊருக்குப் போனால் நமக்கு விளைச்சல் இருக்காது. ஊரோடு இணைந்துபோக வேண்டும் அதனால் ஊர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, வயலுக்குப் போக வேண்டும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

ஆடிமாதத்தில், கல்யாணம், காட்சி என்று விசேஷங்கள் செய்வதையும் தவிர்ப்பதற்குக் காரணமும் இதுதான். அந்த நாட்களில் விசேஷம் வைத்தால்... அதற்காக பத்து நாட்கள் வீணாகி, பருவம் தப்பி விடும். மற்றவர்களும் வேலையை விட்டு, நம் வீட்டு விசேஷத்துக்கு வர நேரிடும். அதனால், ஆடியில் விவசாய வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றுதான் அதைத் தவிர்த்தார்கள், நம் முன்னோர்கள்'' என்று தெளிவாக எடுத்து வைத்தார் தனபாலன்.

கம்பீரமான கம்பு உருண்டை!

தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் கலியபெருமாள், ''இருபது

கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...

முப்பது வருஷத்துக்கு முன்னயெல்லாம் ஆடிப் பட்டத்துல வரகு, கம்பு, துவரைதான் பயிர் பண்ணுவோம். விளையுற கம்பை உரல்ல போட்டு இடிச்சி, பெரிய பெரிய உருண்டையா உருட்டி வெச்சுக்குவோம். மண்பானையில வெந்நீரை கொதிக்கவிட்டு, கம்பு உருண்டைகளைப் போட்டு, கொஞ்ச நேரம் கழிச்சி, பானையை, கீழ இறக்கி வெச்சுடுவோம். வாசனை 'கமகம’னு இருக்கும்.

அந்த உருண்டைகளை இன்னொருப் பானையில தண்ணியை ஊத்தி, அதுக்குள்ள போட்டு வெச்சுடுவோம். பத்து நாளானாலும் கெடாது. தினமும் ஒவ்வொரு உருண்டையா எடுத்து, நீராகாரம் அல்லது மோர்ல கலந்து குடிப்போம். ருசியாவும் இருக்கும்... தெம்பும் கொடுக்கும். அதுதான் எங்களோட ஆரோக்கியத்துக்குக் காரணம். இப்பல்லாம் எங்க பகுதியில யாரும் இதை சாகுபடி செய்றது இல்ல. இதோட மகத்துவமும் யாருக்கும் தெரியறதில்லை'' என்கிறார், வருத்தமாக.

இதேபகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி, ''வீட்டுத் தோட்டங்கள்ல ஆடிப் பட்டத்துல, ஆடி அமாவாசை அன்னிக்கு பூசணி, சுரக்காய், பரங்கி, அவரை, பாகல், பீர்க்கன் மாதிரியான கொடி வகைக் காய்கறிகளை சாகுபடி செய்வாங்க'' என்று கொசுறு தகவல் தந்தார்.

கடைமுழுக்கு!

சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் பகுதியைச் சேர்ந்த சம்பந்த குருக்கள், ''ஐப்பசி மாதம் கடைசி தேதி அன்று, மயிலாடுதுறையில் நடக்கும் கடைமுழுக்கு உற்சவம்... விவசாயத்தோடு தொடர்புடைய ஒரு சடங்குதான். அன்று காவிரி ஆற்றில் 'துலாகட்டம்' என்ற இடத்துக்குச் சென்று மூழ்கி எழுந்தால்... பாவங்கள் அனைத்தும் தீரும், புண்ணியம் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விவசாயிகளைப் பொறுத்தவரை... ஆடியில் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி, அடுத்தடுத்த மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் பெய்யும் மழையைத் தொடர்ந்து, பெருவெள்ளமாக பெருக்கெடுக்கும். ஐப்பசி மாதத்தோடு மழை முடிந்து விடுவதால், அந்த மாதத்தின் கடைசி தேதியை 'கடைசி முழுக்கு’ என்று விவசாயிகள் சொல்வார்கள். இதோடு போதும்... இனி வெள்ளம் வந்தால், எங்கள் பயிர்களும் உயிர்களும் தாங்காது என்று சொல்லி, இறைவனிடம் வேண்டி துலாகட்டத்தில் முழுக்கு போட்டுத் திரும்புவார்கள் விவசாயிகள். அது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது'' என்றார்.