Published:Updated:

சிறுநீர்ப் பாசனத்தில் செழித்த காய்கறிகள் !

ஓவியம்: ஹரன்

வரலாறு

##~##

அண்ணன் இளங்கோவின் முயற்சியால்... விளையாட்டுக் குழுக்களும் விளையாட்டு மன்றங்களும் உருவாக்கப் பட்டுவிட்டன. கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே தலைசிறந்த ஆட்டக்காரராகவும், இலக்கியப் பேச்சாளராகவும் இளங்கோ விளங்கினார். இளங்காட்டில் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு ஈர்ப்புச் சக்தியாக விளங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு முறை ஷெல்லியைப் பற்றியும் பாரதிதாசனைப் பற்றியும் பேச்சு எழுதிக் கொடுத்து எனக்கு மேடை ஏறும் வாய்ப்பை உருவாக்கினார். மேடைக் கூச்சம் தெளிந்த நிலையில்... பள்ளி ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தேன். பேச்சுத் தலைப்பான 'மானுட உரிமை’ கட்டுரையை அண்ணன் இளங்கோவன்தான் தயாரித்துக் கொடுத்தார். அதோடு நில்லாமல்... என்னை மனப்பாடம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அவர் நாற்காலியில் அமர்ந்து பேசுவதற்கு ஆணையிட்டார். எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் எந்த இடத்தில் உணர்ச்சியைக் கூட்ட வேண்டும் என்றெல்லாம் கற்பித்தார். திரும்பத் திரும்ப வீட்டிலேயே ஒத்திகைப் பார்த்துக் கொண்டோம்.

பள்ளியில் அந்த நாளும் வந்தது. மேடைக்கு நான் அழைக்கப்பட்டேன். ஆயிரம் மாணவர்கள் எதிரே அமர்ந்திருக்க... ஒரு வகையான தயக்கம் தலை தூக்கியது. மூச்சு இழுத்துவிட்டேன். அண்ணன் சொல்லியிருந்தது போல காலை அகற்றி வைத்து நின்றேன். இடது கையால் ஒலி வாங்கியைக் கெட்டியாகப் பிடித்தேன்.

''விழாத் தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களே, கற்றறிந்த ஆசிரியப் பெருமக்களே என் உடன் பயிலும் இருபால் மாணவர்களே... உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தொடங்கி, உள்வாங்கிய பேச்சு முழுவதையும் ஒத்திகைப் பார்த்ததை விடவும் சிறப்பாகப் பேசி முடித்தேன். அண்ணன் சொல்லியதைப் போல... இடது புறம் இருந்து வலது புறமாகவும், வலது புறம் இருந்து இடது புறமாகவும் அசைந்து கொண்டிருந்தது தலை. வசனத்துக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தது வலது கை.

விழிப்போரே நிலை காண்பார்
விதைப் போரே அறுத்திடுவார்.
களை காண்தோறும்
அழிப்போரே அறஞ் செய்வார்  ஆதல்
ஆர்வம் செழிப்போரே!
இளைஞர்களே!
தென்னாட்டு நன் மக்காள்!
விழிமின்! எழுமின்!

என்று பேசி முடித்த பின்பு... ஒலிபெருக்கியைப் பிடித்திருந்த இடது கை விடுதலை பெற்றது. திரும்பினேன் தமிழாசிரியர் சீதாராமனின் கை, என் தோளைப் பிடித்து அழுத்தியது. ''நம்மாழ்வார் சிறப்பாக பேசினார்'' என்று வாய் நிறைய வாழ்த்தினார். அரைக்கால் சட்டை அணிந்திருந்த என் இரண்டு கால்களும் வியர்வையால் நனைந்திருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்!

நாங்கள் அனைவரும் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது முயல் கொம்பாகத்தான் இருந்தது. கிராமப்புற வாழ்க்கை, தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடை, கூடாநட்பு, கவனச் சிதறல்... என தோல்விக்கான காரணங்களை ஏராளமாகச் சொல்லலாம். சின்ன அண்ணன் திருவேங்கடம், இரண்டு முறை எழுதியும் தோற்றுப் போனார்.

சிறுநீர்ப் பாசனத்தில் செழித்த காய்கறிகள் !

அவர் தேர்வில் தவறியது, அப்பாவுக்குக் கவலை அளிக்கவில்லை. அக்காலத்தில், வலிவலம் பகுதியில் (இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தின் பகுதி) காந்திகிராமம் இருந்தது. அங்கு அவரை அனுப்பி ஆறு மாதங்கள் பயிற்சி எடுக்க வைத்தார், அப்பா. அவர் பயிற்சி முடிந்து திரும்பி வரும்போது, அவரது கைவசம் நிறைய புதிய உத்திகள் இருந்தன.

வந்த கையோடு, 'மாடுகளின் சாணத்தை மட்டுமே சேமிக்கிறோம். மூத்திரத்தைக் கீழே ஓட விடுகிறோம். சாணத்தை விடவும் மூத்திரத்தில்தான் சத்து அதிகம் உள்ளது’ என்று சொன்னார், அண்ணன் திருவேங்கடம். அப்பாவுக்கும் இது சரி என்று படவும், கொல்லைப்புறம் கிடந்த ஒழுங்கற்ற கருங்கற்களைப் பெயர்த்து வந்து, கொட்டில் தரையில் சரிவாக இருக்குமாறு பதித்தோம். வடகிழக்கு மூலைதான் தாழ்வானப் பகுதி. அங்கு ஒரு இரும்பு வாளியை வைத்து, மாடுகளின் மூத்திரத்தை சேமிக்க ஆரம்பித்தோம். தினமும் காலையில் முதல் வேலையாக, அந்த மூத்திரத்தைக் குப்பைக் குழியில் சேர்த்து விடுவோம்.

'மாட்டு மூத்திரத்தைப் போல மனித சிறுநீர் மற்றும் மலத்தையும் எருவாகப் பயன்படுத்தலாம்’ என்றும் அண்ணன் சொன்னதால், கொல்லைப்புறத்தில் ஒரு பானையை வைத்து அதில் எங்களது சிறுநீரையும் சேமித்தோம். காலை நேரத்தில் அப்பானைக்குள் ஒரு வாளி தண்ணீரை சேர்த்து... தக்காளி, கத்திரிச்செடிகளுக்கு ஊற்றினோம். அதன்பிறகு அந்தச் செடிகளில் அதிகளவில் காய்கள் காய்த்தன. காய்கள் பெரிய அளவிலும் இருந்தன.

அண்ணன், நான் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் பாலத்தின் தென்கரையில்... விழாக்காலங்களில் அடுப்பு வெட்டுவது போல, ஒரு முழ அகலம், பத்து முழ நீளம், ஒன்றரை முழ ஆழத்தில் மூன்று குழிகள் எடுத்தோம். அதில் அனைவரையும் மலம் கழிக்கச் சொல்லி, கழித்த பிறகு கொஞ்சம் மண்ணைத் தூவச் சொன்னோம். அதனால் அந்தப்பகுதியில் கெட்ட வாடை குறைந்தது. இந்த வேலை ஊரில் அனைவரின் ஆதரவையும் பாராட்டையும் எங்களுக்குப் பெற்றுக் கொடுத்தது.

அடுத்து, அண்ணன் கற்றுக் கொடுத்தது, நெல் நடவு பற்றிய விஷயங்களைத்தான்! 'வழக்கத்தைப் போல அதிக விதைகள் தேவை இல்லை; நாற்றங்காலை மட்டும் அதிக பரப்பில் அமைக்க வேண்டும். விதைக்க வடிகாலுடன் கூடிய மேட்டுப் பாத்திகள் அவசியம்’ என்று அவர் சொன்னார். அந்த சமயத்தில், குறுவை அறுவடை முடிந்து 'தாளடி’ பருவம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதிலேயே இந்த விஷயங்களைச் செயல்படுத்தி பார்த்து விடுவது என்று அவர் முடிவு செய்தார்.

அவரது யோசனைப்படி அமைத்த நாற்றங்காலில் குறைவான அளவு விதைகளை விதைத்தபோது, சேற்றில் விதைகள் நன்கு கலந்து முளைத்து வந்தன. இருபத்தி ஐந்தாம் நாள் நாற்றுகளை பிடுங்கி  ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நட்டோம். ஒன்று அல்லது இரண்டு நாற்றுகளை மட்டும்தான் பிடுங்கி நட வேண்டும் என்று அண்ணன் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். நாற்று நடும் பெண்கள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும், பிறகு புரிந்து கொண்டனர்.

அந்த வயலில் செழிப்பாக ஆளுயரத்துக்கு வளர்ந்திருந்த கட்டைச் சம்பா பயிர், போவோர் வருவோர் அனைவரையும் கவர்ந்தது. அதில், சடை சடையாகக் கதிர்கள் தள்ளின. அறுத்து கதிர் அடிக்கும்போது, களத்தில் 'கண்டு முதல்’ பார்க்க உழவர்கள் கூடியிருந்தார்கள். அனைத்தையும் அடித்துத் தூற்றி அரைத்து முடித்தபோது, அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு 'மா’வுக்கு இருபது திட்டம் என்று கணக்கு சொன்னார்கள்.

மூன்று 'மா’ கொண்டது ஒரு ஏக்கர். ஒரு திட்டம் என்பது ஒரு கலம். அதாவது, அரை மூட்டை (30 கிலோ). மாவுக்கு 20 திட்டம் நெல் என்றால்... மூன்று மா (ஏக்கர்) நிலத்துக்கு 60 திட்டம். அதாவது, (60ஜ்30 கிலோ) 1,800 கிலோ நெல். 60 கிலோ மூட்டையில் முப்பது மூட்டை. 1955-ம் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் 1,800 கிலோ நெல் விளைவித்தது, பெரிய சாதனையே!

அண்ணன் திருவேங்கடம் வேளாண்மையில் காட்டிய தீவிரம், அப்பாவின் சுமையைக் குறைத்தது. மூத்த அண்ணன்கள் இருவரும் வீட்டில் கொண்டு வந்து குவித்த புத்தகங்களைப் படித்து முடித்தேன். அரசியல் ஆர்வம் துளிர்த்தது. அதிகளவில் பொதுக்கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அதனால் பள்ளிப் பாடங்களில் ஆர்வம் குறைய ஆரம்பித்தது. குறிப்பாக, ஆங்கிலப் பாடத்தில். பள்ளி இறுதித் தேர்வில் நானும் தோற்றுப் போனேன். அடுத்த ஆண்டும் படை எடுப்பது... என முடிவு செய்தேன்.