Published:Updated:

குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..!

ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

 பிரச்னை

##~##

'ஊருக்கு இளைச்சவன்... பிள்ளையார் கோயில் ஆண்டி' என்பார்கள். இது விவசாயிகளுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். எதற்காக நிலம் வேண்டும் என்றாலும்... எந்தக் கேள்வியுமே இல்லாமல், விவசாயிகளின் நிலத்தை வளைப்பது அரசாங்கத்துக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான் இருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாலைகள், தொழிற்சாலைகள், அணு மின் நிலையங்கள் என பல்வேறு நலத் திட்டங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு, விவசாய நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுவதும், அதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதும் நாட்டின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது!

அந்த வரிசையில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய

7 மாவட்டங்களில் உள்ள 136 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வயிற்றில் புளி கரைத்து, கிலி எற்படுத்தியுள்ளது, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் செயல்படும் 'கெயில் (இந்தியா) லிமிடெட்’ எனும் பொதுத்துறை நிறுவனம்.

குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..!

கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு கோயம்புத்தூர் வழியாக எரிவாயுவை குழாய் மூலமாகக் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த விவசாய நிலங்களுக்குள் எரிவாயுக் குழாய் பாதைக்கான இடத்தை அளந்து மஞ்சள் வர்ண கற்களை நட்டுச் சென்றுள்ளார்கள் கெயில் நிறுவன அதிகாரிகள்.

இதைக் கண்டித்தும், எரிவாயுக் குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

எரிவாயுக் குழாய் பதிப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சுற்றுசூழல் கேடுகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், போராட்டத்துக்காக மக்களை ஒருங்கிணைக்கவும் 'விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் 'வழுக்குப்பாறை’ பாலு, ''கேரளா மாநிலத்துக்குள் சுமார் 500 கிலோ மீட்டர், தமிழ்நாட்டில் சுமார் 300 கிலோ மீட்டர், கர்நாடகா மாநிலத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் என சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கப் போகிறார்கள்.

இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு... 3 ஆயிரத்து 263 கோடி ரூபாய். 'கொச்சி-கோட்நாட்-பெங்களூரு-மங்களூர் புராஜக்ட் லைன்’ (கே.கே.பி.எம்.பி.எல்) என்று பெயரிடப்பட்டுள்ள, இத்திட்டத்தினால், பாலத்துறை, அரிசிப்பாளையம், மதுக்கரை, சீரப்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், பாப்பம்பட்டி, செலக்கரிசல், பல்லடம்... உள்ளிட்ட 15 கிராமங்கள் நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றன.

இதற்கான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய மாநில அரசே திட்டக் கமிட்டியை அமைத்து, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எரிவாயுக் குழாயின் விட்டம் 2 அடிதான். ஆனால், அதைப் பதிக்க 20 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை எடுக்கப் போகிறார்கள். எதற்காக இத்தனை மீட்டர் நிலத்தை வளைக்க வேண்டும்? 5 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி குழாயைப் பதித்து கான்கிரீட் தளம் அமைத்து விடுவார்களாம். நிலத்துக்குள் இப்படி அமைப்பது... எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும்? இதையெல்லாம் தெளிவுபடுத்த ஆளே இல்லை.

நெடுஞ்சாலை ஓரங்களில் சாலைகளுக்காகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் இடத்திலேயே இக்குழாய்களைப் பதித்துக் கொண்டால், நாங்கள் பாதுகாப்பாக பயமின்றி விவசாயம் செய்ய முடியும். இதுதான் எங்கள் கோரிக்கை'' என்று சொன்னார்.

சொந்த நிலத்துக்குள் போக முடியாது!

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்புச் சங்க அமைப்பாளர் நடேசன் பேசும்போது, ''நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்ட விவசாயிகள்... 'கிடைத்தது லாபம்’ என்று சும்மா இருக்க முடியாது. குழாய் செல்லும் பாதையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டுமாம்.

குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..!

ஏதாவது இயற்கைச் சீற்றம் அல்லது, சமூக விரோதிகளால் குழாய்க்கு பாதிப்பு ஏற்பட்டால்கூட, நில உரிமையாளருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். அதனால், நில உரிமையாளர் சம்பளம் வாங்காத 'வாட்ச்மேனாக’ கெயில் நிறுவனத்துக்கு வேலை பார்க்க வேண்டும் என்கிற நிபந்தனையும் ஒப்பந்த ஷரத்தில் உள்ளது.

குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..!

மேலும், குழாய்கள் செல்லும் கான்கிரீட் பாதைக்கு மறுபுறம் வண்டிப்பாதை அமைக்கக் கூடாது. கான்கிரீட் பாதைக்குக் குறுக்காக பாசனக் குழாய்களையும் அமைக்கக் கூடாது. என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும். இதனால், பாதை, பாசன வசதி பாதிக்கப்பட்டு நிலமே தரிசாகி விடும். அதனால்தான் இத்திட்டத்துக்கு மாற்று வழி காணச் சொல்கிறோம்' என்கிறார்.

அனுபவ உரிமை மட்டும்தான்!

விவசாயிகள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் பற்றி கெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, வெளிப்படையாக யாரும் பேச முன்வரவில்லை. தங்களது அடையாளங்களை தர மறுத்தவர்களாக பேசிய சில ஊழியர்கள், ''இது நிலம் கையகப்படுத்தும் திட்டம் அல்ல.

நிலத்தின் அனுபோக உரிமை மட்டும்தான் எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக நில உரிமையாளருக்குச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மூலம் கணக்கிட்டு... சந்தை மதிப்பில் 10 சதவிகித இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குழாய் செல்லும் பாதையில் இருக்கும் குறுகிய காலப்பயிர், ஆண்டுப்பயிர், நீண்ட காலப்பயிர், நிரந்தரப் பயிர் மற்றும் மரங்கள் என அனைத்தையும் கணக்கிட்டு அதற்குத் தகுந்த இழப்பீடும் வழங்கப்படும். நிலம் தொடர்பாக பட்டா மாறுதல் எதுவும் செய்யப்பட மாட்டாது.

நில உரிமையாளர் பெயரிலேயேதான் பட்டா இருக்கும். அதை விற்பது மற்றும் வாங்குவது உரிமையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், குழாய்ப் பாதையைக் கண்காணிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பொறுப்புதான். எரிவாயுக் குழாய்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. இந்தப் பாதையில்தான் செல்லும்'' என்று சொன்னார்கள்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு அருகேயுள்ள முல்லைநாயக்கனூர் பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட கெயில் நிறுவனத்தினரை, அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து தடுத்து நிறுத்தி போராடியதை அடுத்து, குழாய்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன்.

குழாய் ரூபத்தில் ஒரு குடைச்சல்..!

பாதுகாப்புக் குழு தலைவர் ஜி.கே. நாகராஜன் தலைமையில் ஒரு குழு, தமிழக விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்து இப்பிரச்னை பற்றி மனு கொடுத்துள்ளனர். ''ஏழு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் பேசி, விவசாயிகளுக்குச் சாதகமான விஷயங்களை ஆராய்ந்து பார்க்கிறோம்’' என்று உறுதியளித்துள்ளார்களாம் அமைச்சர்கள்.

இதைத் தொடர்ந்து, ஏழு மாவட்டங்களிலுமே குழாய் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.