Published:Updated:

ஏற்றம் தரும் இயற்கை எள்...!

குறைந்த செலவு.... குறைந்த பராமரிப்பு... நிறைந்த லாபம்...ஜி.பழனிச்சாமி படங்கள் : க.ரமேஷ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ஆமணக்கு, நிலக்கடலை, சூரியகாந்தி... என ஏகப்பட்ட எண்ணெய் வித்துப் பயிர்கள் இருந்தாலும், அதிகப் பராமரிப்பு இல்லாமல் குறைந்த செலவிலேயே நல்ல வருவாய் தருவது... எள் சாகுபடிதான். அதனால்தான் பெரும்பாலான விவசாயிகள் தொடர்ந்து எள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையிலேயே பல ஆண்டுகளாக எள் சாகுபடி செய்து வருகிறார்... நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி.

எள்ளுச் செடிகள் தளதளவென வளர்ந்து நிற்கும் வயல்காட்டில் நின்றபடி நம்மிடம் பேசிய பரமேஸ்வரி, ''எங்களுக்கு மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. நாலு ஏக்கர்ல கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் இருக்கு. ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, எள்ளு இது ரெண்டையும் போடுவோம். இதுலயே ஊடுபயிரா ஆமணக்கு போடுவோம். தோட்டத்துல விசைத்தறி போட்டிருக்கோம். தறி... வீட்டுக்காரர் பொறுப்பு. விவசாயம்... என் பொறுப்பு.

இயற்கை முறையில இப்ப (வைகாசிப் பட்டம்) ஒரு ஏக்கர்ல எள் சாகுபடி செஞ்சுருக்கோம். 'பசுமை விகடன்’தான் எங்களை இயற்கை விவசாயத்துக்கு அழைச்சுட்டு வந்தது. நானும், அவரும் நம்மாழ்வார் அய்யாவோட பயிற்சி வகுப்புகள்லயும் பயிற்சி எடுத்திருக்கோம். இந்த ஆறு வருஷமா இயற்கை விவசாயம்தான். அதோட, எங்க பகுதி விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கோம்'' என்று பெருமை பொங்க சொன்னவர், ஒரு ஏக்கர் நிலத்துக்கான எள் சாகுபடிப் பாடத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஏற்றம் தரும் இயற்கை எள்...!

ஏக்கருக்கு 2 கிலோ விதை !

'அனைத்து மண்ணிலும் எள் வளரும். என்றாலும், வண்டலும் செம்மண்ணும் கலந்த நிலத்தில் நன்றாக வளரும். எள்ளில் வெள்ளை, கருப்பு, சிவப்பு என மூன்று வகைகள் புழக்கத்தில் உள்ளன (இவர் கருப்பு எள் சாகுபடி செய்கிறார்). சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணைக் கலைத்துவிட வேண்டும். தொடர்ந்து 10 டன் தொழுவுரத்துடன், அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து கொண்ட 50 கிலோ உரத்தையும் கலந்து இறைத்து விட வேண்டும். பிறகு விதைப்புதான். ஒரு ஏக்கருக்கு, 2 கிலோ விதை தேவைப்படும். சலித்த சுத்தமான மணலை, விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவி விட வேண்டும். எள் மிகவும் லேசாக இருப்பதால்தான் மணலுடன் கலந்து விதைக்கிறோம். பிறகு குச்சியை (கவைக்கோல்) நிலத்தில் இழுத்துச் சென்றால்... விதைகள் மண்ணில் அழுந்தப் புதைந்து விடும்.

தண்ணீர் வசதி இருந்தால், விதைத்தவுடன் லேசாக ஒரு பாசனம் செய்யலாம். இல்லாவிட்டாலும், கவலையில்லை. கிடைக்கும் பருவ மழை நீரே போதுமானது. விதைத்த 25-ம் நாளில் 10 கிலோ தழைச்சத்து உரத்தைத் தூவ வேண்டும். தொடர்ந்து 40-ம் நாள் 15 கிலோ தழைச்சத்துடன் 15 கிலோ பொட்டாஷ் உரத்தைக் கலந்து கொடுத்து, பாசனம் செய்ய வேண்டும். மானாவாரி விவசாயம் போல விதைகள் தூவப்படுவதால்... செடிகள் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாக இருக்கும். இப்படி இருந்தால், செடிகளின் வளர்ச்சி ஒரே சீராக இருக்காது. அதனால், செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளி இருப்பதுபோல், செடிகளைக் கலைத்து விட வேண்டும்.

