Published:Updated:

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

ஜி. பழனிச்சாமி,படங்கள்: க. ரமேஷ்

##~##

 மழைவளம், நிலவளம், மனிதவளம் இவை அனைத்தும் செழிக்கத் தேவையானது மரவளம். இதை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், நாகரிகம் வளர வளர... தன் தேவைக்காக மரங்களை, மரணிக்கச் செய்து வருகிறோம், நாம். அதனால்தான் மாதாமாதம் கிடைத்து வந்த மும்மாரி... இப்போது ஓர் ஆண்டுக்கு மூன்று முறை கிடைத்தாலே பெரிது என்கிற நிலை ஏற்பட்டு வருகிறது! அதன் விளைவு... பூமிப் பந்து சூடாகி, வறட்சி வாட்டி எடுக்கிறது.

இதை மனதில் வைத்துதான், அரசு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து மரங்களின் மகிமையை மக்களுக்கு எடுத்துக்கூறி, மரம் நடுதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, தனி நபர்களின் தோட்டங்களில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் ஒருவராக 40 ஏக்கரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து வேப்ப மரங்களை வளர்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி.

நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மேற்குநாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறது, சத்தியமூர்த்தியின் வேப்பந்தோப்பு. சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மானாவாரி மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடக்க, அதற்கு இடையில் பசுஞ்சோலையாக இருக்கிறது இவரது வேப்பந்தோப்பு. காலைவேளையன்றில் அந்த குளுகுளு வேப்பந்தோப்புக்குச் சென்ற நம்மிடம், இனிமையாகப் பேசத் தொடங்கினார், சத்தியமூர்த்தி.

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

குளுகுளு வேம்பவனம்!

''என்னோட பூர்வீகம் ஈரோடு பக்கத்தில இருக்கிற பஞ்சலிங்கபுரம் கிராமம். அடிப்படையில விவசாயக் குடும்பம்தான். கூடவே, கட்டுமானப் பணிகளும் செய்துட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல தொழில் நிமித்தமா நாமக்கல்லுக்கு வந்துட்டேன். இருந்தாலும், விவசாய ஆர்வம் குறையல.

இயற்கை முறையில நாட்டுமரங்களை வளக்கணும்கிற எண்ணம் இருந்தது. அதனால ஓய்வு நேரங்கள்ல சேவை அமைப்புகளோட சேர்ந்து... பொது இடங்கள்ல மரம் நடுற வேலையைச் செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் நம்மாழ்வார் அய்யாவோட தொடர்பு கிடைச்சது. அவரை வெச்சு இயற்கை விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தினோம். அங்கதான் வேப்பமரத்தினால மனுஷனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், அதனோட மருத்துவக் குணம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்.

நாமக்கல்ல இருக்கற 'ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம்', தனியார் நிலங்கள்ல காடு வளர்க்கறத பத்தி விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அதைத் தொடர்ந்து, விவசாயம் செய்ய நான் வாங்கிப் போட்டிருந்த 40 ஏக்கர் பாசன நிலத்தில முழுக்க வேப்பங்கன்றுகளை நடவு செஞ்சு வளர்த்துட்டு வர்றேன். மொத்தம் 3 ஆயிரத்து 500 மரங்க இருக்கு. நட்டு 6 வருஷமாச்சு. சொட்டுநீர்ப் பாசனம் செய்றதால மரங்கள் 'தளதள’னு இருக்கு பாருங்க'' என்று மரங்களைக் காட்டியவர், தொழில்நுட்ப விஷயங்களுக்குள் புகுந்தார்.

15 அடி இடைவெளி!

''மண்கண்டம் மிகவும் மோசமாக உள்ள இடங்களைத் தவிர பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் வேப்பமரம் வளரும். கோடை உழவு செய்து நிலத்தைக் காய விட்டு, பருவமழை கிடைத்ததும் மீண்டும் இரண்டு உழவு செய்தால், சிறப்பாக இருக்கும்.

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

கோடை உழவு செய்யாதவர்கள் பருவமழைக் காலத்தில் நன்றாக உழுது, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து 15 அடிக்கு 15 அடி இடைவெளிவிட்டு, 2 கன அடி அளவுக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் செம்மண் இரண்டையும் குழியில் பாதி அளவு நிரப்பி, குழியின் மையத்தில் நாற்றுகளை நடவு செய்து, மண்ணைப் போட்டு குழியை மூட வேண்டும்.

அதிக பராமரிப்புத் தேவையில்லை!

வேர்கள் நோயுறாமல் இருக்கவும், செடிகள் ஊக்கமுடன் வளர்வதற்காகவும் நடவு செய்தவுடன் ஒவ்வொரு செடியைச் சுற்றியும்  ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை ஊற்ற வேண்டும். பின்பு, சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு பாசனம் செய்தால் போதும். ஆண்டுக்கொரு முறை செடிகளின் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பக்கக்கிளைகள் பெருகி, சீரான வளர்ச்சி பாதிக்கப்படும். இதைத் தவிர வேறு பராமரிப்புகள் தேவையில்லை.''

தொழில்நுட்ப விஷயங்களைச் சொல்லிய சத்தியமூர்த்தி, தொடர்ந்து எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார்.

ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானம்!

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

''மரங்களை வளர்த்தா... வருமானத்துக்கு வருமானம் ஆச்சு, சமூகத்துக்கும் நல்லது செஞ்ச திருப்தியும் கிடைக்குது. இன்னும் 15 வருஷம் கழிச்சு இந்த மரங்களை வெட்டி விக்கலாம். இன்னிய நிலவரப்படி, ஒரு மரம் 5 ஆயிரம் ரூபாய் விலைனு வெச்சுக்கிட்டாகூட, ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும்.

ஆனாலும் மரத்தை வெட்டுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அதேநேரத்துல வருமானமும் வேணுமே..? என்ன செய்யலாம்னு யோசிச்சு, பல நிபுணருங்ககிட்ட ஆலோசனை செஞ்சேன். அதனடிப்படையில... வனத்தை அழிக்காம, பணத்துக்கு வழி பண்ற ஒரு திட்டத்தைத் தயார் செஞ்சுருக்கேன்'' என் சொல்லி ஆச்சரியமூட்டியவர், தொடர்ந்தார்.  

மதிப்புக் கூட்டினால் போதும்!

''அதாவது, வேப்ப மரத்திலிருந்து மதிப்புக்கூட்டியப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செஞ்சுருக்கேன். வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மரத்துல இருந்து, குறைஞ்சது 3 கிலோ வேப்பமுத்து கிடைக்குது. அதை சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். இதை வெச்சு, மருத்துவ குணம் கொண்ட வேப்பெண்ணெய், அதை மூலப்பொருளா வெச்சு, இயற்கை விவசாயத்துக்கான பூச்சிவிரட்டி தயாரிக்கலாம்னு இருக்கேன். மரத்திலிருந்து கிடைக்கற கோந்தையும் சேகரிச்சு விக்க முடியும். இப்படி மரங்களை வெட்டாமயும் மரங்கள் மூலமா சம்பாதிக்க முடியும். இதை, குடிசைத்தொழில் மாதிரி செஞ்சு இந்தப்பகுதி மக்களுக்கும் நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுக்கற எண்ணமும் இருக்கு'' என்று தன்னுடைய புதுமையானத் திட்டத்தைச் சொன்ன சத்தியமூர்த்தி,

இயற்கை சரணாலயம்!

''40 ஏக்கர்ல விரிஞ்சு கிடக்குற இந்த வேப்பஞ்சோலைக்குள்ள ஒரு முறை போயிட்டு வந்தாலே... புத்துணர்வு கிடைக்கும். தினந்தோறும் வேப்பமரக் காற்றை சுவாசிச்சா நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், மூச்சுக்குழாய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படும். சர்க்கரையின் அளவு குறையும்னு சொல்றாங்க. அதை மனசுல வெச்சு, இந்த வேப்பஞ்சோலைக்குள்ள இயற்கை மருத்துவமனையையும், ஒரு முதியோர் இல்லத்தையும் ஆரம்பிக்கப் போறேன். அதோட இங்க, கிளி, மைனா, குயில், மயில், தேன்சிட்டு, புறா, உள்ளிட்ட நூத்துக்கணக்கான பறவைகளும், முயல், கீரி, உடும்பு, காட்டுப்பூனை மாதிரியான விலங்குகளும் வந்து போயிட்டு இருக்கு. அதுகளுக்காக குடிநீர்த் தொட்டிகளை அங்கங்க வெச்சிருக்கேன். அதனால இது ஒரு சரணாலயமாவும் மாறிடுச்சு'' என்றவர், நிறைவாகச் சொன்னது-

''வனம் இருந்தாதான்... இனம் இருக்கும். மரவளம் குறைஞ்ச நாமக்கல் மாவட்டத்தை மழை வளமுள்ள மாவட்டமா மாத்தணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதை மனசுல வெச்சுதான், நாமக்கல் மாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கத்தை உருவாக்குறதுல முனைப்பா இருக்கேன்.'’

வெல்லட்டும் இந்த முயற்சி!

 தொடர்புக்கு,சத்தியமூர்த்தி,
செல்போன்: 98943-99944.
தில்லைசிவக்குமார்,
செல்போன்: 94432-24921.
கணேஷமூர்த்தி,
செல்போன்: 90951-20888.

மன நிம்மதிக்கு நாட்டு வேம்பு... வருமானத்துக்கு மலைவேம்பு!

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

தற்போது மலைவேம்பு சாகுபடி விவசாயிகளிடம் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் நாட்டு வேம்புக்கும், மலைவேம்புக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி மலைவேம்பு சாகுபடியில் நீண்ட அனுபவம் உடையவரும், நாற்றுப்பண்ணை நடத்தி வருபவருமான ஈரோடு மாவட்டம் கணேஷமூர்த்தியிடம் கேட்டோம்.

''நாட்டு வேம்பு நம் மண்ணின் மரம். காடு, மேடு, குளம், குட்டை போன்ற இடங்களில் சுயம்புவாக வளர்ந்து... நிழல் தந்து, ஆரோக்கியக் காற்று தந்து, வீடு கட்ட உபகரணங்கள் தந்து, இன்று வரை உதவிக் கொண்டிருக்கிற பாரம்பரிய மரம் இந்த வேம்பு என்பது பெருமையான விஷயம். நாட்டு வேம்பைப் பொறுத்தவரை நடவு செய்த

20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சேகு ஏறி, முழுமையான மரமாக மாறும். அப்பொழுதுதான் வருமானமும் கிடைக்கும். 'இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நிழல் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 கிலோ விதை கிடைக்கிறது. அதுவே போதும்’ என நினைப்பவர்களும், 'வருமானத்தைப் பற்றியும் கவலையில்லை. எப்போது வேண்டுமானாலும் வருமானம் கிடைக்கலாம்’ என்று நினைப்பவர்களும் நாட்டு வேம்பை சாகுபடி செய்யலாம்.

ஆனால், 'விரைவில் வருமானம் கிடைக்க வேண்டும்’ என நினைப்பவர்கள் மலைவேம்பை சாகுபடி செய்வதுதான் நல்லது. மரப்பயிர்களிலேயே குறுகிய காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய பயிர்களில் மலைவேம்பும் ஒன்று. நடவு செய்த ஆறாவது வருடத்தில் இருந்தே வெட்டி விற்பனை செய்யலாம். அதிக பட்சம் 12 ஆண்டுகள் வரை வளர்த்து விற்பனை செய்தால் மரம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது. 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடவு செய்யலாம். 3 வருடத்தில் தீக்குச்சிக்கும் 5 வருடத்தில் பிளைவுட் பயன்பாட்டுக்கும் வெட்டியது போக... தகுந்த இடைவெளியில் வளர்ந்து நிற்கும் சேகு ஏறிய மரங்களை அனைத்து மரப்பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்தலாம். குறைந்தபட்சம் 12 வருட முடிவில் ஏக்கருக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

நாட்டுவேம்பைப் பொருத்தவரை அதிக தண்ணீர் தேவை இல்லை. குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மழை நீரே போதுமானது. பராமரிப்பும் பெரிதாக தேவைப்படாது. ஆனால், மலைவேம்புக்குப் பராமரிப்பு மிகவும் அவசியம். தண்ணீர் மிகவும் முக்கியம். மழைக்காலம் தவிர்த்து மற்ற நாட்களில் மரம் ஒன்றுக்கு வாரம் 40 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மரங்கள் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியைக் கொடுக்கும். தகுந்த இடைவெளியில் இடுபொருள் மேலாண்மையும் அவசியம். மொத்ததில் நாட்டு வேம்பு மனதுக்கு உகந்தது. மலைவேம்பு வருமானத்துக்குச் சிறந்தது'' என்றார், கணேஷமூர்த்தி.

நம்பிக்கை தரும் நாமக்கல்!

வெகுமதி கொடுக்கும் வேம்பு !

நாமக்கல் மாவட்டத்தில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனத்தின் செயலாளர் தில்லை சிவக்குமார் பேசும்போது, ''நாட்டில் 33% வனப்பரப்பு இருக்க வேண்டும் எனச் சொல்கிறது வனச்சட்டம். ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் 16.4% காடுகள்தான் உள்ளன. இதை மனதில் கொண்டுதான் மாவட்ட நிர்வாகம் இதுவரை 16 லட்சம் மரக்கன்றுகளை பல்வேறு பொதுஇடங்களில் நட்டு, பராமரித்து வருகிறது. இன்னும் இந்த மரப்பயிர்களின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் தனியார் நிலங்களில் வனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதன் அடிப்படையில் சத்தியமூர்த்தி போன்றோர் தங்களது பட்டா நிலங்களிலும் மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டம் 33% இலக்கை அடைந்து விடும்'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு