Published:Updated:

'வறுமைக் கோட்டுக்கு 22 ரூபாய்...கக்கூஸுக்கு 35 லட்ச ரூபாய்!'

கோவணாண்டி

கோவணாண்டி

முறையீடு

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'மௌன குரு' மாண்புமிகு மன்மோகன் 'ஜி’ அவர்களோட சிஷ்யப் பிள்ளை; ஏழைக இல்லாத இந்தியாவை உருவாக்கி, உலக நாட்டுக்கெல்லாம் உதாரணமா இந்தியாவை உயர்த்தியிருக்கற 'நிரந்தரத் திட்டக் குழு துணைத் தலைவர்' மான்டேக் சிங் அலுவாலியா அய்யாவுக்கு, வணக்கம்.... வந்தனம்... எல்லாத்தையும் ஒட்டுக்கா சொல்லிக்கறான்... இந்த 'தென்னாட்டு சீமான்' கோவணாண்டி!

அதென்ன 'தென்னாட்டு சீமான்'னு பாக்கறீங்களா? அதான், '22 ரூபாய் இருந்தாலே... வறுமைக் கோட்டுக்கு மேலதான் வாழ்க்கை'னு நீங்களும் ஒங்க குழுவும் சேர்ந்து மிகப்பெரிய ஆராய்ச்சி பண்ணி, எங்களையெல்லாம் 'சீமான்'களா மாத்திப்புட்டீங்களே!

'நகரத்தான், ஒரு நாளைக்கு 28 ரூபாயும்... கிராமத்தான் 22 ரூபாயும் சம்பாதிச்சா... அவங்க ஏழையில்லை. பணக்காரங்க பட்டியல்ல சேர்ந்துடுவாங்க'னு சொல்லிட்டீங்க. பிச்சை எடுக்கறவங்ககூட... ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறு ரூபாய் சம்பாதிக்கறாங்க. அப்படியிருக்கறப்ப... இந்த நாட்டுல ஏழைக எப்படி இருப்பாங்க?

தினமும் நூறு ரூபாய் சம்பாதிச்சாத்தான், ரெண்டு பேர் உள்ள குடும்பம், ஒருவேளையாவது சாப்பிட முடியும்கிற நிலையிலதான் நாடே இருக்கு. ஆனா... '22 ரூபாய் இருந்தா, வறுமைக் கோட்டைத் தாண்டிட்டாங்க'னு கண்டுபிடிச்சு சொல்லியிருக்கீங்களே... இந்த அதிஅற்புதக் கண்டுபிடிப்புக்கு, இந்த வருஷம் பாரத ரத்னா, ஆஸ்கர், நோபல்னு ஒலகத்துல இருக்கற சகல பரிசுகளையும், ஒங்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பாங்கனு ஊருகாட்டுல பேசிக்கிறாங்க!

'வறுமைக் கோட்டுக்கு 22 ரூபாய்...கக்கூஸுக்கு 35 லட்ச ரூபாய்!'

அட, ஆமாங்க... உங்க சங்கதி எங்க ஊரு நண்டு, சிண்டுகளுக்கெல்லாம்கூட தெரிஞ்சு... நாறி, நசநசத்துக் கெடக்குதுங்க. எங்க ஊரு இங்கிலிபீசு வாத்தியாரும்... அதாங்க, ஒங்க கதர் சட்டை ஆதரவாளர். அவரும்கூட இந்த பொடுசுங்களோட சேர்ந்துக்கிட்டு, கோணாவாய்க்கா மதகுல உக்கார்ந்துகிட்டு, ஒங்கள நாரு நாரா கிழிச்சி தொங்க விட்டுக்கிட்டு இருக்காருங்க!

வறுமைக் கோட்டை நீங்க முறிச்சப்ப... நாடு மட்டும்தாங்க சிரிச்சுது. ஆனா... உங்க 'கக்கூஸு’ கதையக் கேட்டு உலகமே... சிரிப்பா சிரிக்குது! எங்காளுக காலங்காத்தால காடு, மேடுகள்ல காசு இல்லாம, 'ஹாயா’ காத்து வாங்கிட்டு போவாங்க. ஆனா, அதே விஷயத்துக்காக உங்க ஆபீஸுல 35 லட்ச ரூபாய் செலவு பண்ணி, ரெண்டு 'கக்கூஸு’ கட்டி அசத்திட்டீங்கனு கேள்விப்பட்டேன். உங்க 'கக்கா’ அவ்வளவு காஸ்டிலியா? நீங்க திங்குறது, தூங்குறது, யோசிக்கறது எல்லாமே அமெரிக்க பாணியில இருக்கறப்ப... 'அது’ மட்டும் இந்தியா ஸ்டைல்ல இருக்கலாமா?

சரி... அந்த 35 லட்சத்தையாவது முறையா செலவு செஞ்சீங்களா? இல்லாட்டி... 2ஜி, நிலக்கரி சுரங்கம் கணக்கா புதுசா 'கக்கூஸ் ஊழல்'னு பூதம் கிளம்பிடப் போகுது!

''நிறுத்துங்க மிஸ்டர். கோவணாண்டி... என்னைப் பத்தி எதுவேணும்னாலும் சொல்லு. என் 'கக்கூஸ்’ திட்டத்தைப் பத்தி மட்டும் குறை சொல்லாதே. நானென்ன எனக்காகவா இவ்வளவு பணத்தைப் போட்டுக் கட்டினேன். பல நாட்டு பெரிய மனுசங்களும் வந்து போற இடம் (கக்கா போறதுக்காகவா கடல் கடந்து வர்றாங்க). நல்லா இல்லாட்டி... நாட்டோட கௌரவமே நாறிடும்ல. இந்தியா மாதிரியான பணக்கார நாட்டுக்கு (!), கக்கூஸ் கட்டறதுக்கு 35 லட்சம் செலவழிக்கறது பெரிய தொகையே இல்ல.

நம்ம ஜனாதிபதி இதுவரைக்கும் உலகம் சுத்தி பாத்ததுக்காக எத்தனை கோடிகளை செலவு செஞ்சுருக்காங்க; மாயாவதி, அவங்களோட பங்களாவை ரிப்பேர் செஞ்சதுக்கு 85 கோடிகள செலவு செஞ்சுருக்காங்க; அம்புட்டு ஏன்... உங்க ஊரு முதலமைச்சர் ஜெயலலிதாம்மா, ஓராண்டு சாதனையை பத்திரிகைகளுக்கு விளம்பரம் மூலமா டமாரம் போடுறதுக்காகவே கிட்டத்தட்ட 56 கோடியை செலவு செஞ்சுருக்காங்க. அதையெல்லாம் கம்பேர் பண்றப்ப... 35 லட்சம் பிசாத்து காசு’'னு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நீங்க கேக்கறதும்.. நல்லாவே எங்காதுல விழத்தான் செய்யுதுங்க!

யோசிச்சுப் பார்த்தா... நீங்க சொல்றதும் சரிதாங்க. உங்க ஆபீஸுக்கு வர்றவங்க என்ன இந்திய நாட்டு ஜனங்களா... மூக்கப் புடிச்சுக்கிட்டு ,முனிசிபாலிட்டி கக்கூஸ் மாதிரி இருந்தாலும், போயிட்டு வர்றதுக்கு? கூந்தல் உள்ள சீமாட்டி அள்ளி முடியுறீங்க... காந்தாரி கணக்கா பொறாமைப்பட்டு அம்மிக்கல்ல எடுத்து அடிவயித்துல இடிச்சுக்கிறவங்கள வுட்டுத் தள்ளுங்க.

உங்க உயர்ந்த கொள்கைக்கு... உயர்ந்த குணத்துக்கு நீங்களெல்லாம் நல்லா வருவீங்க. ஆனா, உங்க ஆபீஸ் கக்கூஸுக்கு வாஸ்து சரி இல்லைனு நினைக்கிறேன். இல்லாட்டி, உலக பெரிய பொருளாதார மேதை மன்மோகன் ஜி, நவீன பொருளாதார சிற்பி ப.சிதம்பரம், எல்லாத்துக்கும் மேல நீங்க... இப்படி மூணு மேதைங்க சேர்ந்து போட்ட திட்டம்... இப்படி நாறிப்போகுமா..? ஏதோ தெய்வ குத்தமாதான் இருக்கணுமய்யா... எங்கேயாச்சும் மை போட்டு பாருங்க. ஏதாச்சும் ரூட்டு கிடைக்கும்!

அதேசமயம், இந்த இங்கிலிபீசு வாத்தியார் சொன்ன இன்னொரு சங்கதியைக் கேட்டபிறகு, எந்த ரூட்டும் பிடிபடாம... கண்ணு முழியெல்லாம் பிதுங்கிப் போய் நிக்கறேனுங்க. அதுக்கு எந்த கோவில்லயாச்சும் நேர்ந்துக்க வழியிருந்தா சொல்லி உதவுங்க.

''8 சதவிகித பொருளாதார வளர்ச்சி...

10 சதவிகித பொருளதார வளர்ச்சினு சொல்றதெல்லாம் டூப்பு. அது ஒரு நீர்க்குமிழி. இதோ... இப்ப வெடிச்சதுல, இந்தப் பொருளாதாரம் வடிஞ்சு போயிக்கிட்டிருக்கு. அமெரிக்கா, இங்கிலாந்து, கிரேக்கம், எகிப்து வரிசையில சீக்கிரமே நாமளும் நடையைக் கட்ட வேண்டியதுதான்''னு ஊரைக் கூட்டி உருமி அடிக்கறாருங்க அந்த வாத்தியாரு.

பஞ்சாலை முதலாளிங்கள பாத்தா... பாவமா இருக்காம். எல்லாரும் கோடி கோடியா கடன்கள்ல மாட்டிக்கிட்டு, மில்ல ஓட்டவும் முடியாம... நிறுத்தவும் முடியாமா... காருக்கு டீசல் போடகூட காசு இல்லாம கண்ணீர் வடிக்கறாங்களாம். இதேபோல ஒவ்வொரு தொழில்ல இருக்கறவங்களும் ஒவ்வொரு வகையில பாதிக்கப்பட்டு, கவுந்தடிச்சு படுத்துக் கிடக்கறாங்களாம்.

இதெல்லாத்துக்கும் நீங்களும்... ஒங்க 'மௌன குரு'வும் ஏசியில உக்காந்து யோசிச்ச திட்டம்தான் காரணமாமே! எதிர்கால ஜனாதிபதி... இன்னிய நிதி மந்திரி... என்னிக்கும் பொருளாதார புலி... பிரணாப் முகர்ஜிகூட இதைப் பத்தி கவலைப்பட்டுத்தான், 'சிக்கன நடவடிக்கை'னு சங்கு ஊத ஆரம்பிச்சுருக்காரு. மௌன குருகூட, இதைப் பத்தித்தான் இப்ப புலம்பிக்கிட்டிருக்கிறாராமே!

நீங்கள்லாம் ஏசியில ஒக்காந்து யோசிக்கறதவிட, எங்க ஊருல நாலுக்கு நாலு ரூமுக்குள்ள உக்கார்ந்துகிட்டு, 'கோழி மேய்க்கற' பார்ட்டிங்க பின்னி எடுக்கறாங்க.

'எங்களோட ஈமு கோழி திட்டத்துல ஒரு லட்சம் முதலீடு செய்யுங்க. நாட்டுக் கோழி திட்டத்துல நாப்பதாயிரம் முதலீடு பண்ணுங்க. மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், ஒரு வருஷ முடிவுல போனஸ், முதலீடு முழுசா திரும்பிவரும், கோழியை வளர்க்கற கஷ்டமும் உங்களுக்கு இல்லை'னு பட்டயக் கிளப்பறாங்க. அதைப் பார்த்துட்டு ஜனங்களும் பாத யாத்திரையா வந்து பணத்தைக் கட்டுறாங்கனா பாத்துக்கோங்க.

மெத்த படிச்ச மேதாவியான நீங்களே... 5%, 6% வளர்ச்சிக்கே அல்லாடுறீங்க. ஆனா, 'கோழி மேய்க்க'றவங்க 150% பொருளாதார வளர்ச்சியைக் காட்டுறாங்க. அப்ப யாரு சிறந்தப் பொருளாதார மேதை? பேசாம டெல்லியில இருக்கிற ஆபீஸை இழுத்து மூடிட்டு, எங்க ஊருக்கு வாங்க... பணத்துக்குப் பஞ்சம் இருக்காது... பன்னாட்டு நிதிக்காக பாரதத்தை கூறுபோட்டு விக்கிற வேலையும் இருக்காது. உள் நாட்டிலேயே நிதி உபரியா கிடக்கிறப்ப... அயல் நாட்டு நிதி நமக்கெதுக்கு?

ஆகக்கூடி... சரிஞ்சு போன இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துற சக்தி, எங்க ஊருல 'கோழி மேய்க்கற'வங்ககிட்ட மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு. நல்ல வாய்ப்பு நழுவ விட்டுறாதீங்க.

உங்க நண்பர் ம.சி-கிட்ட சொல்லி... ஒபாமாவையும் இந்தத் திட்டத்துல சேர்த்துவிட்டீங்கனா, அமெரிக்க பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்திடலாம். கூடவே... எகிப்து, கிரேக்கம்னு பொருளாதாரப் புயலால சாய்ஞ்சுகிடக்கற மத்த மத்த நாடுகளையும் கூட்டு சேர்த்துக்க சொல்லுங்க.

ஆனா, 'உன்ன நம்பித்தானே காசு போட்டேன், கம்பி நீட்டிட்டாங்களே’னு நாள பின்ன என்னைய குறை சொல்லக்கூடாது... ஆமாம், சொல்லிப்புட்டேன்!

இப்படிக்கு,
கோவணாண்டி