ஏற்றம் தரும் இயற்கை எள்...!

120 நாளில் அறுவடை !

60-ம் நாளில் நன்றாகப் பச்சைகட்டி செடிகள் வளர்ந்து நிற்கும். வெள்ளை நிறப்பூக்கள் செடிகளில் பூத்துக் குலுங்கும். வெயில் சூடு மற்றும் நுண்ணூட்டக் குறைபாடு காரணமாக பரவலாக பூக்கள் உதிரலாம். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து, அதிகாலை வேளையில் பனிப்புகை போல தெளிக்க வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில், இரண்டு முறை இப்படித் தெளித்தால்... பூக்கள் உதிர்வது நின்று, செடிகளில் பிஞ்சுகள் பிடிக்கும்.

நோய் தடுக்கும் அஸ்திரங்கள் !

70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பிரம்மாஸ்திரம், 2 லிட்டர் கோமியம் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.

90-ம் நாள் தொடங்கி... 120-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம். செடிகளில் தொங்கும் காய்களில், ஒரு காயைப் பறித்து பிளந்து பார்த்தால், விதைகள் நிறம் மாறி, முதிர்ந்து காட்சி அளிக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற தருணம். தகுந்த ஆட்களைக் கொண்டு செடிகளைப் பறித்து, கத்தை கட்டி, சுத்தம் செய்யப்பட்ட களத்துமேட்டில் 'அம்பாரக் குவியல்’ போட்டு அடுக்கி வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் வரை அம்பாரக் குவியலில் காயப் போட வேண்டும். அப்பொழுதுதான் நுனித்தண்டில் இருக்கும் இளம் காய்கள் காய்ந்து முதிர்ச்சி அடையும். பின்னர் அம்பாரக் குவியலைக் கலைத்து செடிகளை களத்துமேட்டில் பரப்பி காய வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் செடிகள் காய்ந்து விடும். பிறகு, களத்துமேட்டில் கோணி சாக்கு அல்லது தார்பாலினை விரித்து மரக்கட்டை அல்லது பலகை மீது, காய்ந்த செடிகளைத் தட்டினால் காய்களில் இருந்து பதருடன் கலந்து எள் பிரியும்.'

சாகுபடிப் பாடம் முடித்த பரமேஸ்வரி, நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசும்போது, ''அறுவடை முடிஞ்சு அடிச்ச எள்ளை காத்துல தூத்தினா, சுத்தமான எள் கிடைச்சுடும். ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். இப்போதைக்கு ஒரு கிலோ எள் 45 ரூபாய் வரை விலை போகுது. 400 கிலோ மகசூல்னு வெச்சுக்கிட்டாலே... 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 4 ஆயிரம் ரூபாய் செலவு போக, 14 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்றார் கணக்கு, வழக்குகளுடன்.

குடல் தொல்லை... இனி இல்லை!

ஏற்றம் தரும் இயற்கை எள்...!

எள்ளின் மருத்துவ குணங்களைப் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட திருப்பூர் சித்த மருத்துவ சங்கத் தலைவர் மற்றும் ஆராய்ச்சியாளரான மருத்துவர் டி.என். கோவிந்தராஜு, ''எத்தனையோ எண்ணெய்கள் இருந்தாலும்... நல்லெண்ணெய் எனப்படுவது... எள் எண்ணெய் மட்டும்தான். மனிதருக்கு ஏற்படும் பல நோய்களைக் கட்டுப்படுத்தும், குணப்படுத்தும் ஆற்றல் எள்ளுக்கு உண்டு. ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து வெந்நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, அரைத்துப் பிழிந்து ஒரு டம்ளர் பாலில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்... குடிப்பழக்கம், ரத்த சோகை, ஊட்டச் சத்துக்குறைவு போன்றவற்றால், குடலில் ஏற்படும் தொல்லைகளுக்கு விமோசனம் கிடைக்கும். தொண்டைப்புண், கீழ்வாதம் முதலிய வியாதிகள் குணம் அடையும்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு