Published:Updated:

பூரிக்க வைக்கும்... பூத் ஜலக்கியா !

பத்து சென்ட் நிலத்தில் 26 ஆயிரம் லாபம்... காசி. வேம்பையன் படங்கள்: பா. கந்தகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

பூத் ஜலக்கியா...'உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய்’. இந்த ரக மிளகாய் பற்றியும், வடமாநிலங்களில், இதை விவசாயிகள் சாகுபடி செய்து வருவது பற்றியும் 'பசுமை விகடன்’ 10.2.11 தேதியிட்ட இதழில் 'கின்னஸ் விருது பெற்ற கில்லாடி மிளகாய்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இப்போது, இதே மிளகாயை, தமிழகத்திலும் விளைய வைத்து வியக்க வைத்திருக்கிறார்... விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையில் இருக்கும் வஞ்சிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சேகர்!

நம் இதழில், முன்பு இந்த மிளகாய் பற்றி கட்டுரை வெளியானதுமே... 'தமிழகத்தில் இதை விளைய வைக்க முடியுமா..?' என்கிற சந்தேகம் விவசாயிகளின் மத்தியில் எழுந்து நிற்க, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மூலமாக இந்த விதைகளைப் பெற்ற சேகர், சோதனை முயற்சியாக நடவு செய்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வளைந்து, நெளிந்து செல்லும் மலைப் பாதைகளுக்கிடையில் 'பூ’விட்டு நிற்கும் பருத்திச் செடிகளும்... கதிர் முற்றிய சோளக் கொல்லைகளும் சூழ்ந்திருக்க... சேகரின் தோட்டத்தில், சுமார் 10 சென்ட் நிலத்தில் 'சிவப்பு’ நிறத்தில் சிரித்துத் தொங்கிக் கொண்டிருந்தன, 'பூத் ஜலக்கியா’ மிளகாய்கள்.

தோட்ட வேலையில் மும்முரமாக இருந்த சேகர், ''எங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலமிருக்கு. பத்தாங்கிளாசுக்கு மேல படிப்பு ஏறல. அதனால விவசாயம் பார்க்க வந்துட்டேன். ஆரம்பத்துல... மானாவாரிப் பட்டத்துல வரகு, கம்பு, சோளம், கொள்ளுனு விவசாயம் பாத்தேன். போதுமான வருமானம் இல்ல. அதனால, கடன வாங்கி, கிணறு வெட்டி, மக்காச்சோளம், பருத்தி, நெல்லுனு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

பூரிக்க வைக்கும்... பூத் ஜலக்கியா !

இப்ப என்னோட கிணத்துல 22 அடியில தண்ணி இருக்கு. அதனால, இந்த போகத்துல ஒரு ஏக்கர்ல மக்காச்சோளம்; 40 சென்ட் நிலத்துல பருத்தி; 10 சென்ட் நிலத்துல இந்த 'பூத் ஜலக்கியா’ மிளகாயையும் சாகுபடி செஞ்சுருக்கேன்.

இந்த மிளகாய் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. ஏழுமலைங்கிறவர்தான் விதையைக் கொடுத்து சோதனை முயற்சியா சாகுபடி செய்யச் சொன்னார். கூடவே, 'எந்தவிதமான ரசாயன மருந்துகளும் போடக் கூடாது’னு சொல்லி, இயற்கை உரம், மூலிகைப் பூச்சிவிரட்டினு அவரே கொடுத்தாரு. அதையெல்லாம் பயன்படுத்தித்தான் சாகுபடி செஞ்சுருக்கேன். செடி நல்லாவே வந்திருக்கு. இதுவரைக்கும் நாலு அறுவடை மூலம்... 100 கிலோ மிளகாய் கிடைச்சுருக்கு. மீதி அறுவடை பாக்கி இருக்கு'' என்றவர், சாகுபடிப் பாடம் படித்தார் இப்படி-

ஆடிப் பட்டம்,தைப் பட்டம் ஏற்றவை!

'இதன் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகள். நம்முடைய மண் மற்றும் தட்பவெட்ப நிலையில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கு செடியை வைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆடிப் பட்டம் மற்றும் தைப் பட்டம் ஏற்றவை.  

நாற்று உற்பத்தி!

பூரிக்க வைக்கும்... பூத் ஜலக்கியா !

பசுமைக் குடில் மூலம்தான் பூத் ஜலக்கியா நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். ஈரப்படுத்தப்பட்ட தேங்காய் நார்க்கழிவை குழித்தட்டில் நிரப்பி, அதில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர், பாலிதீன் கவர் கொண்டு மூடி, 7 நாட்கள் வைத்தால் முளைத்து விடும். அதன் பிறகு, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளில் பயிர் வளர்ச்சி ஊக்கியும், 30-ம் நாள் நோய்த்தொற்றைக் குறைக்க, இயற்கைப் பூஞ்சணக்கொல்லியும் தெளித்து வந்தால், 40-ம் நாளில் நாற்று நடவுக்குத் தயாராகி விடும்.

