Published:Updated:

மானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...!

நடவு முறையில் துவரை சாகுபடி ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

அறிமுகம்

செம்மை நெல், செம்மைக் கரும்பு... என ஒவ்வொரு பயிரிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் வேளாண்மைத் துறை... புதிதாக துவரையில் நாற்று நடவு முறையை அறிமுகம் செய்துள்ளது. பயறு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டம், நடப்பு ஆண்டில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

குறுகிய காலத்தில் மகசூல்!

இந்தத் திட்டம் பற்றி தெரிந்துகொள்ள, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வேளாண் உதவி இயக்குநர் ரவிபாரதியைச் சந்தித்தபோது, ''மானாவாரி விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பது, துவரை.

வழக்கமாக துவரையில் விதை விதைக்கும் முறைதான் நடைமுறையில் உள்ளது. துவரையின் மகசூலை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் நாற்று நடவு முறையை வேளாண்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்படி சாகுபடி செய்யும்போது விதையின் தேவை குறைவதுடன், மகசூலும் அதிகமாகக் கிடைக்கும். வழக்கமாக விவசாயிகள் பயிரிட்டு வரும் துவரையின் வயது 160 நாட்கள். ஆனால், நாற்று நடவு முறைக்காகவே, 130 நாட்கள் வயதுடைய 'கோ.ஆர்.ஜி.-7’ என்ற ரகத்தை வேளாண்துறை பரிந்துரை செய்வதால், குறுகிய காலத்தில் மகசூல் கிடைக்கும்'' என முன்னுரை கொடுத்தவர், திட்டத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

மானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...!

ஏக்கருக்கு ஒரு கிலோ விதை!

தென்னைநார்க் கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் துவரையை விதைத்து, சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளித்து வந்தால், நாற்று முளைக்கத் தொடங்கும். குழித்தட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ஷீட்களிலும் தென்னைநார்க் கழிவைக் கொட்டி நாற்று உற்பத்தி செய்யலாம். குழித்தட்டு நாற்றுகளை 15 நாட்களில் நடவு செய்துவிட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டில் வளர்ந்த நாற்றுகளை 25 நாட்கள் வரை வைத்திருந்து நடலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது. வழக்கமான விதைப்பு முறையில் ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை விதை தேவைப்படும். மானாவாரி விவசாயிகள் நாற்றாங்கால் உற்பத்தியை ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம். ஆகஸ்ட் மாதம் 2-ம் வாரம் விதை போட்டால்... செப்டம்பர் முதல் வாரம் நடவுப்பணியைத் தொடங்கலாம். அப்போது மழைக்காலம் என்பதால் நிலத்தில் உள்ள ஈரத்திலேயே நடவு செய்து விடலாம்.

பாத்தியின் ஓரத்தில் நடவு!

மானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...!

நாற்று உற்பத்தி தொடங்கும்போதே, வயல் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கிவிட வேண்டும். தொழுவுரம் இட்டு நிலத்தை இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 கொக்கிகள் உள்ள கலப்பையில் நடுவில் உள்ள மூன்று கொக்கிகளையும் கழற்றி விட்டு ஓட்டினால்,

5 அடி இடைவெளியில் பார் மாதிரியான கரைகள் உருவாகிவிடும். பாரின் ஒரு பக்கத்தில் 3 அடி இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்ய வேண்டும். இப்படி பாரின் ஒரு ஓரத்தில் மட்டும் நடவு செய்வதால், பள்ளத்தில் தேங்கும் மழைநீரே, நாற்று வளர போதுமானதாக இருக்கும்.  

நோய் தாக்காது!

நடவு செய்த 25-ம் நாள் களை எடுத்து, மண் அணைக்க வேண்டும். அப்போது செடியின் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகக் கிளைகள் உருவாகும். இதைத் தவிர வேறு பராமரிப்பு தேவைப்படாது. துவரையில் எந்த நோயும் தாக்குவதில்லை. சில நேரங்களில் பூச்சித்தாக்குதல் இருக்கலாம். 250 மில்லி என்.பி. வைரஸ் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலமாகத் தெளித்து, உயிரியல் முறையிலேயே பூச்சிகளைக் கட்டுப்படுத்தி விடலாம்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை கிடைக்கும். அதைக் கொண்டே செடிகள் செழிப்பாக வளர்ந்து விடும்.

