Published:Updated:

இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!

'பாரம்பரிய' பெருமை பேசும் பாலூர் ! காசி. வேம்பையன்

பிரீமியம் ஸ்டோரி

ஆராய்ச்சி

##~##

தண்ணீர், வேலையாட்கள், விலையின்மை ஆகிய பிரச்னைகள் ஒருபுறமிருக்க, போலி விதைகள்... தரமற்ற நாற்றுகள்... போன்றவை இன்னொருப் பக்கம் விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன்னல்களில் இருந்து, விவசாயிகளை மீட்கும் வகையில், அதிக மகசூல் கொடுக்கும் தரமான காய்கறி ரகங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருகிறது, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில், பாலூர் கிராமத்தில் அமைந்திருக்கும் காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்!

கோயம்புத்தூர், தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த நிலையத்தைக் காண, காலைப் பொழுதொன்றில் போய்ச்சேர்ந்தோம். அன்புடன் வரவேற்ற ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கலைமணி, உற்சாகம் பொங்க நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி பேச ஆரம்பித்தார்.

''1905-ம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகத்தான் இது துவங்கப்பட்டது. பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, 89-ம் ஆண்டு முதல் காய்கறி ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. நிலையத்துக்குச் சொந்தமான 55 ஏக்கர் நிலத்தில் மா, கொய்யா, பலா போன்ற நாற்றுகளை உற்பத்தி செய்கிறோம்.

இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!

ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 15 ஆயிரம் நாற்றுகள் இங்கு உற்பத்தியாகின்றன. வெண்டை, கத்திரி, தக்காளி, கீரை, பீர்க்கன், சுரைக்காய், சாம்பல் பூசணி... போன்ற பல்வேறு காய்கறி ரகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் விதை உற்பத்தியும் இங்கு நடந்து வருகிறது. நெல், கேழ்வரகு, கத்திரி, மிளகாய், புடலை, பலா... போன்றவற்றில் உயர் விளைச்சலைத் தரக்கூடிய ரகங்களையும் வெளியிட்டிருக்கிறோம்'' என்றவர், அந்த ரகங்களைப் பற்றி விளக்கினார்.  

நவரைப் பட்டத்துக்கு ஏற்ற நெல் ரகங்கள்!

''பி.எல்.ஆர்.-1 (கார்த்திகைச் சம்பா), பி.எல்.ஆர்.-2 (பூம்பாலை) ஆகிய நெல் ரகங்கள்... காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் நவரைப் பட்டத்தில் (டிசம்பர்- ஜனவரி) அதிக மகசூல் கொடுக்கக் கூடியவை. இவற்றின் வயது 180-190 நாட்கள். பி.எல்.ஆர்.-1 என்ற கேழ்வரகு இறவைப் பட்டத்துக்கு (பங்குனி- சித்திரை மற்றும் மார்கழி-தை) ஏற்றது. இதன் வயது 180 நாட்கள்.

இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!

40 டன் மகசூல் கொடுக்கும் கத்திரி!

பி.எல்.ஆர்.-1 ரக கத்திரி ரகத்தை நீண்ட தூரம் விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும், வாடி, வதங்காமல் இருக்கும்.  இது அதிக சுவை கொண்டிருப்பதால், அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. இந்த ரகம், ஹெக்டேருக்கு 25 டன் மகசூல் கொடுக்கக் கூடியது.

பி.எல்.ஆர்.-2 (செவந்தம்பட்டி) கத்திரி ரகத்தில் காய்ப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும். இந்த ரகம் அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. இது, ஹெக்டேருக்கு 38 முதல் 40 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடியது. இதன் வயது 150-160 நாட்கள்.

இடைப்பருவ மகசூலுக்கான பலா!

இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!

பி.எல்.ஆர்-1 (பனிக்கண்குப்பம்) என்ற ரக பலா, வழக்கமான பருவத்தில் (ஏப்ரல்-ஜூன்) 70 முதல் 80 காய்களும், இடைப்பருவத்தில் (நவம்பர்-டிசம்பர்) 25 முதல் 30 காய்களும் காய்க்கக் கூடியது. பி.எல்.ஆர்.-2 (பத்திரக்கோட்டை) என்கிற ரகம், 90 முதல் 100 காய்கள் கொடுக்கக் கூடியது. இந்த ரகத்தின் சுளைகளை அதிக நேரம் வைத்திருக்க முடியும். இந்த இரண்டு ரகங்களுமே நடுத்தர உயரம் கொண்டிருப்பதால், வீட்டுத் தோட்டத்துக்கும் ஏற்றவை.

உவர் மண்ணுக்கு ஏற்ற மிளகாய்!

பி.எல்.ஆர்.-1 மிளகாய் ரகம் கடலோர உவர் நிலத்திலும், செழித்து வளரும் தன்மைஉடையது. மார்கழிப் பட்டத்துக்கும் ஏற்ற இந்த ரகத்தை வீட்டுத் தோட்டத்திலும் பயிர் செய்யலாம். ஹெக்டேருக்கு 18 டன் மிளகாய் மகசூல் கொடுக்கக் கூடிய, இந்த ரகத்தின் வயது 210-240 நாட்கள்.

கல் தேவையில்லாத புடல்!

பி.எல்.ஆர்.-1 (அரியாங்குப்பம்) என்ற புடலை ரகம் நல்ல சுவை கொண்டது. இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். ஒவ்வொரு காயும் சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு இருப்பதால், காய்கள் நீண்டு வளர்வதற்காக அவற்றின் முனையில் கல் கட்டத் தேவையில்லை.

புவி ஈர்ப்பு விசையைக் கொண்டே வளையாமல் அவை விளையும். இந்த ரகம் ஹெக்டேருக்கு 35 முதல் 40 டன் மகசூல் கொடுக்கக்கூடியது. பி.எல்.ஆர்.-2 என்ற குட்டைப்புடலை (சாத்திப்பட்டு) ரகம் சுவையானதோடு விற்பனைக்கும் வசதியானது.

இனிக்குது இடைப்பருவ பலா...கலக்குது கல்கட்டாத புடலை!

இந்த ரகம் அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. ஒவ்வொரு காயும் 550 முதல் 600 கிராம் எடை இருக்கும். ஒரு ஹெக்டேரில் 35 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் வயது 135-140 நாட்கள்'' புது ரகங்களைப் பற்றி, இப்படி தெளிவாக விளக்கிய கலைமணி,

''இவையல்லாமல், ஆயிரம் காய்கள் வரை காய்க்கும் பலா ரகம் மற்றும் புதிய கீரை வகைகள் பற்றிய ஆய்வுகளும் எங்கள் மையத்தில் நடக்கின்றன. நாங்கள் ஒட்டு ரகங்களை உருவாக்குவதில்லை.

பாரம்பரியமாக விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுவரும்... மறைந்து கிடக்கும்... நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகங்களைத்தான் தேடிப்பிடித்து இனம் கண்டு வெளியிட்டு வருகிறோம்'' என்று உள்நாட்டு ரகங்களின் பெருமையை உணர்த்தினார்!

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறி ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 04142-212538.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு