Published:Updated:

முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்...

வியக்க வைக்கும் வாவு பலி... என். சுவாமிநாதன்படங்கள்: ரா. ராம்குமார்

திருவிழா 

##~##

'வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், நாட்டு நலம் காப்போம்’, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்றெல்லாம் மரம் வளர்ப்பின் அவசியத்தை வீதியில் நின்று கூவினாலும், செவி மடுப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமே! இத்தகையச் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், அமாவாசை தினத்தன்று பல ஆயிரம் மரங்களை நடவு செய்து வருவதை ஒரு வழக்கமாகவே கடைபிடித்து வருகிறார்கள்... கன்னியாகுமரி மாவட்ட மக்கள். ஒவ்வொரு ஆண்டும் குழித்துறை பகுதியில் நடக்கும் 'வாவு பலி' பொருள்காட்சியின் போதுதான் இந்த ஆக்கப்பூர்வமான பணி அரங்கேறி வருகிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதென்ன வாவு பலி? 'தர்ப்பணம்' என்பதைத்தான் மலையாளத்தில் 'வாவு பலி’ என்கிறார்கள். இறந்து போன முன்னோர்களுக்காக ஆடி அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வது வழக்கம். அன்றைய தினத்தில், ஏதாவது ஒரு நீர்நிலையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பார்கள். அதையே, கொஞ்சம் வித்தியாசமாக செய்கிறார்கள், இந்த மாவட்ட மக்கள். குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு, இறந்தவர்களின் நினைவாக ஒரு மரக்கன்றை வாங்கி, தங்கள் வீடுகளில் நடவு செய்கின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கத்தில் இருந்துவரும் இந்த நிகழ்வை, 'வாவு பலி பொருட்காட்சி’ என்ற தலைப்பில் வேளாண்மை சார்ந்த ஒரு விழாவாகவே நடத்தி வருகிறது குழித்துறை நகராட்சி. இதன் காரணமாக... ஆடி அமாவாசை தினத்தன்று இப்பகுதியில் நூற்றுக்கணக்கான நர்சரிகளும் அணி வகுக்கின்றன... மக்களின் மரக்கன்று தேவையைப் பூர்த்தி செய்வதற்காக!

முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்...

இதைப் பற்றிப் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளில் ஒருவரான ஹென்றி, ''ஆடிப் பட்டம் தேடி விதைனு ஒரு சொலவடை சொல்வாங்க. ஆடியில் விதைக்கும் விதைப்பு... நல்ல மகசூலைக் கொடுக்கும்கிற  நம்பிக்கைதான் காரணம். இது பல நூறு ஆண்டுகளா எங்க மக்கள் மனசுல பதிஞ்சுருக்கு. அதனாலதான், ஆடியில் நடக்குற வாவு பலி பொருள்காட்சியை இந்தப் பகுதி மக்கள் ரொம்ப விசேஷமா கொண்டாடுறாங்க. தமிழ்நாடு, கேரளா எல்லையோரப் பகுதியில் இருக்குற குழித்துறையில இது நடக்கிறதால, ரெண்டு மாநிலத்துல இருந்துமே விவசாயிகளும், பொதுமக்களும் இதுல கலந்துக்குவாங்க.

இதோட முக்கிய அம்சமே... விவசாய விளைபொருள் கண்காட்சிதான். ஒவ்வொருத்தரும் அவங்கவங்க தோட்டத்துல விளைஞ்ச விளைபொருள்களைக் கொண்டு வந்து, அன்னிக்குக் காட்சிக்கு வைப்பாங்க. அதுல யாரோட விளைபொருள் நல்ல ஆரோக்கியமா இருக்குதோ... அவங்களுக்கு நகராட்சி சார்பா பரிசு கொடுப்பாங்க. இதனால ஒவ்வொருத்தரும் போட்டி போட்டு பயிர்களை உற்பத்தி செய்வாங்க.

முன்னோருக்குத் தர்ப்பணம்... மரத்துக்கு வந்தனம்...

அதோட, அன்னிக்கு தர்ப்பணம் செய்ற மாதிரி மரக்கன்னை நட்டு வெச்சா, இறந்து போனவங்களே மரமா முளைக்கறதாவும் மக்கள்கிட்ட ஒரு நம்பிக்கை இருக்கு'' என்று சொன்னார்.

குழித்துறை நகராட்சித் தலைவர் டெல்பின், ''குழித்துறைப் பகுதி அமைந்துள்ள விளவங்கோடு தாலூகாவை ஒரு தடவை சுத்தி வந்தீங்கன்னா... பாக்குற இடமெல்லாம் மரங்கள்தான் நிக்கும். அதுக்குக் காரணம் இந்த விழாதான்.

பல நூறு வருஷங்களா பொதுமக்களேதான் இதை நடத்தினாங்க. 1925-ம் வருஷத்துல இருந்து குழித்துறை நகராட்சி இந்த விழாவை நடத்திட்டு இருக்கு. இந்த ஆண்டு, 87-ம் வாவு பலி பொருள்காட்சி, ஜூலை 4-ம் தேதி தொடங்கி... 23-ம் தேதி வரை நடக்கப் போகுது'' என்றவர்,

''இந்தப் பகுதி மக்கள் மட்டுமே கலந்துக்கற இந்த மாதிரி விழா, தமிழ்நாடு முழுக்க நடந்தா... எல்லா பகுதியும் சீக்கிரமே பசுமை படர்ந்த பூமியா மாறிடும்'' என்கிற தன்னுடைய ஆவலையும் வெளியிட்டார்.

ஆம்... தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் நடக்கும் இந்த விழா, தமிழகம் முழுவதும் பரவினால், சூழல் கேடுகள் சுட்டுப் பொசுக்கப்படும் என்பது நிச்சயமே!