Published:Updated:

இயற்கையிலும்கலக்கும் நவீனரகம்...

ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ஜெ. வேங்கடராஜ்

##~##

'பாரம்பரிய நெல் ரகங்களை மட்டும்தான் இயற்கை முறையில் சாகுபடி செய்ய முடியும்... நவீன நெல் ரகங்களுக்கு ரசாயனம் தவிர்க்க முடியாதது’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதனால், பெரும்பாலான இயற்கை விவசாயிகளேகூட, நவீன ரக விதைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், நவீன ரகங்களையும் இயற்கை முறையில் சிறப்பாக சாகுபடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்... நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி மோகன்ராஜ் (கடந்த 25.02.2011 தேதியிட்ட இதழில், 'கேட்டால் கிடைக்கும் நாட்டு விதைகள்’ என்ற கட்டுரை மூலமாக ஏற்கெனவே நம் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் இந்த மோகன்ராஜ்).

பள்ளமான பகுதிக்கேற்ற ஆடுதுறை-50!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எனக்கு மொத்தம் 7 ஏக்கர் இருக்கு. இதுல முழுக்க நெல் சாகுபடிதான். இது, பள்ளக்காலான, களிமண் பகுதி. ரொம்ப வருஷமா இயற்கை முறையிலதான் நெல் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டும் இல்லாம... கோ-48, சி.ஆர்-1009, ஆடுதுறை-49, பாப்பட்லானு நவீன நெல் ரகங்களையும்கூட முழுக்க இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். அதுலயும் நான் எதிர்பாக்கற அளவுக்கு நல்ல மகசூல் கிடைக்குது. அந்த நம்பிக்கையிலதான் சோதனை முயற்சியா, 'ஆடுதுறை-50’ங்கிற புது ரகத்தையும் சாகுபடி செஞ்சேன். இந்த ரகத்தை, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம்னுதான் சொல்லணும். குறிப்பா... தண்ணி தேங்குற பள்ளமான பகுதிகளுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். அதுமட்டுமில்ல, ஆடிப்பட்டத்துலயும் இந்த ரகத்தை விதைக்கலாம். சரியா பொங்கலுக்கு புது அரிசி கிடைக்கும்.

இயற்கையிலும்கலக்கும் நவீனரகம்...

இதோட வயசு 150 நாள். காவிரி டெல்டா விவசாயிக, கிட்டத்தட்ட 30 வருஷமா, ஒரு போக சம்பாவுக்கு நீண்ட நாள் வயசுடைய சி.ஆர்-1009 ரக நெல்ல மட்டும்தான் பயிர் செஞ்சாக வேண்டிய கட்டாயத்துல இருந்தாங்க. அது மோட்டா ரகமா இருந்ததால, குறைவான விலைதான் கிடைச்சுது. அதுக்கு மாற்றா, ஆடுதுறை ஆராய்ச்சி நிலையத்துல,

சி.ஆர்-1009... பாப்பட்லா-5204 இந்த ரெண்டு ரக நெல்லையும் ஒட்டு சேர்த்து, 'ஆடுதுறை-50’ங்கிற புது ரகத்தை உருவாக்கிட்டாங்க.

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!

இயற்கையிலும்கலக்கும் நவீனரகம்...

நாகை மாவட்ட கடற்கரையோர கடைமடை பகுதிகள்ல இருக்கற பள்ளமான வயல்கள்ல இதோட மகசூலை ஆய்வு செய்றதுக்காக... ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், என்கிட்ட 500 கிராம் விதையைக் கொடுத்து 2009-2010-ம் வருஷம் சாகுபடி செய்ய சொன்னாங்க. 25 சென்ட்ல ஒற்றை நாற்று முறையில நடவு செஞ்சு, இயற்கை இடுபொருள்களை மட்டுமே கொடுத்து, சாகுபடி செஞ்சதுல 618 கிலோ மகசூல் கிடைச்சுது. அடுத்த வருஷமும், ஒரு ஏக்கர்ல சாதாரண முறையிலயும்... ஒரு ஏக்கர்ல ஒற்றை நாற்று முறையிலயும் இதே ரகத்தை சாகுபடி செஞ்சேன்.

சாதாரண முறையில 1,817 கிலோவும், ஒற்றை நாற்று முறையில 2 ஆயிரத்து 11 கிலோவும் மகசூலா கிடைச்சுது. 2011-2012 வருஷத்துக்கான சம்பா பருவத்துலயும் சாகுபடி செஞ்சேன். தானே புயல்ல, எங்க பகுதியில இருந்த மத்த நெல் ரகங்கள் எல்லாம் கீழ சாய்ஞ்சுடுச்சு. ஆனா, இந்த ஆடுதுறை-50 ரகம் மட்டும் சாயவே இல்ல. கொஞ்சங்கூட பூச்சி, நோய் தாக்குதலும் இல்ல. கதிர் நல்லா வாளிப்பா, அதிக மணிகளோட இருந்துச்சு'' என்று சொன்ன மோகன்ராஜ், தனது சாகுபடி அனுபவத்தைப் பாடமாகவே தொகுத்து வழங்கினார்.

ஒற்றை நாற்று முறைக்கு 2 கிலோ விதைநெல்!

ஒரு ஏக்கர் நிலத்தில், ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய, 2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். கோடை உழவு செய்து புழுதியாக்கப்பட்ட நிலத்தில் சம்பா பருவத்தின் போது... 25 கிலோ தொழுவுரம் இட்டு சேற்றுழவு செய்து, நன்கு பழஞ்சேறான பிறகு, நாற்றங்காலைச் சமப்படுத்தி, 2 கிலோ விதையைத் தெளிக்க வேண்டும்.

6-ம் நாள் தண்ணீர் நிறுத்தி, 2 கிலோ கலவைப் பிண்ணாக்கை (கடலை, வேம்பு, ஆமணக்கு, புங்கன் ஆகியவற்றின் பிண்ணாக்குகள் சமவிகிதத்தில் கலக்கப்பட்டது) தூளாக்கி, பகல் 12 மணிக்குத் தூவ வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பயிர்களில் ஈரம் இருப்பதால், அப்போது பிண்ணாக்கைத் தூவினால், அவை பயிரோடு ஒட்டிக் கொள்ளும். ஈ, கொசு, எறும்பு போன்றவைகள் மொய்ப்பதோடு, பயிர் மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கிவிடும். அதனால்தான் பகல் வேளையில் பிண்ணாக்கைத் தூவவேண்டும்.  

இயற்கையிலும்கலக்கும் நவீனரகம்...

14-ம் நாளில் நடவு!

காலை நேரத்தில், 8 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதில் 3 கிலோ வேப்பிலையைப் போட்டு ஆறு மணி நேரம் ஊற வைத்து... வடிகட்டி மாலையில் இக்கரைசலை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். வடிகட்டிய கசடையும் ஆங்காங்கே மண்ணில் இட வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட்டால் போதுமானது. 14-ம் நாள் நாற்று தயார்.

அதற்கு முன்னதாகவே நடவு நிலத்தைத் தயாரிக்க வேண்டும். அதாவது... புழுதி உழவு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில், 2 டன் தொழுவுரம் இட்டு, 12 கிலோ தக்கைப் பூண்டு விதைக்க வேண்டும். 49-ம் நாள் சேற்றுழவு செய்து, மடக்கி உழ வேண்டும். பிறகு, நிலத்தைச் சமப்படுத்தி, பத்து அங்குல இடைவெளியில் ஒவ்வொரு நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். நடவின்போது, 40 கிலோ கலவைப் பிண்ணாக்கைத் தூவ வேண்டும். நடவில் இருந்து 20, 36, 58-ம் நாட்களில் 75 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து, 24 மணி நேரம் ஊறிய பிறகு, தெளிந்தக் கரைசலை பயிரின் மீது தெளிக்க வேண்டும்.

95-ம் நாள், 30 கிலோ கலவைப் பிண்ணாக்கை, சுமார் 20 கிலோ மணலில் கலந்து வயலில் வீச வேண்டும். தொடர்ந்து, காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவில் இருந்து 9, 18, 27-ம் நாட்களில் ரோட்டா வீடர் மூலம் களைகளைச் சேற்றுக்குள் அழுத்தவேண்டும். நடவில் இருந்து, 136-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும்.  

சாதாரண நடவுக்கு 8 கிலோ விதைநெல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் சாதாரண முறையிலான நடவுக்கு, 10 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைத்து, 8 கிலோ விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். 26 நாள் வயதான நாற்றுகளைப் பறித்து, தோராயமாக 8 அங்குல இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 அல்லது 3 நாற்றுகள் வீதம் நடவு செய்யவேண்டும். 18, 28, 40-ம் நாட்களில் களைகளைப் பறித்து, மண்ணில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். நடவு செய்த 124-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்கு வரும். இந்த ரக பயிர், பார்ப்பதற்கு

சி.ஆர்-1009 போலவும், நெல்மணிகள் பாப்பட்லா போல சன்னமாகவும் இருக்கும். புழுங்கல் மற்றும் பச்சை அரிசி இரண்டுக்குமே ஏற்றது இந்த ரகம்.’

புயலிலும் குறையாத மகசூல்!

நிறைவாக... மகசூல், விற்பனை விவரங்களைப் பற்றி பேசிய மோகன்ராஜ், ''என்னோட பயிர், அறுவடை நேரத்துல ஒவ்வொரு கதிரும் கிட்டத்தட்ட 24 சென்டி மீட்டர் நீளத்துல இருந்துச்சு. ஒவ்வொரு கதிர்லயும் 360 முதல் 420 நெல்மணிகள் வரைக்கும் இருந்துச்சு. போன முறை கிடைச்ச

2 ஆயிரத்து 11 கிலோவையும் அரிசியா மாத்திதான் வித்தேன். இந்த ரகத்துல 66% அரிசி கிடைக்கும். 2 ஆயிரத்து 11 கிலோ நெல்லை அரைச்சதுல 1,320 கிலோ அரிசி கிடைச்சுது. கிலோ 42 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 55 ஆயிரத்து 440 ரூபாய் கிடைச்சுது, இதுல செலவு 8 ஆயிரத்து 100 ரூபாய் போக 47 ஆயிரத்து 340 ரூபாய் லாபமா கிடைச்சுது.

இந்தத் தடவை அறுவடை செய்த நெல்லை, விதைநெல்லுக்காக நிறைய விவசாயிங்க கேட்டுக்கிட்டிருக்காங்க. கிலோ 26 ரூபாய்னு வித்துடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அரிசியாவோ, விதைநெல்லாவோ விற்பனை பண்ணாம, கொள்முதல் மையத்துல வித்தாலும்கூட கிலோவுக்கு 11 ரூபாய் விலைனு 1,920 கிலோவுக்கு 21 ஆயிரத்து 120 ரூபாய் கிடைக்கும்.

இதுல எல்லா செலவும் சேர்த்து 8 ஆயிரத்து 100 ரூபாய் போச்சுனா, 13 ஆயிரத்து 20 ரூபாய் லாபமா கிடைக்கும். இது நல்ல சன்னரகமா இருக்கறதுனால தனியார் வியாபாரிகள்ட்ட இன்னும் அதிக விலைக்கு வித்து கூடுதல் லாபம் பார்க்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் சொன்னார்!

 தொடர்புக்கு,
மோகன்ராஜ்:  செல்போன்: 94430-14897.