10 சென்ட் நிலத்துக்கு 300 நாற்று!

நிலத்தில் களை இல்லாமல், பொல பொலப்பாக மண் மாறும் அளவுக்கு குறுக்கு-நெடுக்காக டிராக்டர் மூலம் இரண்டு உழவு செய்து, 10 சென்ட் நிலத்துக்கு

10 கூடை தொழுவுரம் என்ற கணக்கில் இட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பின்னர் இரண்டு அடி அகலத்தில், பார் அணைக்க வேண்டும். பார்களுக்கு இடையில், தண்ணீர் கட்ட ஓர் அடி இடைவெளி விட வேண்டும். நிலத்தை ஈரமாக மாற்றி... பாரின் ஒரு பக்கத்தில் மட்டும் 40 நாட்கள் வயதுள்ள மிளகாய் செடிகளை இரண்டு அடிக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், 10 சென்ட் நிலத்தில் சுமார் 300 செடிகள் வரை நடவு செய்யலாம்.

பூரிக்க வைக்கும்... பூத் ஜலக்கியா !

பூச்சிகளுக்கு... மூலிகைப் பூச்சிவிரட்டி!

மூன்றாவது நாள் உயிர்தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். மாதம் ஒருமுறை களை எடுக்க வேண்டும். 20-ம் நாளில் இலைச் சுருட்டுப்புழுத் தாக்குதல் இருக்கும் அவற்றைக் கட்டுப்படுத்த, டேங்குக்கு

(10 லிட்டர்) 100 மில்லி வேப்பண்ணெய், 50 மில்லி காதி சோப் கரைசல் இரண்டையும் கலந்து தெளிக்க வேண்டும். 25 மற்றும் 50-ம் நாட்களில் ஏதாவது ஒரு பயிர் ஊக்கியைத் தெளிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரம்-2 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு-10 கிலோ, எரு-20 கிலோ ஆகியவற்றைக் கலந்து செடிக்குச் செடி வைத்து, மண் அணைக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தால், டேங்குக்கு 300 மில்லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும்.

36 ஆயிரம் ரூபாய்!

60-ம் நாளில் பூவெடுத்து, 75-ம் நாள் முதல் அறுவடைக்கு வந்து விடும். ஒவ்வொரு செடியிலும் 100 முதல் 120 மிளகாய்கள் இருக்கும். வாரம் ஒரு பறிப்பு வீதம், சராசரியாக, 36 முறை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 20 கிலோ வீதம், 36 பறிப்புக்கும் சேர்த்து 720 கிலோ மிளகாய் கிடைக்கும். கிலோ 50 ரூபாய் வீதம் விற்பனை செய்தால், 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அவற்றில் செலவு போக, 26 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.'

கிலோ 50 ரூபாய்!

சேகரின் சாகுபடிப் பாடத்தை அடுத்து, அவருக்கு பூத் ஜலக்கியா மிளகாயை சோதனை முயற்சியாக கொடுத்த விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் பேசினோம். அவர் நம்மிடம், ''10 வருஷமா விவசாயிகளிடம் இருந்து மூலிகைகளை வாங்கி விக்கிறேன். ஒரு முறை 'பசுமை விகடன்’ல பூத் ஜலக்கியா மிளகாய் பத்தின செய்தியைப் படிச்சேன். அதுக்குப் பிறகு, அசாம் மாநிலத்தில் உள்ள விதைக் கம்பெனியைத் தொடர்பு கொண்டு விதையை வாங்கி, என்னோட தோட்டத்துல நாற்றங்கால் போட்டேன். அதிலிருந்து 50 செடிகளைப் பறிச்செடுத்து நடவு போட்டு பாத்தேன். நல்லாவே வந்துச்சு. அதுக்குப் பிறகு, போன தைப் பட்டத்துல மலைக் கிராமங்கள்ல எப்படி வளருதுனு பாக்கறதுக்காக சேகர்கிட்ட கொடுத்தப்போ... அங்கயும் நல்லாவே வந்திருக்கு.

சமவெளி சாகுபடிக்கு ஆடிப் பட்டமும், மலைப் பகுதிக்கு தைப் பட்டமும் நல்லாயிருக்கு. இப்போதைக்கு, ஒரு கிலோ மிளகாயை 50 ரூபாய்னு நானே வாங்கி வெச்சுருக்கேன். இந்த மிளகாய்க்கான ஏற்றுமதி வாய்ப்பு சிறப்பா இருக்கு.

பச்சை மிளகாய் தரத்திற்கு தக்கப்படி கிலோ 20 ரூபாய்ல இருந்து 200 ரூபாய்  வரைக்கும் விற்பனையாகுது. காய்ஞ்ச மிளகாய் தரத்தைப் பொறுத்து கிலோ 200 ரூபாய்ல இருந்து 1,200 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. வழக்கமாக மிளகாய் விதை சேமிப்பது போல,  நன்றாக காய வைத்து விதையை சேகரித்து பயன்படுத்தலாம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,
சேகர், செல்போன்: 96261-17026..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு