Published:Updated:

மண்புழு மன்னாரு !

ஓவியம்: ஹரன்

 மாத்தி யோசி

##~##

'பட்டம் தவறினால் நட்டம்’னு பெரியவங்க சொல்லி வெச்சுருக்கறது, நூத்துக்கு நூறு உண்மை. இதைச் சொன்னதுமே... 'இதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்பட்டு வராது. எப்ப வேணும்னாலும், எதை வேணும்னாலும் பயிர் பண்ண முடியும்னு விஞ்ஞான உதவியோட சாதிச்சுட்டிருக்காங்களே இப்ப'னு சிலர் சொல்லலாம். ஆனா, அப்படி பட்டத்தைத் தவறவிட்டதாலதான் ஏகப்பட்ட பிரச்னைகளை நாம சந்திச்சுட்டிருக்கோம். பூச்சி, நோய், விளைச்சல், ருசினு பல விஷயத்துலயும் நாம பாதிக்கப்பட்டிருக்கோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரியான பட்டத்தைப் பார்த்து நடவு போட்டா... அதுக்கான பலனே தனிதான். வேணும்னா... முன்ன, பின்ன பத்து, பதினைஞ்சு நாள் வித்தியாசப்படலாம். மத்தப்படி, 'பட்டம் தவறினால், நட்டம்'னு பெரியவங்க சொல்லி வெச்சுருக்கற வார்த்தை, எப்பவுமே வீரியமானதுதான்!

நம்ம மண்ணுல ஆயிரக்கணக்கான வருஷமா விவசாயம் நடக்குது. ஒவ்வொரு பருவத்துலயும், எந்தெந்த வகையான பயிர் நல்லா செழிச்சு வருது... எதைப் பயிரிட்டா வகையா லாபம் கிடைக்கும்... எதைப் பயிரிட்டா, நட்டத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்... இப்படி எல்லாத்தையுமே அனுபவப்பூர்வமா கண்டுணர்ந்து சொல்லி வெச்சுருக்காங்க. அந்த அனுபவத்துக்கு முன்ன, நாம இப்ப பண்ணிக்கிட்டிருக்கற நவீன ஆராய்ச்சி அத்தனையுமே மண்ணைத்தான் கவ்வணும். அதனால, பட்டம் பார்த்து பயிர் செய்யறதுல கவனத்தைச் செலுத்துவோம்!

கொடிவகை காய்கறியான பாகல், புடலை, சுரை, சாம்பல் பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கன், அவரை... போன்றவற்றின் சாகுபடிக்கு ஆடியில விதைக்கலாம். பாகல், புடலை, பீர்க்கன் செடிங்களுக்கு மறந்துடாம பந்தல் போடணும். சிலர் வீட்டுக்கூரையிலயும் ஏத்திவடுவாங்க. இப்படி செஞ்சாதான்... கொடிங்க வளைஞ்சோடி, காய்ச்சு குலுங்கும்.

மண்புழு மன்னாரு !

ஆடிப் பட்டத்துல செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான வேலை... மரம் நடறது. ஆமாங்க.... ஆடி மாசத்துல மரக்கன்னுங்கள நடவு செஞ்சா, அதைத் தொடர்ந்து ஆரம்பிக்கற பருவமழை ஈரத்துலேயே வேர் பிடிச்சு நல்லா வளர்ந்து வந்துடும். மர போத்துகள மட்டும், ஐப்பசி... கார்த்திகையில நடறதுதான் நல்லது. அப்பதான் அந்த அடைமழையில நல்லா வளர ஆரம்பிக்கும்.

ஆடி மாசத்தை, 'சக்தி மாதம்'னு பண்டைய ஜோதிட நூல்ல குறிப்பிட்டிருக்காங்க.. உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களைவிட, தக்ஷணாயண காலத்துல (ஆடி) வெளிப்படுற கதிர்... விவசாயத்துக்கு உகந்ததா இருக்குமாம். அதேபோல, அந்தப் பருவத்துல காத்தோட வேகமும் அதிகமாவே இருக்கும். அதைத்தான்... 'ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்'னு சொல்லி வெச்சுருக்காங்க. இந்தக் காத்தும்கூட, பயிர்களோட  வளர்ச்சிக்கு... உறுதுணையா இருக்குனு பழங்கால சுவடிகள்ல எழுதி வெச்சுருக்காங்க.

ஒவ்வொரு தமிழ் மாசத்தையும்... ஒவ்வொரு பட்டமாத்தான் பிரிச்சு வெச்சுருக்காங்க. அதாவது, நெல்லுக்கு... ஆனி, ஆடி, மாசி, பங்குனி; கரும்புக்கு... மார்கழி, பங்குனி; வாழைக்கு... ஆடி, பங்குனி. மஞ்சளுக்கு... வைகாசி, பங்குனி; கம்புக்கு... சித்திரை; கேழ்வரகுக்கு... ஆனி, ஆடி, மார்கழி; மிளகாய், கொத்தவரங்காய்க்கு... வைகாசி, ஆனி, ஆவணி, தை, மாசினு அழகா பிரிச்சு வெச்சுருக்காங்க. தண்ணி வசதி உள்ள நிலத்துல, இறவை நிலக்கடலை செய்றதுக்கு மார்கழிப் பட்டம் மகத்தானது.

'ஐப்பசி நடவு, அரை வெள¢ளாமை; கார்த்திகை நடவு, கால் வெள¢ளாமை'னு பழமொழி இருக்கு. அதாவது, அடைமழை பெய்யற ஐப்பசி, கார்த்திகை மாசத்துல எந்தப் பயிர் நடவு செய்தாலும், செடிங்க சரியா முளைச்சு வளராது. அதனாலதான் அப்படி சொல்லி வெச்சுருக்காங்க.

மாசிப் பட்டத்துல எள் விதைச்சா... எண்ணெய் சத்து அதிகமா உள்ள எள்ளாக விளையும். பருவம் தப்பி விதைச்சா... எண்ணெய் சத்து குறையறதோட... விதம்விதமான நோய்ங்களும் எள்ளைத் தாக்கும், விளைச்சலும் சரியா இருக்காது. சில சமயம் காய்க்குள்ள எள்ளு விதைங்களே இல்லாமலேகூட போயிடும்.

'கத்திரிக்கு காலமில்லை'னு சொல்றாங்க. அதனால கத்திரிச் செடியை எப்போ வேணாலும் சாகுபடி செய்றாங்க. ஆனா, மாசிப் பட்டத்துல நடவு செய்ற கத்திரியோட விளைச்சலும், சுவையும் அலாதியா இருக்கும்கறது கவனிக்கத்தக்க விஷயம்!