Published:Updated:

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

தொழுமாடு வளர்க்கும் பாரம்பரிய கிராமம் !இரா. முத்துநாகுபடங்கள்: சக்திஅருணகிரி

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

தொழுமாடு வளர்க்கும் பாரம்பரிய கிராமம் !இரா. முத்துநாகுபடங்கள்: சக்திஅருணகிரி

Published:Updated:

பாரம்பரியம்

##~##

விவசாயத்தில் எந்திரங்களின் பயன்பாடு வரத் தொடங்கியதில் இருந்தே... பாரம்பரிய முறைகள் பலவும் வழக்கொழியத் தொடங்கி விட்டன. குறிப்பாக, டிராக்டரின் வருகை... மாடுகளின் அழிவைத் தொடங்கி வைத்துவிட்டதைச் சொல்லலாம். மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதால், விவசாயத்தின் அடிநாதமான தொழுவுரமும் தொலைந்து வருகிறது. 'ஒரு காலத்தில் தொழுவுரம் செழுமையாக்கிய நிலங்களை எல்லாம், களர் நிலங்களாக மாற்றிவிட்டன ரசாயன உரங்கள். இதில் மாற்றம் தேவை. தொழுவுரங்களைப் பயன்படுத்துங்கள்' என்று அரசாங்கத் தரப்பிலிருந்தும்... அதிகாரிகள் மட்டத்திலிருந்தும்கூட மேடைகளில் முழங்குகிறார்கள். ஆனால், 'அவையெல்லாம் செயல்வடிவம் பெறுவது எப்போது?' என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தகைய மோசமான நிலையிலும், நடமாடும் உரத் தொழிற்சாலைகளான தொழுமாடுகள்  வளர்ப்பு, பாரம்பரியம் மாறாத கிராமங்கள் சிலவற்றில் நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருப்பது... பாராட்டக் கூடிய செய்திதானே!

அப்படி மண்மணம் மாறாத ஓர் அழகிய கிராமம்... தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பொட்டிபுரம். இங்கு மாட்டுத்தொழுவம் இல்லாத வீடுகளே இல்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! பொழுது புலர்ந்ததுமே... 'என்ன காரி... ராத்திரி நல்லா தூங்கலையா?', 'ஏய்... செவல கன்னுக்கு பால் கொடுக்காம உதைக்கிறீயா..?', 'கால்ல கட்டுப்போட்டாத்தேன் நீ அடங்குவே...’ என மாடுகளிடம் பேசிக்கொண்டே சாணியை அள்ளித் தொழுவத்தை சுத்தப்படுத்துவது, பால் கறப்பது என்பதெல்லாம் இக்கிராமத்தில் அன்றாடக் காட்சிகள் !

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வருமானம் !

மாடுகளை, மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுகொண்டிருந்த முத்தையாவிடம் பேச்சு கொடுத்தபோது... ''முன்னயெல்லாம் எங்க மாடுககிட்ட இருந்து கிடைக்கிற தொழுவுரத்தை, எங்க நிலத்துக்கு மட்டுமே போட்டுக்குவோம். இப்போ... ஊரு உலகத்துல ஆடு, மாடுக எண்ணிக்கை குறைஞ்சுட்டதால, தொழுவுரத்துக்கு ரொம்பத் தட்டுப்பாடு. அதனால் வெளிஆளுங்களும் விலை கொடுத்து வாங்கறாங்க. மாடுக மூலமா வருசத்துக்கு முப்பது லோடு எரு கிடைக்குது. ஒரு லோடு மூவாயிரம் ரூபாய்னு விக்கிறேன். குறைச்சு வெச்சாலும் இதுலயே வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கிடைச்சுடுது. அதுபோக கன்னுக்குட்டிகளை விக்கிறதுல அம்பதாயிரம் ரூபாய் கிடைக்குது. கறக்கற பால் மொத்தமும் வீட்டுத் தேவைக்குத்தான். இவ்வளவு வருமானம் கிடைக்குது. ஆனாலும், இப்ப இருக்குற இளந்தாரிங்க... மாடு மேய்க்கறத அசிங்கமா நினைக்கறாங்க'' என்று வருத்தப்பட்டார்.

''காட்டுக்குள்ள தொழுமாடு மேய்க்க ஃபாரஸ்ட்காரங்க விடமாட்டேங்கறாங்க. ஊருக்கு ஊரு பொதுவா இருந்த மேய்ச்சல் தரிசு நிலங்களையும் ஆளாளுக்குப் பட்டா போட்டு வித்துப் போட்டானுங்க. இந்த நிலையில எங்கிட்டு போய் மாடுகள மேய்க்கறது?'' என்று சீறிய பெரியவர் பாப்பி நாயக்கர்,

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

''கை வளர்ப்பா ஆடு, மாடு மேய்க்கறதே பெரும்பாடா இருக்குது. அதனாலதான் தொழுமாடு வளர்க்கறது கொறைஞ்சு போச்சு. இந்தப் பகுதியில தொழுமாடு இருக்கறது எங்க ஊருல மட்டும்தான். முன்னயெல்லாம் ஆடு, மாடுகள வெச்சுத்தான் ஒருத்தரோட செல்வாக்கை முடிவு பண்ணுவாங்க. அதனால போட்டிப் போட்டு மாடு வளர்த்தாங்க. இப்ப அந்த அளவுகோல் மாறிடுச்சு. இருந்தாலும், எங்க சாதிக்காரங்க மாடுகள தெய்வமா மதிக்கறதாலதான் 'எத்துராவுலு’ (மாடு) அப்படினு புள்ளைங்களுக்கே இங்க பேரு வெக்குற வழக்கமிருக்கு.

புலியை விரட்டும் மணி !

'தொழு'ங்கற சொல்லுக்கு, 'விளைநிலத்தில் (மருத நிலம்) மாடுகளை வளர்த்தல்’னு அர்த்தம். ஆனி மாசத்துல ஒரும்பு (மேய்ச்சல் கிடைக்காத காலம்) வெட்டை துவங்கும். அப்ப மாட்ட ஓட்டிக்கிட்டு மலைக்குள்ள தொழு போட்டு, மழைக்காலம் துவங்குற புரட்டாசியில கீழ இறங்குவோம். மலைக்குப் போகும்போது சாப்பாட்டுக்கு படி கட்டிட்டு (அரிசி) போவோம். தொழுவத்தில இருக்கற மாடுகளை அடிச்சு சாப்பிடுறதுக்கு புலிகூட வரும். ஒரு ஃபர்லாங் தூரத்துல புலி வரும்போதே கவுச்சி வாடை அடிக்கும். இந்த வாடையை மனுஷனால உணர முடியாது. ஆனா, மாடுக உணர்ந்து 'திமுதிமு’னு எந்திருக்கும். புலி வருதுங்கறத புரிஞ்சுகிட்டு, 'ஆய்... ஊய்...’ னு நாம சத்தம் போட்டா... அது பயந்துகிட்டு ஓடிடும். கூட்டமா மேயுற மாடுககிட்ட புலி வராது. மந்தையில சேராம ஒத்தையில மேயுற மாடுகளைத்தான் புலி அடிக்கும். அந்த மாதிரி ஒத்தை மாடுக கழுத்துல மணி கட்டி விட்டுருவோம். மணி சத்தத்துக்கும் புலி அண்டாது'' என்று விளக்கங்களைச் சொன்ன பாப்பி நாயக்கர்,

சாணத்தில் இருக்கு சகலம் !

''மாடுகளைப் பொறுத்தவரை நோய், நொடி இல்லாம பாத்துக்கறது முக்கியம். தெனமும் மாடு கெட்டியா சாணம் போடுதா, 'பொதபொத’னு போடுதா, கழிச்சல் போகுதானு பாக்கணும். சாணத்துல நாத்தம் இருக்கானு பாக்கணும். சாணம் போடுற விதத்தைப் பாத்தாலே என்ன நோய்னு தெரிஞ்சுக்கிறலாம்.

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

ஏன்னா தரையில மேய்ஞ்சுகிட்டு இருக்கிற மாடுக திடீர்னு மலையில் மேயும்போது இப்படிப்பட்ட சீக்கெல்லாம் வரும். இதை கவனிக்கலேன்னா மாடு தொழுவம் வந்து சேராது'' என்று சொன்னதோடு, நோய்கள் மற்றும் தீர்வுகளையும் சொன்னார்.  

ஊர்காலி மாடு... கொண்டி மாடு...  

அடுத்து நம்மிடம் பேசிய பெரியவர் ஜங்காள் நாயக்கர், ''தோட்ட வேலைக்குப் பயன்படுத்துற மாடுக கோடைக் காலத்துல வீட்டுல சும்மா இருக்கும். அந்த மாடுகளை 'ஊர்க்காலி மாடு’னு சொல்வாங்க. ஊர்ல இருக்கற இந்த மாடுகளை எல்லாம் சேர்த்து, ஒருத்தர் மேய்ப்பாரு. அவரை 'ஊர்க்காலி மாடு மேய்ப்பவர்’னு சொல்வாங்க. இந்த மாடுக ஒண்ணுக்கொண்ணு முட்டிக்கிட்டு சண்டை போடும். அதனால, இதுகள மேய்க்கறது கடுசான வேலை.

தொழு மாடுகள்ல ஒண்ணு ரெண்டு அடங்காம ஊருக்குள்ள ஓடி வந்துடும். அந்த மாதிரி மாடுக கழுத்தில் கொண்டியை (கட்டை) கட்டி விடுவாங்க. இந்த கொண்டி, நடக்கும்போது கிட்டி போட்டு இடிச்சுகிட்டு மாடுகளை ஓடவிடாது.

அதனால இந்த மாடுகளை 'கொண்டி மாடு’னு சொல்லுவாங்க. தை மாச பிறப்பன்னைக்கு தொழுவுல காளைக்கன்னு போட்டா... அது சாமிக்குத்தான். அந்தக் காளையை 'பூச்சிக்காளை', 'சாமிக்காளை’னு சொல்வோம்.

இதையே தெலுங்கில 'சலேஎத்து’னு சொல்வாங்க. கிடேறிகளை சினைக்குப் போட இந்த சாமிகாளைகதான் பயன்படும்'' என்று மாடுகள் பற்றிய சுவாரஸ்யம் மற்றும் பயனுள்ளத் தகவல்களைப் பகிர்ந்தார்!

புலிக்குளம் மாடுகளுக்கு புதிய அங்கீகாரம்!

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாரம்பரிய ரக மாடுகளைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்க தேசிய கால்நடைத்துறை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், 'தொழுமாடுகளை தனி இனமாக அறிவிக்க வேண்டும்’ என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், புலிக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட தொழுமாடுகளை, 'புலிக்குளம் மாடு’ என்று தனி இனமாக அறிவித்து, தொழுமாடு வளர்ப்போரை தற்போது பெருமைபடுத்தியுள்ளது, தேசிய கால்நடைத்துறை!

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

இதைப் பற்றி பெருமையோடு பேசும் மதுரை, 'சேவா டிரஸ்ட்' செயலாளர் விவேகானந்தன், ''கிராமங்களில் கள ஆய்வு செய்தபோது உசிலம்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மேய்த்து வந்த தொழுமாடு ஓங்குதாங்காக இருந்தது. பொதுவாக, தொழுமாடுகள் இப்படி இருக்காது. இதைப்பற்றி விசாரித்தபோது 'இவை புலிக்குளம் மாடுகள்... இந்த ரகத்தோடு பிற காளைகளைச்

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

சேர்க்க மாட்டோம்’ என்று சொன்னார்கள். இந்த மாடுகள், காரி மற்றும் மயிலை கலந்த நிறத்தில் மட்டுமே உள்ளன. வளர்ந்த மாடுகளில் கால், வால் ஆகியவை ஒரே அளவில் இருக்கின்றன. இதுபோன்று இன்னும் சில சிறப்புகளையும் தொகுத்து, ஹரியானாவில் உள்ள மத்திய கால்நடை மரபியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பினேன்.

அம்மையத்தைச் சேர்ந்த சில அலுவலர்கள் தமிழகம் வந்து, நான்கு மாதங்கள் தங்கியிருந்து, புலிக்குளம் மாடுகளின் குணம், பண்புகளை ஆய்வு செய்ததோடு, ரத்த மாதிரிகளையும் எடுத்துச் சென்றார்கள். அடுத்தக் கட்டமாக இந்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் தமிழகம் வந்திருந்த அந்த அமைப்பின் அதிகாரிகள், இம்மாடுகளின் விந்துவைச் சேகரித்துச் சென்று ஆய்வுகளுக்குட்படுத்திவிட்டு, 'புலிக்குளம் மாடுகள், இனி தனி ரகமாக அறியப்படும்' என்று தற்போது அறிவித்துள்ளனர். இந்த ரக மாடுகள், சிவகங்கை மாவட்டத்தில் பொட்டல்குளம், மைக்குடி; மதுரை மாவட்டத்தில் தென்பழஞ்சி, வாடிப்பட்டி, மணப்பட்டி; கரூர் அருகே குளித்தலை, வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் இருக்கின்றன'' என்று சொன்ன விவேகானந்தன், நிறைவாக,

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

'ஒசூர், கொற்கை ஆகிய இடங்களில் மாட்டுப்பண்ணைகளுக்கு 500 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. அதைப்போல புலிக்குளம் மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கித்தர வேண்டும்'' என்ற கோரிக்கையையும்  வைத்தார்.

கை கொடுக்கும் கை வைத்தியம் !

நடமாடும் உரத் தொழிற்சாலைகள்...

பாப்பி நாயக்கர் சொன்ன நோய்கள் மற்றும் தீர்வுகள் இதோ-

''மலைச்சரிவுல போறப்ப சில நேரத்துல மாடுகளுக்குக் கால் பிசகிறும். அதுக்கு பொத்தக்கள்ளி மரத்துப் பாலைப் பிடிச்சு, அடிபட்ட இடத்துல தடவி, புத்து மண்ணைத் தூவி விட்டா... காலுக்கு வந்த பிரச்னை சரியாகிடும். கால் முடமானா (எலும்பு முறிதல்)... புத்து மண்ணு, இல்லைனா... ஆட்டுப்புழுக்கையை தண்ணில போட்டு, நல்லா கொதிக்க வெக்கணும். பிறகு, அதை எடுத்து ஒரு துணியில போட்டு,  மூங்கில் தப்பையைச் சேர்த்து வெச்சு, எலும்பு முறிஞ்ச இடத்தில கட்டுப்போட்டா... ஒரு வாரத்துல குணமாகிடும். வாய் கானம் (கோமாரி)  வந்தால் கருவாடு, குங்குலியம் இது ரெண்டையும் தீயில பொசுக்கி, வாடை பிடிக்க விட்டா... சரியாகிடும்.

குந்து (காய்ச்சல்) வந்தா... குண்டுமணிச் செடியைப் பிடுங்கி, கழுத்துல போட்டு விட்டு... கொல்லம் கோவைக் கிழங்கத் தோண்டி, அதை இடிச்சு வேப்பெண்ணைக் கலந்து ஒரு மூங்கில் குழாயை வெச்சு , வாயில் ஊத்தி விட்டா...ஒரு நாழிகையில சரியாகிடும். கழிச்சல் வந்துடுச்சுனா... கல்மூங்கில் கொழுந்து, பப்படகம் தளை, யான நெருஞ்சி இலை இது மூணையும் இடிச்சு சாறு எடுத்து, வாயில ஊத்தி விட்டா போதும். மாட்டுக்கு தகை (இருமல்), வயித்துல புண்ணு இருந்தாலும் இந்த சாறு மூலமாவே சரியாகிடும். கொம்புல ஓட்டை விழுந்தா... மனுசன் தலைமுடிய எடுத்து, சின்னதாக சுருட்டி, வேப்பெண்ணையில முக்கி, ஓட்டையில திணிச்சி வெச்சா... நாளாவட்டத்துல அந்த ஓட்டை அடைபட்டுடும். வாலில் அரணை கடி (அழுகி முடி உதிர்தல்) இருந்தா, வேப்பெண்ணையைக் கொதிக்க வெச்சு, முக்கால் சூடு இருக்கிறப்ப, , அதுல பாதிக்கப்பட்ட வாலை முக்கி எடுத்தா சரியாகிடும். கால் குளம்புல புண்ணு இருந்தா... செம்மண் சகதியில நடக்க விட்டாலே, போதும் முழுசா குணம் கிடைச்சுடும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism