Published:Updated:

இடைத்தரகர் இம்சை போயாச்சு... இணையற்ற லாபம் வந்தாச்சு...

நிமிர வைக்கும் நேரடி காய்கறி விற்பனை! என். சுவாமிநாதன்,படங்கள்: எல். ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

ஆச்சரியம்

##~##

விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வைத்தாலும், விலை வைக்கும் உரிமை... 'வியாபாரிகள்' என்கிற போர்வையில் திரியும் இடைத்தரகர்களிடம்தான் இருக்கிறது. 'கமிஷன்' என்ற பெயரில், விவசாயிகளைவிட அதிக லாபத்தை அனுபவிக்கும் இவர்கள், அனைத்து காய்கறிச் சந்தையிலும் கோலோச்சி வருகிறார்கள். இவர்கள் இல்லாமல், விவசாயிகளால் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாது என்பதுதான் பெரும்பாலான சந்தைகளின் துர்பாக்கியநிலை. இதற்கு நடுவே, திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியில் 'இடைத்தரகர் இல்லா நேரடி வர்த்தகம்’ என்கிற அதிரடித் திட்டத்தை செயல்படுத்தி... இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்!

இந்த ஆரோக்கிய பயணத்துக்கு அடித்தளமிட்டவர், கடையம் பகுதியின் தோட்டக்கலை உதவி இயக்குநர் டேவிட் ராஜா பியூலா. 'வயர்லெஸ் விளக்குப் பொறி’, 'ரீசார்ஜ் தெளிப்பான்’ என்கிற இரு எளிமையான விவசாயக் கண்டுபிடிப்புகள் மூலம் 'பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் இவர்.

தற்போது, தான் கையில் எடுத்திருக்கும் 'இடைத்தரகர் இல்லா நேரடி வர்த்தகம்’ பற்றிப் பேசிய டேவிட் ராஜா பியூலா, ''வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை ரெண்டும் காய்கறி விவசாயிகளுக்காக நிறையத் திட்டங்களைச் செயல்படுத்துறாங்க. தொழில்நுட்பங்களையும் கத்துக் கொடுத்து விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்காங்க. ஆனா, விற்பனையைப் பத்தி பெருசா கவனம் செலுத்தலைன்றதுதான் உண்மை. குறிப்பா, காய்கறி விவசாயிங்க நிலைமைதான் ரொம்பவும் பரிதாபம். அறுவடை செஞ்ச காய்கறிகளை இருப்பு வெச்சு விக்க முடியாதுங்கிறதால கிடைக்குற விலைக்கு விக்க வேண்டிய சூழ்நிலை.

இடைத்தரகர் இம்சை போயாச்சு... இணையற்ற லாபம் வந்தாச்சு...

சமீபத்துல, ஒரு விவசாயக் கருத்தரங்குல கலந்துக்குறதுக்காக டென்மார்க் நாட்டுக்குப் போயிருந்தேன். அங்க, காய்கறி விவசாயிகளுக்காகவே 'இடைத்தரகர் இல்லாத நேரடி வர்த்தகம்’ங்கற திட்டம் பத்திக் கேள்விப்பட்டேன். இதை நம்ம பகுதியில செயல்படுத்தலாமேனு யோசிச்சேன். சோதனை அடிப்படையில சில கிராமங்கள்ல செயல்படுத்தினப்ப, நல்ல பலன் கிடைச்சுது. அதனால, இப்ப கொஞ்சம் இந்தத் திட்டத்தை விரிவு படுத்தியிருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த டேவிட் ராஜா பியூலா தொடர்ந்தார்.

''கடையம் பகுதியில இருக்கற காய்கறி, எலுமிச்சை, தென்னை விவசாயிகளோட தொடர்பு எண்களை எல்லாம் சேகரிச்சு... அதை ஒரு தொகுப்பா 'பிரின்ட் அவுட்’ எடுத்து எனக்கு தெரிஞ்ச நுகர்வோர்களுக்குக் கொடுத்தேன். மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள்னு பலதரப்பட்டவங்களுக்கும் இந்த பட்டியல் கிடைச்சதும்... பக்கத்துல இருக்குற விவசாயிகளோட தோட்டத்துக்கு நேரடியா போய் காய்கறிகளை வாங்க ஆரம்பிச்சாங்க. 'ஃபார்ம் ஃபிரஷ்’ காய்கறிகளை வாங்குறதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இந்த விஷயம் பரவ ஆரம்பிச்சதும், நிறையபேர்

இடைத்தரகர் இம்சை போயாச்சு... இணையற்ற லாபம் வந்தாச்சு...

பட்டியல் கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. இந்தப் பகுதியில இது பிரபலமாகிடுச்சு. அதனால இடைத்தரகர்கள் இல்லாம, களத்து மேட்டிலேயே காய்கறிகளை வித்துடறாங்க விவசாயிங்க'' என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் ராஜா பியூலா!

இதன் பலனை அனுபவிக்கும் விவசாயிகளில் ஒருவரான ஆலங்குளம் தாலூகா, நாளாம்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மரியபிச்சை பாண்டி, ''ஒரு ஏக்கர்ல வெண்டை, புடலை, சுரைக்காய்னு சாகுபடி பண்றேன். அறுவடை செஞ்ச காய்களை திருநெல்வேலி சந்தையில வித்துட்டு இருந்தேன். போக்குவரத்துச் செலவு, கமிஷனெல்லாம் போக, குறைவாத்தான் லாபம் கிடைக்கும். இப்போ என் தோட்டத்துலேயே காய்கறிகள் வித்துடுது. தேவைப்படுற காய்களை, செல்போன்ல கூப்பிட்டு முன்கூட்டியே பதிவும் பண்ணிக்கிறாங்க. அதனால தேடி வர்றவங்களுக்கு தட்டுப்பாடு இல்லாம காய்களைக் கொடுக்குறேன். ஏறி, இறங்காம ஒரே விலையும் கிடைச்சுடுது. அதனால இப்போ நல்ல லாபம் பார்த்துட்டிருக்கேன்'' என்கிறார், சந்தோஷமாக.

கடையம் பகுதியைச் சேர்ந்த அருள் செல்வராஜ், ''நான் மூன்றரை ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடி பண்றேன். என்னோட தோட்டத்து எலுமிச்சையை கடையம் சந்தையில வித்துட்டு இருந்தப்ப, ஒரு எலுமிச்சைக்கு ஒரு ரூபாய் இருபந்தைந்து காசு கொடுப்பாங்க. இப்ப நிறைய பேர்கிட்ட என் செல்போன் நம்பர் இருக்கறதால நேரடியாவே தோட்டத்துக்கு வந்து வாங்கிட்டு போயிடறாங்க. குறைஞ்சபட்சமா ஒரு காய்க்கு ரெண்டு ரூபாய் வரைக்கும் கூடுதலா கிடைக்குது. கல்யாண வீடு, விசேஷங்களுக்கு மொத்தமாக வாங்குறவங்களும் இங்கயே வந்துடறாங்க. ஏஜென்ட் கமிஷன், போக்குவரத்துச் செலவு எல்லாமே மிச்சம்'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்.  

செல்வராஜின் தோட்டத்துக்கு காய் வாங்க வந்திருந்த புஷ்பமேரி, ''அமாவாசை, பௌர்ணமி, நல்ல நாள்னு காய்கறி வாங்கப் போனா... வியாபாரி சொல்லுறதுதான் விலை. ஆனா, இங்க வயலுக்கே வந்து வாங்குறப்போ நியாயமான விலைக்கு, பச்சை பசேல் காய்கறிங்க கிடைக்குது. மனசுக்கும் நிறைவா இருக்குது'' என்றபடியே தெம்பாக நடந்தார்!

மாநிலம் முழுவதும் வேளாண் துறை மற்றும் உழவர் சங்கங்கள் கைகோத்து இதுபோன்ற முயற்சியில் இறங்கினால்... ஆண்டாண்டு காலமாக அவதியில் இருக்கும் விவசாயிகள் விடுபடுவார்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு