Published:Updated:

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

ஊக்கம் கொடுக்கும் ஊடுபயிர்கள் !காசி.வேம்பையன், படங்கள் : எஸ்.தேவராஜன்

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

ஊக்கம் கொடுக்கும் ஊடுபயிர்கள் !காசி.வேம்பையன், படங்கள் : எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

''பெத்தப் பிள்ளை கைவிட்டாலும் விடலாம், நட்டப் பிள்ளைகளான மரங்கள், கைவிடாது’னு சொல்லுவாங்க. அந்த சொலவடைக்கு உதாரணம் என் வாழ்க்கைதாங்க. இந்த 75 வயசுலயும் யாரோட தயவுமில்லாம, தன்னம்பிக்கையோட வாழ்றேன்னா அதுக்குக் காரணம் நான் நட்டு வெச்ச மரங்கதான்''

-நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார், விழுப்புரம் மாவட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழவில்லா வேளாண்மை மூலம்... தென்னை, மா, எலுமிச்சை, தேக்கு, பூவரசு, வில்வம் போன்ற மர வகைகளுடன் வாழை, கறிவேப்பிலை, கீரை போன்ற பயிர்கள் மற்றும் மூலிகைகளையும் வளர்த்து

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

நிறைவான வருமானம் பார்த்து வருகிறார், குப்புசாமி.

சிறையில் உதித்த சிந்தனை!

''எனக்கு சொந்த ஊர் செஞ்சி பக்கத்துல இருக்குற சங்கீதமங்கலம். நெசவுதான் பரம்பரைத் தொழில். நான் படிச்சு அரசாங்க வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். சூழ்நிலை காரணமா 10-ம் வகுப்போட நிறுத்த வேண்டியதா போச்சு. நெசவுத் தொழில்ல நஷ்டம் வரவும், கெங்காவரத்துல இருக்குற பாட்டி வீட்டுக்கு வந்துட்டோம். அங்கதான் விவசாயம் எனக்கு அறிமுகமாச்சு. பாட்டிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்துல, விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். தம்பிகளுக்குக் கல்யாணம் முடிஞ்ச பிறகு... பாகப் பிரிவினையில, ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனையைக் கேட்டு... தீவிரமா நெல் சாகுபடி செஞ்சேன். பெருத்த நஷ்டம்தான் மிச்சமாச்சு. ஆனாலும், விவசாயத்தை விடறதுக்கு மனசு வரலை. இலவச மின்சாரம் கேட்டு, 80-ம் வருஷம் நடந்த போராட்டத்துல கலந்துகிட்டு... கடலூர் மாவட்டம், 'கேப்பர்மலை’ ஜெயிலுக்குப் போனேன். சிறையில இருக்குறப்ப, தினமும் மாலை நேரங்கள்ல விவசாயிங்க கூடிப் பேசுவோம். அப்ப கன்னியாகுமரியைச் சேர்ந்த முத்துதாசன்கிற நண்பர், 'நெல்லைவிட, தென்னை சாகுபடியில வருமானம் அதிகம்’னு சொன்னாரு. அது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.

உணவு கொடுத்த ஊடுபயிர்!

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

சிறையில் இருந்து வெளியில வந்ததும் முதல் வேலையா 12 தென்னை மரங்களை நட்டு, ஊடுபயிரா முல்லைச் செடிகளை நட்டேன். கடுமையான வறட்சியிலயும் தினம் ரெண்டு கிலோ பூ கிடைச்சுது. அதை வெச்சுதான் ஜீவனம் ஓடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு ஏக்கர்லயும் மொத்தம் 130 தென்னங்கன்றுகளை நட்டுட்டேன். கூடவே, நாலு தென்ன மரங்களுக்கு இடையில மா, சப்போட்டா, எலுமிச்சை, வாழை, தேக்கு, பூவரசு மரங்கள்...னு நட்டேன்.  

இயற்கை தந்த இனிய மாற்றம்!

இந்த நிலையில... 'மதுரை சேவா சங்கம் மூலமா குஜராத் 'பாஸ்கர் சாவே’ பண்ணையைப் பார்வையிடுற வாய்ப்பு கிடைச்சுது. எனக்குள்ள பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது, அந்தப் பண்ணைதான். 'எந்த இடுபொருளும் வெளியில் இருந்து தோட்டத்துக்குள்ள வரக்கூடாது, விளைஞ்ச பொருள் மட்டும்தான் வெளியில் போகணும்’னு அங்க சொல்லிக் கொடுத்தாங்க. அதுபடி உடனே, உழவு செய்றதை நிறுத்தினேன். மரங்களுக்கு மூடாக்குப் போட்டேன். முழுக்க இயற்கை விவசாய முறைக்கு மாறினதும் செலவு குறைஞ்சு, வருமானம் கூடிடுச்சு. அந்த வருமானத்துல, நாலு பொண்ணுகளுக்கும் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு, எந்தக் கடனும் இல்லாம வாழ்ந்துக்கிட்டிருக்கேன்’' என்று  நிம்மதி பெருமூச்சுவிட்ட குப்புசாமி, தொடர்ந்தார்.

வெயில்படும் இடமெல்லாம் பயிர்கள்..!

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

''இந்த ரெண்டு ஏக்கர்ல 130 தென்னை, 20 எலுமிச்சை, 10 சப்போட்டா, 20 மா, 5 பலா, 100 கறிவேப்பிலை, 20 பூவரசு, 20 தேக்கு, ஒரு பப்ளிமாஸ், 4 பாக்கு, ஒரு ராம் சீத்தா, விளாமரம், வில்வம், ஒரு திருவாட்சி, தவசிக்கீரைனு தோட்டத்தில வெயில்படுற இடங்கள்ல எல்லாம் பயிர்கள்தான் இருக்கு.

தழைச்சத்தைச் சேர்க்கும் கரையான்!

இந்த நிலத்துல 14 வருஷமா உழறதேயில்லை. அதேமாதிரி, நேரடிப் பாசனமும் செய்றதில்லை. இடையிடையே எடுத்திருக்குற வாய்க்கால்கள்லதான் தண்ணி பாய்ச்சுறேன். அதனால, மண்புழுவும், கரையானும் அதிகமா இருக்கு. தோட்டத்தில கிடைக்குற கழிவுகளை மரத்தை சுத்தி மூடாக்காக போட்டுட்டா... கரையான்கள் அதை தின்னு மட்க வெச்சுடும். சில மரங்களோட வேர் பகுதியில கரையான் புத்துக்கட்டி, கிட்டதட்ட 100 அடி ஆழத்துக்கு துளை போடும். அந்தத் துளை வழியா அடிப்பகுதி வரை காத்து போயிட்டு வருது. இதனால காத்துல இருக்குற 80% தழைச்சத்தை நுண்ணுயிரிகள் கிரகிச்சு மண்ணுக்கு வளம் சேர்க்குது. என்னோட அனுபவத்துல கரையான்கள் விவசாயிகளுக்கு அதிக நன்மை செய்யுது. கரையான்கள் மக்காத பொருளையும் தின்னு மட்க வெச்சுடும்.

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

காடுகள்ல இருக்குற எந்தச் செடியும் நீர் இல்லாம பட்டுப்போறது இல்ல. அதுக்குக் காரணம் மேல் மட்டத்தில் காய்ஞ்சு கிடக்குற சருகுகளை திங்க வர்ற கரையான்கள், அடிமட்டத்துல இருக்குற நீரையும் மண்ணோட கொண்டுவர்றதுதான். கரையான், நிலத்தை அதிக தூரம் துளை இடுறதால, மழை பெய்யும்போது துளையோட எல்லை வரைக்கும் தண்ணி சேமிக்கப்படுது. அதனால பக்கத்து கிணறுகள்ல நீர்மட்டம் உயருது'' என்ற குப்புசாமி நிறைவாக,

நிறைவான வருமானம்...நிம்மதியான வாழ்க்கை...

''இந்த ரெண்டு ஏக்கர் தென்னை, ஊடுபயிர்கள் மூலமா வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல கிடைக்குது. எனக்கு இந்த வருமானமே போதுமானதா இருக்கறதால என் பிள்ளைகளோட உதவியை எதிர்பார்க்கறதில்ல'' என்றார், சந்தோஷமாக!

தொடர்புக்கு,
குப்புசாமி, செல்போன்: 95858-54277.

குறைவில்லா வெகுமானம்! ஒரு லட்சம் வருமானம்... குப்புசாமி சொல்லும் கணக்கு!

ஒரு தென்னை மரம் மூலமாக ஆண்டுக்கு சராசரியாக 140 காய்கள். 130 மரத்துக்கு 18 ஆயிரத்து 200 காய்கள். 5 ஆயிரம் காய்களை கொப்பரைக்குக் காய வைத்தால்... 500 கிலோ பருப்பு கிடைக்கும். இதன் மூலமாக 250 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 100 ரூபாய் வீதம், 250 லிட்டருக்கு 25 ஆயிரம் ரூபாய்.

மீதம் உள்ள 13 ஆயிரத்து 200 காய்களை அப்படியே விற்பனை செய்வதன் மூலமாக ஒரு தேங்காய் 3 ரூபாய் என்கிற கணக்குக்கே... 39 ஆயிரத்து 600 ரூபாய் கிடைக்கிறது. மட்டைகளைக் கீற்றாக மாற்றி விற்பதன் மூலம் 12 ஆயிரம் ரூபாய் ஆகக்கூடி, தென்னை மூலமாக மட்டுமே ஆண்டுக்கு 76 ஆயிரத்து 600 ரூபாய் கிடைக்கிறது. எலுமிச்சை, மா, கறிவேப்பிலை, வாழை, சப்போட்டா மூலமாக ஆண்டுக்கு 26 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஆகமொத்தம், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism