Published:Updated:

தெற்கே ஆடி... வடக்கே கரீப்!

ஆர். ஷஃபி முன்னா படங்கள்: குல்தீப்சிங்

பட்டம்

##~##

'விதை விதைக்க, தலைப்பாகை கட்டி முடிக்கும் நேரம்கூட ஒருவர் காத்திருக்கக் கூடாது’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

-நம்மூர் 'ஆடிப் பட்டம் தேடி விதை'க்கு இணையான உத்தர பிரதேச மாநில பழமொழி இது. ஆம், இங்கே வார்த்தைக்கு வார்த்தை இந்தப் பழமொழியைத்தான் உச்சரிக்கிறார்கள். அந்த அளவுக்கு விதைப்பு மீது அவர்களுக்கு அக்கறை!

இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவராஸ்யமான கதையையும் சொல்கிறார்கள் இந்த மக்கள்.

அது, வடஇந்தியாவில் விதைப்புக் காலம். அதிகாலையில் விதைப்பதற்காக இரண்டு விவசாயிகள் வயல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒருவரின் தலைப்பாகை அவிழ்ந்து விட, 'நீ முன்னே செல், நான் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்’ எனச் சொல்லியபடி சரி செய்யத் தொடங்குகிறார் (அந்த மாநிலத்தில் தலைப்பாகை மிகப் பெரியதாக இருக்கும்). மற்றவரோ... வயலை அடைந்து விதைக்கத் தொடங்கி விட்டார். தலைப்பாகைக்காரர், வந்து சேர்வதற்குள் சரசரவென பெய்த மழை, வயலை நிறைத்து விட்டது. இதனால் ஒருவர் விதைத்தும், மற்றவர் விதைக்க முடியாமலும் வீடு திரும்பினார்கள்.

தெற்கே ஆடி...  வடக்கே கரீப்!

தற்போது கோடை முடிந்து, பருவமழை சீக்கிரமே வந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பில்... வடஇந்தியாவிலும், குறிப்பாக உத்திரபிரசேத மாநிலத்திலும் விதைப்புக்கான பணிகளில் தீவிரமாகவே இருக்கிறார்கள் விவசாயிகள். அதேசமயம், வெயில் என்னவோ இன்னமும் குறைந்தபாடில்லை. அரிசியை சாலையில் கொட்டினால்... வெந்து சோறாகிவிடும் அளவுக்கு, 43 டிகிரி வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வட இந்திய விவசாயிகளின் பட்டம் பற்றி தெரிந்து கொள்ள, அலிகார் அருகேயுள்ள அதோன் எனும் கிராமத்துக்கு நாம் சென்றோம். அப்போது, மக்காச்சோள விதைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார், அந்த கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் சலீம் அகமது. அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சுக் கொடுத்தபோது, ''நாங்கள் கோடை முடிந்து விதைப்பதை 'கரீப் பசல்' (ஜூலை-செப்டம்பர்) எனவும், குளிர் கால விதைப்பை 'ரபி பசல்' (அக்டோபர்- பிப்ரவரி) எனவும், இரண்டுக்கும் இடையில் வருவதை 'ஜாயத் பசல்' (மார்ச்- ஜூன்) எனவும் அழைக்கிறோம். இவற்றில் கரீப் மற்றும் ரபி மட்டுமே காலம்காலமாக இருந்த பருவங்கள். 'ஜாயத்’ இடைக்காலத்தில் வந்தது'' என்று தங்களுடைய பட்டம் பற்றி சொன்னவர்,

தெற்கே ஆடி...  வடக்கே கரீப்!

''தலைப்பாகை பழமொழி போலவே... 'வியாபாரத்தை யோசித்து பொறுமையாக செய்! விதைப்பதை யோசிக்காமல் உடனடியாக செய்’ என்றும் ஒரு பழமொழி உண்டு'' என்று கூடுதல் தகவலும் தந்தார்.

மற்றொரு விவசாயியான ராஜ்வீர் லால், ''நவம்பர் 15 துவங்கி, சுமார் ஒரு மாதம் வரை நடக்கும் ரபி பசலில் கோதுமை, உருளைக்கிழங்கு, பருப்பு வகை, பட்டாணி, கடுகு மற்றும் பார்லி ஆகியவற்றை பயிரிடுவோம். இந்த மூன்று விதைக் காலங்களில் ரபி பசல்தான் எங்களுக்கு லாபகரமானதாக இருக்கிறது. காரணம், அப்போது பயிரிடப்படும் கோதுமை மற்றும் உருளைக் கிழங்கு அதிகமான லாபம் தருகிறது. 90 தினங்களில் பயிராகும் உருளைக்கிழங்கை உடனடி தேவைக்காக இருபது தினங்கள் முன்பாகவே அறுவடை செய்து விடுவார்கள். மகசூல் அதிகமாக இருக்கும்போது நன்கு முற்றிய பின் அறுவடை செய்து 'கோல்ட் ஸ்டோரேஜ்’க்கு அனுப்பி விடுவோம். இதை, ஒரு வருடம் கழித்துக்கூட எடுத்து விற்பனை செய்யலாம்.

கரீப் பசலில் மக்காச்சோளம், கம்பு, நெல் ஆகியவற்றை பயிரிடுவோம். இதில் நெல் மற்றும் மக்காச்சோளம் மிகவும் லாபகரமானது. ஜாய்தா பசலில் மக்காச்சோளம், கம்பு, காய்கறி மற்றும் பார்லி பயிரிடுவோம். ஆனால், இந்த ஜாய்தா விதைக் காலமானது... நதி நீர் மற்றும் கிணற்று நீர் பெறும் நிலங்களில் மட்டும் நல்ல பலன் தரும். வட மாநிலங்களில் கங்கை, யமுனை என பல நதிகள் ஓடுவதால்... பெரும்பாலான இடங்களில் ஜாய்தா பசல் காலமும் பலன் தரக் கூடியதே'' என்று சொன்னார்.

ஆகக்கூடி... ஆடிப்பட்டம் போலவேதான் இருக்கிறது அவர்களுடைய கரீப்!

சுரைக்காய் பெருக்க ஊசி!

தெற்கே ஆடி...  வடக்கே கரீப்!

முஷ்டாக் அகமது என்கிற விவசாயி பேசும்போது தந்த தகவல்கள்... பகீரிடச் செய்வதாக இருந்தன.

''பயிர்களுக்கான உரங்கள் மற்றும் மருந்துகள் என்கிற பெயரில் நச்சுகளை, அரசு அனுமதி இல்லாமல் வெளிப்படையாகவே விற்கிறார்கள். இது உண்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. உதாரணமாக, சுரைக்காய் விரைவில் பெருப்பதற்காக... தடை செய்யப்பட்ட ஒரு மருந்தை, ஊசி மூலம் செலுத்துகிறார்கள். வெண்டைக்காய் சுருட்டிக் கொள்ளாமல் நீளமாக வளர்வதற்கும் மருந்து தெளிக்கப்படுகிறது. இதேபோல், கத்திரிக்காய், பாகற்காய், காலிஃப்ளவர் என அனைத்து பயிர்களிலும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாடு அதிகமாகி விட்டது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, கடும்குளிரில் வீணாகி விடாமல் இருப்பதற்காக அதன் மீது மது கலந்து ஸ்பிரே செய்கிறார்கள்'' என்று வருத்தங்களைப் பகிர்ந்தார் முஷ்டாக்.