Published:Updated:

'ஈமு... ஆண்டுக்கு 3 ஆயிரம்தான் கிடைக்கும்!'

Vikatan Correspondent

எண்ணெய் எடுப்பவர் ஒப்புதல் வாக்குமூலம் தூரன் நம்பி

எச்சரிக்கை

##~##

'ஈமுவின் எண்ணெய், கறி எல்லாம் ஏற்றுமதி செய்யப்படுவதால்... அதிகப்படியான லாபம் கிடைக்கிறது’ என்று சொல்லித்தான் விவசாயிகளுக்கு வலை விரிக்கின்றனர். 'உண்மையிலேயே இந்தளவுக்கு வருமானம் கிடைக்கிறதா? என்ற கேள்வி எனக்குள் எழவே... காங்கேயம்-சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை அருகில் ஈமு எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தை நடத்திவரும் செல்வக்குமார் முன்பாக அந்தக் கேள்வியை வைத்தேன். அவர் தந்த பதில் இதுதான்-

''ஒன்பது வருஷமா ஈமு வளர்க்கறேன். மத்தவங்க எப்படி சம்பாதிக்கிறாங்க அப்படிங்கறது எனக்குத் தெரியாது. என்னோட அனுபவத்தை மட்டும் சொல்றேன். ஆரம்பத்துல ஆந்திராவுக்குப் போய் ஜவுளி வியாபாரம்தான் பாத்துட்டிருந்தேன். அப்போ குண்டூர்ல ஈமு பண்ணையைப் பார்த்தேன். ஆசைப்பட்டு 36 ஈமு குஞ்சுகள வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ என்கிட்ட 4 ஆயிரம் ஈமு இருக்கு. இதுவரைக்கும் 2 ஆயிரம் ஈமுவை வெட்டி, எண்ணெய் எடுத்திருக்கோம். ஏற்றுமதியையும் ஆரம்பிச்சுருக்கோம். ஒரு கிலோ எண்ணெய் 2 ஆயிரம் ரூபாய்க்கு சர்வதேச சந்தையில விலை போகுது. இதுவரைக்கும் 8 டன் எண்ணெய் எடுத்து இருக்கோம். சின்ன அளவுல எண்ணெய் எடுக்கறவங்ககிட்ட கிலோ 1,100 ரூபாய் விலையில எண்ணெயை வாங்கியும் விற்பனை செய்றேன்.

'ஈமு... ஆண்டுக்கு 3 ஆயிரம்தான் கிடைக்கும்!'

ரெண்டு வயசான ஈமு கோழியில 10 கிலோவிலிருந்து 15 கிலோ வரைக்கும் கொழுப்பு கிடைக்கும். காய்ச்சி வடிச்சா... ஏழரை கிலோ எண்ணெய் கிடைக்கும். இந்தக் கணக்குல ஒரு ஈமு வளர்த்தா... வருஷத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் லாபம் உறுதியா கிடைக்கும். 20 ஈமு வளர்த்தா... வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் உறுதி. கறியைப் பொறுத்தவரை இப்பத்தான் விற்பனை சூடு பிடிச்சிருக்கு. கிலோ 100 ரூபாய்னு விக்கிறோம். கூடிய சீக்கிரம் கிலோ 350 வரைக்கும் போகும்னு நம்புறோம்.

மொத்தத்துல ஈமு வளர்த்தா... கரும்பு, நெல்லுனு பயிர் செஞ்சு கடன்ல கஷ்டப்படாம கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். அவ்வளவுதான். ஆனா... 'ஈமு வளர்ப்பு மூலமா யானையைப் பிடிக்கலாம்.... எவரெஸ்ட்ட பிடிக்கலாம்'னு சொல்றதெல்லாம் சுத்தப் பொய்'' என்று உறுதியான குரலில் சொன்னார் செல்வக்குமார்.

இதுக்குப் பிறகுமா இந்த உலகம் ஈமுவை நம்பிக்கிட்டே இருக்கப்போகுது?!