Published:Updated:

3 மாதம்...60 சென்ட்...ரூ.50 ஆயிரம் !

கலக்கும் காய்கறி சாகுபடி...காசி. வேம்பையன்,படங்கள்: பா. கந்தகுமார்

3 மாதம்...60 சென்ட்...ரூ.50 ஆயிரம் !

கலக்கும் காய்கறி சாகுபடி...காசி. வேம்பையன்,படங்கள்: பா. கந்தகுமார்

Published:Updated:
##~##

'வாழை, கரும்பு... போன்றவை அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களாக இருந்தாலும், அவற்றில் இருந்து வருமானம் ஈட்ட நெடுநாட்கள் பிடிக்கும். குறைவான நாட்களில் வருமானம் ஈட்டக்கூடிய காய்கறிப் பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்தால்... தொடர் வருமானம் மூலமே கணிசமான லாபத்தை ஈட்டிவிடலாம்!' என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கும் விவசாயிகள் பலரும்... சிறிது இடம் ஒதுக்கி, காய்கறிகளையும் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம், சின்னபுஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன்.

தன்னுடைய காய்கறித் தோட்டத்தில் பராமரிப்புப் பணியிலிருந்த கிருபாகரனை சந்தித்தோம். ''92-ம் வருஷம் 'டீச்சர் டிரெயினிங்’ முடிச்சு, வேலை கிடைக்காம பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன். பிறகு, அப்பாகூட சேர்ந்து விவசாயத்தைப் பாத்துக்கிட்டே அண்ணாமலை பல்கலைக்கழகத்துல பி.லிட், எம்.ஏ, எம்.ஃபில்னு படிச்சேன். இருந்தாலும்... இப்போ படிச்ச படிப்பைவிட, விவசாயம்தான் எனக்குத் துணை நிக்குது. ஆரம்பத்துல முழுவீச்சுல விவசாயம் பார்த்தாலும்... ரசாயன விவசாயம்கறதால, செலவுதான் கூடிக்கிட்டே போச்சே தவிர, பெரியளவுல லாபமும் இல்லை. இதுல தண்ணி பிரச்னை வேற. விவசாயத்துல கிடைச்ச வருமானத்துல மூணு கிணறு வெட்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க...'' என்று பெருமூச்சுவிட்டவர், சற்று இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செலவைக் குறைத்த இயற்கை !

''செலவைக் குறைக்கறதுக்கான வழிகளை யோசிச்சப்பதான், இயற்கை விவசாயத்துக்கு மாறலாம்னு தோணுச்சு. அதுக்கான பயிற்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து 'பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்சேன். அதுல வந்த கட்டுரைகள், இயற்கை விவசாயத்துப் பக்கம் திரும்பறதுக்கு எனக்கு உதவியா இருந்துச்சு. இயற்கை விவசாயத்துல இறங்கினதும் முதல் வேலையா ஆட்டு எரு, மாட்டு எருனு வாங்கி நிலத்துல கொட்டி, கொஞ்சம் கொஞ்சமா நிலத்தை இயற்கை விவசாய முறைக்கு மாத்தினேன். ஆரம்பத்துல மகசூல் குறைவாத்தான் இருந்துச்சு. போகப்போக லாபம் அதிகமாயிடுச்சு... செலவோ, குறைஞ்சுடுச்சு.

3 மாதம்...60 சென்ட்...ரூ.50 ஆயிரம் !

நாலரை ஏக்கர் சொந்த நிலம், நாலரை ஏக்கர் குத்தகை நிலம்னு மொத்தம் 9 ஏக்கர்ல விவசாயம் பார்க்கிறேன். 6 ஏக்கர்ல வாழை (ரஸ்தாளி, பூவன், செவ்வாழை, மொந்தன்); ஒரு ஏக்கர்ல மக்காச்சோளம்; ஒரு ஏக்கர்ல நெல்; 40 சென்ட் நிலத்துல தீவனப்புல், தேக்கு, தென்னை மரங்கள்; 30 சென்ட் நிலத்துல வெண்டை; 15 சென்ட் நிலத்துல கொத்தவரை; 15 சென்ட் நிலத்துல செடி அவரைனு சாகுபடி செஞ்சுட்டிருக்கேன். வாழையில வருஷத்துக்கு ஒரு தடவைதான் வருமானம். அதுவரைக்கும் வீட்டுச் செலவு, சாகுபடிச் செலவுக்குக் கை கொடுக்கறது காய்கறிகள்தான்'' என்று சொல்லும் கிருபாகரன், காய்கறி சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

பட்டம் பார்க்கத் தேவையில்லை !

''வெண்டையின் வயது 90 முதல் 100 நாட்கள்... கொத்தவரையின் வயது 90 நாட்கள்... செடி அவரையின் வயது 120 நாட்கள். இவை மூன்றுமே அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றவைதான். தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலுமே இந்த மூன்றையும் பயிர் செய்யலாம். நிலத்தை இரண்டு சால் டிராக்டர் உழவு செய்து... ஒரு வாரம் கழித்து பவர் டில்லரில் இரண்டு சால் உழவு செய்து சமப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு அடி அகலத்தில் பார் பிடித்து, பாரின் மையப்பகுதியில் ஒரு அடி இடைவெளியில் குத்துக்கு இண்டு விதை வீதம்  விதைக்க வேண்டும் (30 சென்ட் நிலத்துக்கு 600 கிராம் வெண்டை விதைகள்; 15 சென்ட் நிலத்துக்கு 250 கிராம் கொத்தவரை விதைகள்; 15 சென்ட் நிலத்துக்கு 500 கிராம் செடி அவரை விதை தேவைப்படும்).

வருமுன் காக்க பஞ்சகவ்யா !

மூன்றாம் நாளில் உயிர்த்தண்ணீரும், மண் ஈரத்தைப் பொறுத்து வாரம் ஒரு தண்ணீரும் கொடுத்தால் போதும். விதைத்த 4-ம் நாளில் வெண்டை மற்றும் செடி அவரையும், 7-ம் நாளில் கொத்தவரையும் முளைக்கத் தொடங்கும். 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் 250 கிராம் வீதம் மண்புழு உரம் வைத்து மண் அணைக்க வேண்டும். வாரம் ஒரு முறை, டேங்க்குக்கு (12 லிட்டர்) 250 மில்லி பஞ்சகவ்யா, 50 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளித்து வந்தால் பூச்சி, நோய் தாக்குதல்கள் இருக்காது. 60 சென்ட் நிலத்துக்கு 3 டேங்க் அளவுக்குத் தெளிக்க வேண்டிஇருக்கும். 

3 மாதம்...60 சென்ட்...ரூ.50 ஆயிரம் !

2 டன் வெண்டி !  

வெண்டி 40-ம் நாளில் பூவெடுத்து, 45-ம் நாளில் பறிப்புக்கு வந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சராசரியாக, 20 முறை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 100 கிலோ வீதம், 20 பறிப்புகள் மூலம் 2 ஆயிரம் கிலோ வெண்டி கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் விலை கிடைக்கிறது. இந்தக் கணக்கில் வெண்டி மூலமாக மூன்று மாதங்களில் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

900 கிலோ கொத்தவரை !

கொத்தவரை 40-ம் நாளில் பூவெடுத்து, 45-ம் நாளில் பறிப்புக்கு வந்து விடும். நான்கு நாட்களுக்கு ஒரு பறிப்பு என, சராசரியாக, 15 பறிப்புகள் செய்யலாம். ஒரு பறிப்புக்கு 60 கிலோ வீதம், 15 பறிப்புகள் மூலம் 900 கிலோ கிடைக்கும். சராசரியாக ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் விலை கிடைக்கிறது. இந்தக் கணக்கில் கொத்தவரை மூலமாக 100 நாட்களில் 13 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.

200 கிலோ செடி அவரை!

3 மாதம்...60 சென்ட்...ரூ.50 ஆயிரம் !

செடி அவரை 70-ம் நாளில் பூவெடுத்து, 75-ம் நாளில் இருந்து பறிப்புக்கு வரும். நான்கு நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம், சராசரியாக 10 பறிப்புகள் செய்யலாம். ஒரு பறிப்புக்கு 20 கிலோ வீதம், 10 பறிப்புக்கும் சேர்த்து 200 கிலோ கிடைக்கும்.

ஒரு கிலோவுக்கு சராசரியாக 30 ரூபாய் விலை கிடைக்கிறது. இந்தக்கணக்கில் செடி அவரை மூலமாக நான்கு மாதங்களுக்குள் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அறுவடை முடிந்த பிறகு நிலத்தைத் தயார் செய்து அடுத்த சாகுபடியைத் தொடங்கி விடலாம்.’

30 ஆயிரம் ரூபாய் லாபம் !

சாகுபடிப் பாடம் முடித்த கிருபாகரன் நிறைவாக, ''நான் இயற்கை முறையில சாகுபடி செய்றதால வேலூர்ல இருக்குற பசுமை அங்காடிக்குதான் விற்பனைக்காக கொடுக்கிறேன். அதனால எனக்கு நிலையான விலை கிடைக்குது. வெண்டை, செடி அவரை, கொத்தவரை மூலமா சராசரியா நாலு மாசத்துக்குள்ளாவே 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. செலவுபோக, 30 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம லாபம்'' என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு, கிருபாகரன்,
செல்போன்: 9486173273.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism