Published:Updated:

சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!

பசுமைக் குழுபடம்: தி. விஜய்

முன்னறிவிப்பு

##~##

தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், 'உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மைய' தலைவர் மற்றும் பேராசிரியர் அஜன்... 'ஆடிப் பட்டத்தில்’ எந்தெந்தப் பயிரை விதைப்பு செய்தால்... லாபகரமாக இருக்கும் என்பதைப் பற்றி இங்கே பகிர்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழைக் காலமான 'ஆடிப் பட்டம்’தான் மானாவாரி மகசூலைத் தீர்மானிக்கிறது. இந்தப் பட்டத்தில் நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைக்கக்கூடிய பயிர்களான மக்காச்சோளம், எள், சின்ன வெங்காயம், நிலக்கடலை ஆகிய பயிர்களின் விலைகள் பற்றி ஆய்வு செய்ததில் சில முடிவுகளைக் கண்டறிந்தோம்'' என்றவர், ஒவ்வொரு பயிருக்கான முன்னறிவிப்புகள் பற்றியும் விளக்க ஆரம்பித்தார்.

சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!

மக்காச்சோளம் குவிண்டால் 1,150 ரூபாய்!

''கோழிப்பண்ணைகள், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான மக்காச்சோளத்தைக் கையிருப்பில் வைத்துள்ளதால்... மக்காச்சோளத்தின் விலை 1,200 ரூபாயைத் தாண்டாமல் இருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு மக்காச்சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, நடப்பு 'கரீப்’ பருவம் (ஜூன் -அக்டோபர்) முதல்... ஒரு குவிண்டால் 980 ரூபாயில் இருந்து, 1,175 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், ஆய்வு முடிவுகளின்படி, ஆடிப் பட்டத்தில் விதைப்பு செய்யப்படும் மக்காச்சோளம், அறுவடைக் காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு குவிண்டால் 1,100 ரூபாய் முதல், 1,150 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!

எள்ளுக்குக் கூடிய குறைந்தபட்ச ஆதார விலை!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஆடிப் பட்டத்தில் (ஜூலை -ஆகஸ்ட்) விதைக்கப்படும் எள், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அறுவடை செய்யப்படும். மத்திய அரசு எள்ளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நடப்பு கரீப் பருவம் முதல்... ஒரு குவிண்டாலுக்கு 3,400 ரூபாயில் இருந்து, 4,200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இந்நிலையில் ஆய்வு முடிவுகளின்படி, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் ஒரு குவிண்டால் எள்ளின் விலை 5,500 ரூபாயில் முதல், 5,800 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புகள் உள்ளன.

சின்ன வெங்காயத்தின் விலை சீராக இருக்கும்!

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, சின்ன வெங்காயத்தின் உற்பத்தி இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை ஒரு கிலோ 7 ரூபாயில் இருந்து, 12 ரூபாயாக இருந்தது. மத்திய அரசு, வெங்காயத்தின் விலை குறைவைத் தடுக்கவும், ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது. இதன்மூலம் ஏற்றுமதி  அதிகரித்துள்ளது.

சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!

தற்பொழுது, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை நாற்றுக்காய் ஒரு கிலோ 19 ரூபாய் முதல் 22 ரூபாயாகவும், நடவுக்காய் ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாயாகவும் உள்ளது. எங்கள் ஆய்வு முடிவுகள்படி ஆடிப் பட்டத்தில் விதைப்பு செய்யப்படும் சின்ன வெங்காயத்துக்கு அதன் அறுவடை காலமான செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நிலக்கடலைப் பருப்புக்கு நிலையான விலை!

ஆடிப் பட்டம், தமிழ்நாட்டில் நிலக்கடலை விதைப்புக்கு ஏற்ற முக்கிய பட்டமாகும். இந்தப் பட்டத்தில் விதைப்பு செய்து, அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான அறுவடைக் காலத்தில் ஒரு கிலோ நிலக்கடலைப் பருப்புக்கு 46 ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு  உள்ளது'' என்று சொன்ன அஜன்,

சீராக சின்ன வெங்காயம்... நிலையாக நிலக்கடலை!

''எங்கள் ஆய்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து... விவசாயிகள் மக்காச்சோளம், எள், சின்ன வெங்காயம், நிலக்கடலை ஆகியவற்றை விதைப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பதன் மூலம், நஷ்டத்தைத் தடுக்கலாம். மேலும், விற்பனை மற்றும் விலை முன்னறிவிப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கு எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றும் சொன்னார்!

தொடர்புக்கு,
தொலைபேசி: 0422-2431405.