பூக்கும் நேரத்தில் மழை முடிந்து விடுவதால், இயற்கையாகவே நல்ல சூழல் கிடைத்து விடும். பிறகு இயற்கையாகவே கிடைக்கும் பனி மற்றும் நிலத்தில் உள்ள ஈரப்பதம் ஆகியவையே அறுவடை வரை செடிகளுக்குப் போதுமானதாக இருக்கும்.

இரண்டு மடங்கு மகசூல்!

வழக்கமாக விதைக்கும் துவரையின் தண்டு அதிக பருமனாக இருக்கும் என்பதால், அறுவடையின்போது, அதை வெட்டிதான் எடுப்பார்கள். ஆனால், 'கோ.ஆர்.ஜி-7’ ரகத்தில் அந்த கஷ்டம் இருக்காது. இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். அதோடு, இந்த ரகம் அதிக உயரம் போகாமல் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.

அறுவடை செய்த துவரையைக் காய வைத்து, தட்டி காயைப் பிரித்துக் கொள்ளலாம். விதைப்பு முறையில் விதைப்பது எல்லாம் முளைத்து விடாது, அதேபோல பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியாது.

மானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...!

அதனால் மகசூல் குறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால், நாற்று நடவு முறையில் இந்த விஷயங்கள் பராமரிக்கப்படுவதால், அதிக மகசூல் கிடைக்கும். நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு சராசரியாக 750 கிலோ முதல் ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். வழக்கமான துவரையில் அதிகபட்சமே 400 கிலோ மகசூல்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இறவை முறையில் சாகுபடி செய்யும்போது நாற்று நடவு முறையில் ஏக்கருக்கு ஆயிரத்து ஐநூறு கிலோ வரை கூட மகசூல் எடுக்க முடியும்'' என்ற ரவிபாரதி நிறைவாக,

மாதிரிப் பண்ணைகளுக்கு மானியம்!

''இது புதியத் திட்டம் என்பதால், ஒரு வட்டாரத்தில் மாதிரித் திடல் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விவசாயிகளுக்கு

15 ஆயிரம் ரூபாய் மானியமும், செயல்விளக்கத் திடல் அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட

25 விவசாயிகளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை மானியமும் உண்டு'' என்ற உற்சாகத் தகவலையும் தட்டிவிட்டார்!

தொடர்புக்கு,
ரவிபாரதி,
செல்போன்: 94425-42894.

எங்களையும் வாழ விடுங்கள்..!

''எங்களையும்... எங்கள் தலைமுறைகளையும் சுத்தமாகவும் பசுமையாகவும் வாழவிடுங்கள். இருக்கின்ற நிலத்தையும் பாழாக்கி விடாதீர்கள். இனியாவது காடுகளை விட்டு வையுங்கள். இனிமேலாவது, வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள். உங்கள் குழந்தைகள் நன்றாக வளருவதற்காக, இதைக்கூட செய்ய மாட்டீர்களா..?''

மானாவாரியி்ல் ஒரு டன்... இறவையி்ல் ஒன்றரை டன் ...!

-இப்படி எட்டாம் வகுப்பு மாணவி சாந்தி பேசப் பேச... கூடியிருந்த கூட்டம், உருகிப்போனது. விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற புவி வெப்பமயமாதல் தொடர்பான விழிப்பு உணர்வு பேரணியின்போதுதான் சாந்தி இப்படி உருக வைத்தார். இவர், தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் கூட்டமைப்பின் தலைவி என்கிற பதவியிலும் இருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஊழியர் பயிற்சி நிலையம், வேம்பு மக்கள் சக்தி இயக்கம், ஸ்காட் தொண்டு நிறுவனம், விடியல் டிரஸ்ட், கோகுலம் டிரஸ்ட் மற்றும் தட்ப வெப்ப நீதிக்கான குழந்தைகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பலவிதமான விழிப்பு உணர்வு கோஷங்களுடன் பேரணியில் சென்ற மாணவர்கள், அங்கிருந்த வீடுகள், கடைகள் என அனைவருக்கும் மரக் கன்றுகளைக் கொடுத்து, 'மழைநீரை சேமிப்போம் மண்வளம் காப்போம்' என்கிற வில்லையை ஒட்டிச்சென்றனர்.

 - இ. கார்த்திகேயன்
படங்கள்: எல். ராஜேந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு