Published:Updated:

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

பதுங்கிய நிறுவனம்... பலியான விவசாயி..!ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

அம்பலம்

##~##

'பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்’ என்கிற சொலவடை, மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகியிருக்கிறது. ஆம்... 'ஒரு லட்சம் கொடுத்தால்... மாதம் 10 ஆயிரம் ரூபாய்...

15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்’ என கவர்ச்சியாக விளம்பர வலை விரித்து, 'முதலீடு' எனும் பெயரில் விவசாயிகளிடமிருந்து லட்சங்களில்... கோடிகளில் பணத்தைக் கறந்த 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ எனும் நிறுவனம், தற்போது, தங்களை ஏமாற்றிவிட்டதாக புகார் மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர்களை முற்றுகையிட்டபடி இருக்கின்றனர் விவசாயிகள்!

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு... 'தேக்கு மரம் வளர்த்தால் லட்சங்களில் லாபம்...' என்றபடி பொதுமக்களிடமிருந்து முதலீடாக ஆயிரங்கள், லட்சங்கள் என்று பணத்தைக் கைப்பற்றின புற்றீசல்களாகக் கிளம்பிய பல நிறுவனங்கள். ஒரு கட்டத்தில், அதில் பல நிறுவனங்களும் சத்தமில்லாமல் ஓட்டமெடுக்க... பாதிக்கப்பட்டவர்கள், இன்று வரை நிவாரணம் கிடைக்காமல் அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

இப்படி, தங்கத்தில் முதலீடு... காந்தப் படுக்கை என்று பல ரூபங்களிலும் மோசடிப் பேர்வழிகள் கடைவிரிப்பதும்... கடைசியில் ஓட்டமெடுப்பதும் இங்கே தொடர்கதையாகவே இருக்கிறது. அதனால்தான், ஈமு ரூபத்தில் பலரும் கடைவிரித்ததுமே... 'ஈமு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடிய விஷயம்..? இதற்கு எதிர்காலம் எந்த அளவுக்கு இருக்கிறது' என்பது குறித்தெல்லாம் நிபுணர்கள் மற்றும் அனுபவ விவசாயிகளின் கருத்துக்களைத் தொகுத்து 'பசுமை விகடன்' இதழில் வெளியிட்டு வருகிறோம். 'விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பேட்டியையும் சமீபத்தில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டோம்!

இந்நிலையில்தான்... 'ஒப்பந்தத்தில் சொன்னபடி வளர்ப்புக்கூலி, தீவனம் எதையும் தராமல், நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது’ என்றபடி ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் இயங்கிவரும் 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் மீது... கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

8 லட்சம் போச்சு!

இந்தக் கொடுமை பற்றி பேசிய பல்லடம் அருகேயுள்ள கே. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், ''ஈமு கோழி கம்பெனிக்காரங்க... 'ரெண்டு லட்ச ரூபா கட்டுனா போதும். ஷெட் போட்டு,

20 கோழிகளையும் கொடுத்து, அதுகளுக்கான தீனியையும் கொடுத்துடுவோம். வளர்ப்புக் கூலியா மாசத்துக்கு 7 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்போம். அதுமட்டுமில்லாம, வருஷத்துக்கு ஒரு தடவை போனஸ், ஒப்பந்தக் காலமான ரெண்டு வருஷம் முடிஞ்சதும் முதலீடு செஞ்ச பணத்தையும் திருப்பிக் கொடுப்போம்’னு விளம்பரம் பண்றாங்க.

'2 லட்சத்தை வட்டிக்குக் கொடுத்தாலும், அதிகபட்சமா மாசம் 4 ஆயிரம்தான் கிடைக்கும். அதைவிட அதிகமா கிடைக்கறதோட போனஸும் கிடைக்குதே’னு ஆசைப்பட்டுதான் முதலீடு செஞ்சேன். என் பேர்ல 4 லட்ச ரூபா, மனைவி பேர்ல 4 லட்ச ரூபாய்னு மொத்தம் 8 லட்ச ரூபாய் கட்டினேன்.

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

ஆபீஸுக்கு பூட்டு!

ஆறு மாசம் வரைக்கும் தீவனம், வளர்ப்புக்கூலி இதையெல்லாம் பிரச்னையில்லாம கொடுத்தாங்க. அப்பறம் நிறுத்திட்டாங்க. உசுருள்ள ஜீவன்களை பட்டினி போட மனசில்லாம... வெளியில காசு கொடுத்து தீவனம் வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கேன். 'கோழி நம்ம கையில இருக்குதுல்ல. எப்படியும் பணம் கிடைச்சுடும்’னு நம்பிக்கையில இருந்தேன். ஆனா, கம்பெனிக்காரங்களோ இதைக் கண்டுக்குற மாதிரியே தெரியல. ஆரம்பத்துல, போன் பண்ணா, எடுத்து ஏதாவது பதில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப போனை எடுக்கறதே இல்ல. அப்பறம் போய்ப் பாத்தப்பதான் ஆபீஸே திறக்கறதில்லைனு தெரிஞ்சுச்சு. கம்பெனியில எங்களுக்குக் கொடுத்த செக்கும் ரிட்டனாயிடுச்சு.

அப்பதான் ஏமாந்து போனதே உரைச்சுச்சு. இப்படி ஏமாந்து போன 435 பேரும் திருப்பூர் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்கோம். நடவடிக்கை எடுக்குறதா சொல்லியிருக்கார். முதலமைச்சருக்கும் புகார் அனுப்பியிருக்கோம்'' என்று கவலை பொங்கச் சொன்னார்.

தாலியை விற்று முதலீடு!

''ஒன்றரை வருஷ ஒப்பந்தத்துல 4 லட்ச ரூபாய் கட்டியிருக்கேன். பணம் கட்டின அடுத்த நாளே... என் தோட்டத்துக்கு வந்து ஷெட் போட்டு கொடுத்தாங்க. ஆனா, நாலு மாசமாச்சு... இன்னிவரைக்கும் கோழிகளைக் கொடுக்கவேயில்லை.

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

நல்ல வருமானம் கிடைக்கும்னு ஆசைப்பட்டு, பொண்டாட்டி கழுத்துல இருந்த தாலி, தண்டையை வித்துதான் பணம் கட்டினேன். கடைசியில ஏமாந்து போய், 'அம்போ’னு நிக்கிறேன். பணம் திரும்பக் கிடைக்கலேனா, குடும்பத்துல பிரச்னை வந்துடுமோனு பயமா இருக்கு'' என்று கண் கலங்குகிறார், சாமிக்கவுண்டன்பாளையம் வெங்கிடுசாமி.

உயிரை வாங்கிய ஒப்பந்தம்!

''சிறுகச்சிறுக சேர்த்து வெச்ச 2 லட்ச ரூபாயை அந்தக் கம்பெனியில கட்டினோம். 20 கோழிங்க கொடுத்தாங்க, அம்புட்டுதான். இப்ப நாலு மாசமா கூலியும் கொடுக்கல, தீனியும் அனுப்பல. தீனி கிடைக்காம கோழிங்க ஒண்ணுக்கொண்ணு கொத்திக்கிட்டுக் கிடந்துச்சுக. விசனப்பட்டுப் போய் கம்பெனிக்கு போன் பண்ணி கேட்டார் என் வீட்டுக்காரர்.

அப்ப, 'பணம் கொடுக்க முடியாது... புடுங்கறத புடுங்கிக்கோ’னு கம்பெனி ஓனரோட பொண்டாட்டி காயத்ரி, திமிரா பதில் சொன்னாங்க. 'கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க’னு இவர் கேட்டிருக்காரு. 'புளியும், சாம்பலும் கொண்டு வாய்யா... நல்லா விளக்கி சொல்றேன்’னு கிண்டலா பதில் சொல்லி இருக்கா அந்த காயத்ரி.

இதைக் கேட்டவரு... 'அய்யோ ஈமுக்கோழி கம்பெனியில போட்ட பணம் போச்சே'னு மாருல கைவெச்சு உக்கார்ந்துட்டாரு. புலம்பிக்கிட்டே இருந்தவர், மாரடைப்பு வந்து செத்தே போயிட்டாரு'' என்றபடி கணவர் வையாபுரியின் புகைப்படத்தைக் கையில் வைத்தபடி கண்கலங்குகிறார், அய்யம்பாளையம், கண்ணம்மாள்.

மொத்தமாகக் கேட்டால் என்ன செய்றது?

''கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள 'கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் பணம் கட்டியவர்கள் அத்தனைப் பேருக்கும் மொத்தமாக பட்டை நாமம் சாத்தியிருக்கிறது'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் முதலீடு செய்தவர்கள்.

நிறுவனத்தின் சார்பாக ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ள கார்த்திக் சங்கர் என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

''நான் யாரையும் ஏமாத்த மாட்டேன். டெபாசிட் செய்தவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் வந்து முதலீட்டுத் தொகையைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும்? இன்னும் இரண்டு நாட்களில் எல்லோருக்கும் பணத்தை செட்டில் செய்து விடுவேன்'' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களின் முன்பு உண்ணாவிரதம் இருப்பது; நிறுவனம் கொடுத்து, வங்கியால் திருப்பி அனுப்பப்பட்ட 500 காசோலைகளை ஆதாரமாக வைத்து, தனித்தனியாக வழக்குகள் தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ என்கிற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் எண்ணத்தில் நிழலாடுகின்றன.

இது ஒரு சூதாட்டம்!

'ஒப்பந்த முறை ஈமு வளர்ப்பைத் தடை செய்யவேண்டும்’ என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவர் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பவானி நதிநீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர், வழக்கறிஞர் சுப. தளபதி. ஈமு விவகாரம் பற்றி நம்மிடம் பேசியவர், ''சூதாட்டத்தை

ஈமு 'ஓட்டம்' ஆரம்பம்...

விடத் தீங்கானது இந்த ஒப்பந்தப் பண்ணையம். புதிய முதலீட்டாளர்களிடம் வாங்கும் பணத்தை, பழைய முதலீட்டாளர்களுக்குக் கொடுப்பது மூலமாக ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் அதிகளவு முதலீட்டாளர்களை ஈர்ப்பார்கள்.

ஒரு கட்டத்தில் மொத்தமாக சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார்கள். தங்கக் காசு, டூவீலர், வீட்டு மனை என பத்திரிகைகளிலும், டி.வி-க்களிலும் நடிகர், நடிகைகளை வைத்து இவர்கள் செய்யும் விளம்பரங்களைப் பார்த்து பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.

அடுத்தபடியாக... நாட்டுக்கோழி, வெள்ளாடு, கறவை மாடு, கன்றுக்குட்டி, கொப்பரை, அகர்மரம் வளர்ப்பு... என பலவற்றிலும் இந்த ஒப்பந்தப் பண்ணைய முறையைப் புகுத்தி, பணம் சுருட்டும் வேலை ஆரம்பமாகிஉள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோல சுமார் 2 ஆயிரத்து 500 நிறுவனங்கள் பட்டிதொட்டியெல்லாம் கிளை பரப்பி இருக்கின்றன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் 'பிரைவேட் லிமிடெட்’ கம்பெனிகளாகவேதான் பதிவு செய்துள்ளன. ஆனால், அதற்கான எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய அரசுத்துறைகள் மௌனம் சாதிக்கின்றன.

மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால், ஒரேநாளில் இத்தகைய 'சூதாட்ட' கம்பெனிகளைத் தடை செய்ய முடியும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாவட்ட ஆட்சியர் தொடங்கி, முதல்வர் வரை பல மனுக்கள் கொடுத்தாகி விட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒப்பந்தப் பண்ணை நிறுவனங்களைத் தடை செய்யும்வரை, சட்ட ரீதியான எனது போராட்டம் ஓயாது'' என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு